“அண்ணே.. அமுதக் கரைசல்ன்னா என்னண்ணே?..’’
“தம்பி.. அமுதக் கரைசல் உடனடி பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.. சில நாட்களில் இதைத் தயாரித்து விடலாம்.. இது, இயற்கை விவசாயிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் இடுபொருள்களில் ஒன்று..
“இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’
“மாட்டுக் கோமியம் ஒரு லிட்டர், மாட்டுச்சாணி ஒரு கிலோ, பனை வெல்லம் அல்லது கரும்பு வெல்லம் 250 கிராம், நிலத்து மண் ஒரு கைப்பிடி, பயறு மாவு 100 கிராம், நீர் 10 லிட்டர் வேணும் தம்பி.. வெல்லத்துக்குப் பதிலாக, வீணாகப் போகும் இனிப்புப் பழங்களை, ஒரு கிலோ எடுத்து, நைலான் பையில் போட்டுக் கட்டி, கோமியம் மற்றும் சாணக் கரைசலில் வைத்து விட்டால் நன்கு நொதித்துச் சிறந்த பலனைக் கொடுக்கும்..’’
“சரிண்ணே.. இதைத் தயாரிக்கும் முறையைச் சொல்லுண்ணே..’’
“முதலில் மாட்டுச் சாணத்தை நீரில் கரைக்க வேண்டும்.. பிறகு, கோமியத்தை ஊற்றிக் கலக்க வேண்டும்.. அடுத்து, நிலத்து மண், பொடியாக்கிய வெல்லம், பயறு மாவு ஆகியவற்றை இந்தக் கலவையில் சேர்த்து நன்கு கலக்கி மூடி வைத்து விட்டால், இந்தக் கலவை ஐந்து நாட்களில் நொதித்து அமுதக் கரைசலாக மாறிவிடும்..’’
“செய்முறை ரொம்பச் சுருக்கமா இருக்கு.. சரி.. இதை எப்பிடிண்ணே பயன்படுத்துறது?..’’
“தம்பி.. பத்து லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் அமுதக் கரைசல் வீதம் கலந்து, கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் மூலம் பயிர்களில் தெளிக்கலாம்.. இல்லையெனில் ஏக்கருக்கு 60-100 லிட்டர் அமுதக் கரைசலைப் பாசன நீருடன் கலந்தும் விடலாம்.. நீருடன் கலக்காமல் தெளித்தால் இலைகள் கருகி விடும்..’’
“அமுதக் கரைசலோட பயன்கள் என்னண்ணே?..’’
“பயிர்களுக்குத் தழைச்சத்தை இலைகள் வழியாக அல்லது வேர்கள் மூலமாகக் கொடுக்கும்.. மேலும், பயிர்களைத் தாக்கும் பூச்சிகளையும் விரட்டுவதால், பூச்சி விரட்டியாகவும் அமுதக் கரைசல் பயன்படுகிறது..’’
“ரொம்ப நல்லதுண்ணே..’’
பசுமை