கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019
நூறு ஆண்டுகளாக நாம் ஆமணக்கைச் சாகுபடி செய்கிறோம். எகிப்தியர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிட்டு வருகிறார்கள். ஆமணக்கில் 50%க்கும் மேல் எண்ணெய் இருப்பதால், இது முக்கிய எண்ணெய் வித்தாக உள்ளது. இந்த எண்ணெய், மகிழுந்து மற்றும் விமான இயந்திரத்தின் உராய்வைத் தடுக்க, சோப்பு, காகிதம், அச்சு மை, வண்ணப்பூச்சு மற்றும் நெகிழிப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. வெடிமருந்துப் பொருள்கள் தயாரிப்பில், சாயப் பட்டறையில், தோல் ஆலைகளில் ஆமணக்கு அதிகளவில் பயன்படுகிறது.
மூட்டுவலிக்கு, குடல் தூய்மைக்கு, மலத்தை நீக்க, சுளுக்கை அகற்ற, வீக்கத்தைக் குறைக்க, எதிர்ப்புத்திறன் பெருக, பொடுகு, தேமல் நீங்க, முதுமையைக் குறைக்க என, மருத்துவத்திலும் ஆமணக்கின் பயன் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இப்போது புற்று நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
இந்தியாவில் தான் ஆமணக்கு அதிகளவில் விளைகிறது. தனிப்பயிராக இறவையிலும் மானாவாரியிலும் பயிரிட ஏற்ற வகையில் வீரிய ஒட்டு ஆமணக்கு உள்ளது. குறைந்த செலவில், குறைந்த நீரில் வறட்சியைத் தாங்கி வளர்ந்து, நல்ல விலைக்குப் போகும். இறவைக்குச் சித்திரைப் பட்டமும், மானாவாரிக்கு ஆடிப்பட்டமும் ஏற்றவை. தமிழ்நாட்டில், சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, பெரம்பலூர் மாவட்டங்களில் 20,000 எக்டரில், சித்திரை, ஆடி, ஐப்பசிப் பட்டங்களில் விளைகிறது.
உலகளவில் 85-90% ஆமணக்கு எண்ணெய்த் தேவையை நிறைவு செய்யும் இந்தியா, இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 கோடியை வருமானமாக ஈட்டுகிறது. ஆமணக்கின் தேவை கூடிக்கொண்டே வருவதால், உலக மற்றும் இந்தியச் சந்தையில் இதன் விலை சீராகவும், நிலையாகவும் உயர்ந்து வருகிறது.
சாகுபடி முறை
உழவும் விதைப்பும்: நிலத்தை நன்கு உழ வேண்டும். செம்மண் நிலத்தில் கோடையில் உளிக்கலப்பையால் ஆழமாக உழ வேண்டும். இதனால், மேல்மண், அடிமண் இறுக்கம் அகன்று, வேர்கள் நன்கு வளரும்; களைகள் கட்டுக்குள் இருக்கும்; பூசணம் மற்றும் கூட்டுப்புழுக்கள் அழியும். இந்த உழவைத் தொடர்ந்து 2-3 முறை குறுக்குழவு செய்ய வேண்டும்.
விதைப்புக் காலம்: மானாவாரிக்கு ஆடிப்பட்டமும், இறவைக்கு வைகாசி, கார்த்திகைப் பட்டங்களும் சிறந்தவை. மேலும், பருவமழை காலங்கடந்து பெய்தால், மானாவாரியில் எந்தப் பயிரையும் சாகுபடி செய்வது பயனுள்ளதாக இருக்காது. இந்த நேரத்தில் ஆமணக்கை, இடைக்கால மற்றும் அவசரக்காலப் பயிராக ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையிலும் விதைத்து நல்ல பயனைப் பெறலாம்.
விதைத் தேவை: சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 2 கிலோ விதை போதும். குத்துக்கு இரண்டு விதைகளை விதைக்க வேண்டும். விதைத்த 15-20 நாட்களில் இரண்டு செடிகளில் ஒன்றைக் களைத்துவிட வேண்டும்.
உரம்: இறவைப் பயிருக்கு எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் மற்றும் 135:65:65 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தில், 45:65:21 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 90 கிலோ தழைச்சத்தையும், 44 கிலோ சாம்பல் சத்தையும் இரண்டாகப் பிரித்து, 30 மற்றும் 60 ஆம் நாளில் இட வேண்டும்.
மானாவாரிப் பயிருக்கு எக்டருக்கு 75:35:35 தழை, மணி, சாம்பல் சத்தில், 37.5:35:17.5 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 37.5 கிலோ தழைச்சத்தையும், 17.5 கிலோ சாம்பல் சத்தையும் மேலுரமாக, மழை பெய்யும் போது, அதாவது, 40-60 நாட்களில் இட வேண்டும்.
