வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். பயிர்களைக் காப்பதில் வேலிக்கு முக்கியப் பங்குண்டு. விவசாயத்தில் விதைப்பது முதல் அறுவடை வரையில் உழவடைச் செலவுகள், இடுபொருள் செலவுகள், பயிர்ப் பாதுகாப்புச் செலவுகள், கூலி என்னும் பல தலைப்புகளில், கொஞ்சம் கொஞ்சமாக மூலதனத்தை இட்டுக்கொண்டே இருக்கிறோம். பாதுகாப்பான முறையில் பயிரை வளர்த்து விளைச்சலைக் கண்டால் தான் இந்தச் செலவுத் தொகை மற்றும் இலாபத்தைக் காண முடியும்.
பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பயிரைக் காப்பதைப் போல, ஆடுகள் மாடுகள் போன்ற கால்நடைகளிடம் இருந்தும் பாதுகாக்க வேண்டும். இதற்கு வேலி மிகமிக அவசியம். வசதியிருந்தால் இன்று நடைமுறையில் உள்ள நவீன வேலிகளை அமைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த நவீன வேலிகளை விட இயற்கை வேலி பல வகைகளில் விவசாயிகளுக்கு நன்மை தருவது.
பெரியளவில் பணத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. நவீன வேலிகளை விடப் பல்லாண்டுகள் நீடித்து இருக்கும். துணை வருவாயைக் கொடுக்கும். நல்ல சூழலுக்குத் துணையாக நிற்கும். தீவனத் தேவையைச் சமாளிக்க உதவும். பாகல், சுரை, புடல் போன்ற கொடிவகைப் பயிர்களின் படர் கொம்பாக இருக்கும். கீழே காய்ந்து உதிரும் தழைகள் நிலத்துக்கு உரமாகப் பயன்படும்.
இயற்கை வேலியை அமைக்க, சூபாபுல், கொடுக்காய்ப்புளி, சீமையகத்தி, மருதாணி, காட்டாமணக்கு, கிளுவை, செம்பருத்திப் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஒன்றிரண்டு மாதங்கள் வரையில் இவற்றைப் பாதுகாத்து வளர்த்து விட்டால், இவை நாளாக நாளாக நன்கு பருத்து அடர்ந்த இயற்கை வேலியாகி விடும். சூபாபுல், கொடுக்காய்ப்புளி, சீமையகத்தி ஆகியன இயற்கை வேலியாகவும், ஆடுகளுக்குத் தீவனமாகவும் பயன்படும்.
மருதாணி இலைகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்து காய வைத்து விற்கலாம். காய்ந்த ஒரு கிலோ மருதாணி இலையின் விலை சுமார் ஐம்பது ரூபாய். இதைப்போல, காய்ந்த ஒரு கிலோ செம்பருத்திப் பூக்களின் விலை சுமார் முந்நூறு ரூபாயாக உள்ளது. தினமும் முப்பது பூக்களைப் பூக்கும் நூறு செம்பருத்திச் செடிகள் இருந்தால் அன்றாடம் முந்நூறு ரூபாய் வருமானமாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும். இதற்காக எந்தச் செலவும் செய்யப் போவதில்லை.
ஆகவே, விவசாயிகள் பயிரைக் காக்கவும், சூழலைக் காக்கவும், துணை வருவாயைப் பெருக்கவும், நிலத்தைச் சுற்றி இயற்கை வேலி அமைப்பதில் கவனம் செலுத்தலாம். இந்த மழைக்காலம் இயற்கை வேலியை அமைக்க மிகவும் ஏற்றது என்பதால், செலவில்லாத மற்றும் பயனுள்ள இயற்கை வேலியை அமைப்போம்; பயனடைவோம்!
ஆசிரியர்