அமுதம் மகளிர் சுய உதவிக்குழுத் தலைவி இரா.சங்கீதா பெருமிதம்
கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020
மகளிர் சுய உதவிக் குழு திட்டம் அறிமுகமான பிறகு, பெண்களின் வாழ்க்கையில் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பயிற்சி, கடனுதவி, நிதியுதவி என வழங்கி, அவர்களை முன்னேற்றுவதில் அரசு அக்கறை காட்டி வருகிறது. குறிப்பாக ஊரகப் பெண்களின் வளர்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுத் திட்டத்துக்கு முக்கியப் பங்குண்டு. வெய்யில், மழையில் காடு மேடென அலைந்து வந்த கிராமிய மகளிர், இவ்வகையில், தருமபுரி மாவட்டம், மூக்கனஹள்ளி இரா.சங்கீதா, அமுதம் மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாக உள்ளார். இவர் சிறுதானியங்களில் சத்தான, சுவையான தின்பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அண்மையில் இவரைச் சந்தித்துப் பேசினோம்.
“நானு அமுதம் மகளிர் குழு தலைவியா இருக்கேன். எங்க குடும்பம் விவசாயக் குடும்பம். அதனால என் மாமனார் விவசாயம் சார்ந்த விவரம் எதுவும் வேணும்ன்னா, பாப்பாரப்பட்டியில இருக்கும் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்குத் தான் போவார். இந்த வகையில அந்த நிலையத்தோட அவருக்கு நல்ல அறிமுகம் உண்டு.
இந்த நிலையில அந்த வேளாண்மை அறிவியல் நிலையத்துல, சிறுதானியத் தின்பண்டங்களைத் தயாரிக்கும் பயிற்சி நடக்கப் போகுது; அதுல நிய்யும் கலந்து பயிற்சி எடுத்துட்டு வாம்மான்னு சொன்னாரு. அதனால, அங்க போயி, சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரிப்பைப் பத்தி ஒரு மாசம் பயிற்சி எடுத்துட்டு வந்தேன். இனிப்புப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சியைத் தான் குடுத்தாங்க. அப்புறம் பேக்கிங், லேபிள் பயிற்சியையும் பாப்பாரப்பட்டியில தான் குடுத்தாங்க. எங்க குழுவுல பதினஞ்சு உறுப்பினர்கள் இருக்காங்க. அதுல அஞ்சு பேர் என்னைய மாதிரி ஒரு மாசம் பயிற்சி எடுத்தாங்க.
இந்தப் பயிற்சியை ஆதாரமா வச்சு 2015 ஆண்டுல சிறுதானிய உணவுப் பொருள்களைத் தயாரிக்கத் தொடங்குனோம். இராகி, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, கம்பு எல்லாமே இந்தப் பகுதியில விளையும் பொருள்கள் தான். இந்தத் தானியங்களை நாங்க அரிசியா வாங்கி வச்சுக்கிருவோம். இதுல, முறுக்கு, லட்டு, கேக், ரொட்டி செய்யிறோம். சத்துமாவைத் தயாரிக்கிறோம். இனிப்புப் பொருள்கள்ல நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் தான் சேர்ப்போம். அதைப்போல, தவிட்டு எண்ணெய்யைத் தான் பயன்படுத்துறோம்.
இந்தப் பொருள்களைத் தயாரிக்க உதவியா, சிறுதானிய அரவை எந்திரம் வச்சுருக்கோம். கல், தூசியை நீக்குறது, உமியை நீக்குறது, தரம் பிரிக்கிறது, மாவு அரைக்கிறது, சலிக்கிறது, சிப்பம் தைக்கிறது எல்லாமே எந்திரம் தான். ஒருமுறை தருமபுரி மாவட்ட மகளிர் திட்டத்துல இருந்து எங்க தயாரிப்பைப் பார்க்க வந்தாங்க. நாங்க நல்ல முறையில செயல்படுறதைப் பாத்துட்டு, ஒரு இலட்ச ரூபா பதிப்புள்ள பிஸ்கட் தயாரிப்பு ஓவன் மற்றும் மாவு பிசையும் கருவியைக் குடுத்தாங்க.