பராமரிப்பு: விளைச்சலைக் கூட்ட, சரியான பயிர் எண்ணிக்கை அவசியம். வீரிய ஒட்டு ஆமணக்கில், சுற்றுச்சூழல் மற்றும் உழவியல் உத்திகளைச் சார்ந்து இந்தக் கணக்கு மாறுபடும். பயிர் இடைவெளி குறைவாக இருந்தால் செடிகள் உயரமாக வளர்ந்து சாய்ந்து விடும். அதிகமாக இருந்தால் களைகள் அதிகமாகும்; பூக்கும் காலம் தாமதமாகும்; பக்கக் கிளைகள் அதிகமாகும். எனவே, செடிகள் சுற்றுப்புறச் சூழலைத் தாங்கி, நீர், உரம் மற்றும் வெளிச்சத்தைப் பெற, சரியான பயிர் இடைவெளி அவசியம்.
அறுவடை
வீரிய ஒட்டு ஆமணக்கு, பல கிளைகளைக் கொண்ட செடியாகும். இது 4-5 தொடர் வரிசை முறையிலான காய்க் குலைகளை, ஆறு மாதம் வரையில், ஒரு மாத இடைவெளியில் உற்பத்தி செய்யும். முதல் குலையானது விதைத்த 100-110 நாட்களில் அறுவடைக்கு வரும். அடுத்தடுத்து ஒரு மாத இடைவெளியில் அறுவடை செய்யலாம். இதைப்போல, குறுகிய மற்றும் நடுத்தர வயதுள்ள செடிகளில் மூன்று முறையும், நீண்ட காலப் பயிர்களில் 4-5 முறையும் அறுவடை செய்யலாம். இவ்வகையில், மானாவாரியில் ஏக்கருக்கு 1,000 கிலோ, இறவையில் 1,500 கிலோ மகசூலைப் பெறலாம்.
ஊடுபயிர் சாகுபடி
ஒட்டு ஆமணக்கு நீண்ட காலப் பயிராக, அதிக இடைவெளியில் பயிரிடப்படுகிறது. தொடக்கத்தில் இதன் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். எனவே, ஆமணக்கில் ஊடுபயிரைப் பயிரிடலாம். வருமானத்தைப் பெருக்க, நிலத்தின் பயன்பாட்டுத் திறனைக் கூட்ட, மண்வளத்தை மேம்படுத்த உதவுவது ஊடுபயிர். இவ்வகையில், ஆமணக்குடன் பயறு வகைகளை ஊடுபயிராகப் பயிரிட்டால், நிரப்புத்தன்மை விளைவும், தானியப் பயிர்களை ஊடுபயிராகப் பயிரிட்டால், போட்டி விளைவும் எற்படும்.
ஆமணக்கை ஆடியில் தனிப்பயிராக அல்லது ஊடுபயிராக அல்லது கலப்புப் பயிராக, சிறு தானியம் அல்லது பயறு வகைகளுடன், மானாவாரியிலும், இறவையிலும் பயிரிடலாம். தோட்டக்கலைப் பயிர்களான மஞ்சள், மிளகாய், வெள்ளரியில் ஊடுபயிராக வளர்க்கலாம்.
பயறு வகைகளின் நன்மைகள்
பயறு வகைகளைச் சாகுபடி செய்தால், அப்பயிர்களின் வேர் முடிச்சுகளில் இருக்கும் தழைச்சத்து, ஆமணக்குச் செடிகளுக்குச் சீராகக் கிடைக்கும். பயறு வகைகளின் வேர்க்கசிவு மற்றும் வேர்முடிகள் மூலம் மண்ணின் கட்டமைப்பு மேம்படும். அறுவடைக்குப் பின் இப்பயிர்களை, நிலத்திலேயே மட்கச் செய்தால், மண்ணின் அமிலச்செறிவு மாறாத் திறனும் நீர்ப்பிடிப்புத் திறனும் கூடும். களைகள் குறையும். நிலத்தில் ஈரப்பதமும், நுண்ணுயிர்களும் பெருகும்.
ஊடுபயிர் சாகுபடியில் கவனிக்க வேண்டியவை
ஆமணக்கைத் தனிப்பயிராக விதைக்க, குறைந்த மற்றும் நடுத்தர வயதுள்ள (YRCH 1) (YRCH2 & DCH519)ஆமணக்கு வகைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடிக்கு, நடுத்தர வீரிய ஒட்டு இரகங்களையே (YRCH2 & DCH 519) தேர்வு செய்ய வேண்டும்.
முனைவர் பெ.கதிர்வேலன்,
முனைவர் எஸ்.ஆர்.வெங்கடாச்சலம், மரவள்ளி மற்றும் ஆமணக்கு
ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம்-636119.