கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019
இப்போது வழுக்கைக்கு வயதில்லாமல் போய் விட்டது. தலையில் வழுக்கை விழுந்து விட்டால் வயதான தோற்றத்தைக் காட்டும். அதனால், இளைஞர்கள் வாழ்க்கையே முடிந்து விட்டதைப் போலக் கவலைப்படுகிறார்கள்.
வயதானவர்கள் கூட வழுக்கையை மறைக்கப் பாடாய்ப் படுகிறார்கள். வழுக்கைக்குக் கீழே முளைக்கும் முடியை வளர்த்து மேலே இழுத்து வழுக்கை விழுந்த இடத்தை மூடிக் கொள்கிறார்கள்.
வயதானவர்களுக்கு வழுக்கை விழுவது இயல்பு. ஆனால், இளைஞர்களுக்கு வழுக்கை விழுவதற்கு முக்கியக் காரணம் இன்றைய வாழ்க்கை நிலை. உணவு முறையில் மாற்றம், நாகரிகம் என்னும் பெயரில் பல்வேறு வேதிப்பொருள்களைத் தலையில் தேய்த்தல், தலைக்கு முறையாக எண்ணெய் தேய்க்காமை, எண்ணெய்க் குளியல் இல்லாமை, மனவுளைச்சல், நல்ல தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால், முடிகள் உதிர்ந்து இளமையிலேயே தலை வழுக்கையாகி விடுகிறது.
மேலும், தலையை முறையாகப் பராமரிக்காமல் விடுவதால், பொடுகு, தோல் நோய்கள், பேன் போன்றவை நமக்குத் தொல்லையைத் தரும். சரி. வெளித் தலையில் ஏற்படும் இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வழிகள் உண்டா என்றால், நம் மூலிகை மருத்துவத்தில் எளிமையான வழிகள் பல உள்ளன என்பது தான் உண்மை.
தலையில் உண்டாகும் தோல் நோய்களைக் குணப்படுத்த, கொத்தமல்லி விதையுடன் கோஷ்டத்தைச் சேர்த்து அரைத்துத் தலையில் உள்ள தோலில் படும்படி நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். வெண்டைக்காயை அரைத்துத் தலையில் தடவி, அரைமணி நேரம் கழித்துக் குளித்தால், பொடுகுத் தொல்லை மறையும்.
துளசிச் சாற்றைத் தலையில் தடவினால் பேன்கள் ஒழியும். அல்லது துளசியிலையைத் தலைக்கடியில் வைத்துப் படுத்தாலே பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம். ஊமத்தைப் பிஞ்சை அம்மியில் வைத்து அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் முடிகள் வளரும்.
கீழாநெல்லி வேரைத் தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சித் தலையில் தேய்த்து வந்தாலும், சொட்டை விழுந்த இடத்தில் முடிகள் வளரும்.
நெல்லிக்காய், கரிசாலை, செம்பருத்திப்பூ, கறிவேப்பிலை, மருதாணி ஆகியவற்றை அரைத்துத் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துக் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, தினமும் தேய்த்து வந்தால், முடி உதிர்தல் நிற்பதுடன், கருமையாகவும் இருக்கும்.
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் முக்கியமானவை தான். அவற்றை முறைப்படி பராமரித்தால் தான் நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
மரு.சு.சத்தியவாணி எம்.டி.,
வளசரவாக்கம், சென்னை-87.