தொடக்கத்துல பொருள்களை விற்கிறது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்துச்சு. அப்புறம் பொருள்களோட தரம், சுவை நல்ல இருப்பதுனால, ஏற்கெனவே எங்க பொருள்களை வாங்கிச் சாப்பிட்டவங்க அடுத்தவங்ககிட்ட சொல்றதுனால கொஞ்சம் கொஞ்சமா விற்பனை வாய்ப்புக் கூடிச்சு. எங்க பொருள்களைக் கண்காட்சிகள், பொருள்காட்சிகள், சென்னையில் இருக்கும் அன்னை தெரசா மகளிர் குழு அரங்கம் மூலமா விற்பனை செய்யிறோம்.
நித்தமும் தருமபுரி, ஒட்டப்பட்டி உழவர் சந்தைகள்ல 150 மில்லி அளவுல சத்துக்கஞ்சி விற்கிறோம். இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. காலையில டீ சாப்பிடுறதுக்குப் பதிலா நிறைய மக்கள் இதைக் குடிச்சிட்டுப் போறாங்க. இந்த வாய்ப்பு, பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் தான் எங்களுக்குக் கெடச்சது.
2017 ஆம் ஆண்டுல தருமபுரி மாவட்ட ஆட்சியரா இருந்த விவேகானந்தன் அய்யா, எங்கள் பொருள்களின் தரத்தைப் பார்த்துட்டு, எங்களுக்கு அருமையான விற்பனை வாய்ப்பைக் குடுத்தாங்க. அதாவது, 2017 ஜனவரில் இருந்து ஏப்ரல் வரைக்கும், தருமபுரி, பென்னாகரம், அரூர், பாலக்கோடு ஒன்றியங்கள்ல இயங்கக் கூடிய ஒன்றியப் பள்ளிகளில் படிக்கும் 200 மாணவர்களுக்கு எங்க பொருள்களைக் கொடுக்கச் சொன்னாங்க.
இந்த வகையில ஒரு மாணவருக்கு, 22 ரூபாய் மதிப்பிலான தின்பண்டங்களைக் கொடுத்தோம். அதாவது, 200 மில்லி சிறுதானியக் கஞ்சி, 2 பிஸ்கட், 50 கிராம் காரம் குடுத்தோம். இந்த வாய்ப்பு மூலம், அங்கே வேலை செஞ்ட்டு இருந்த ஆசிரியர்களும் எங்களோட தரமான உணவுப் பொருள்களை விரும்பி வாங்குனாங்க.
இப்போ, எங்க பொருள்களை, தருமபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், காஞ்சிபுரம், சென்னை, பெங்களூருன்னு பல முக்கிய நகரங்களுக்கு மொத்தமா அனுப்பி வைக்கிறோம். அதனால் அதிகமா உற்பத்தி செய்ய வேண்டியிருக்கு. இதன் மூலம் ஒரு பத்துப் பேருக்கு வேலை குடுக்குறோம். இது எங்களுக்கு சந்தோசமான விஷயம். இவங்க நல்ல முறையில வேலை செஞ்சு எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்குறாங்க.
இதைத் தொடங்குறதுக்கு முன்னால நானு தையல் வேலை செஞ்சிட்டு இருந்தேன். என் கணவர் லாரி வேலை செஞ்சாரு. இப்போ அந்த வேலைகளை விட்டுட்டு முழுசா இந்த வேலையைச் செஞ்சு, கவலையில்லாம, நிம்மதியா, மனநிறைவா இருக்கோம். இதுக்கு மூல காரணம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் எனக்குக் கொடுத்த பயிற்சி தான். அவங்களுக்குத் தான் இந்த நேரத்துல நன்றி சொல்லணும்’’ என்றார்.
செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமை தான் நமது செல்வம் என்னும் பொன்மொழிக்கு ஏற்ப, திறம்பட இயங்கி வரும் சங்கீதா மற்றும் அவரது குழுவினர், உணவுப்பொருள் உற்பத்தித் துறையில் மேலும் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெற்றோம்.
பொம்மிடி முருகேசன்