விவசாயிகள் பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி ஆலோசனை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வளிமண்டல கார்பன்டை ஆக்ஸைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைகிறது. இதையே புவி வெப்பமடைதல் என்கிறோம். இதனால், பூமியின் பருவநிலை, தட்பவெப்ப நிலை, இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களே காலநிலை மாற்றம் அல்லது பருவநிலை மாற்றம் என்பதாகும்.
வேளாண்மையில் பருவகால மாற்றத்தின் தாக்கங்கள்
சரியான பருவத்தில் மழை பெய்யாததால் பயிர்களில் மகசூல் பாதிக்கப்படுகிறது. மழை அதிகமாகப் பெய்து தேங்கும் நீரினாலும் மகசூல் பாதிக்கப்படுகிறது. மீத்தேன் வாயு வெளியேறிச் சுற்றுச்சூழல் கெடுகிறது. இதனால், மானாவாரிப் பயிர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பருவநிலை மாற்றத்தைச் சமாளித்து, சாகுபடியைத் திறம்பட மேற்கொள்ள, பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
செம்மை நெல் சாகுபடி, நேரடி நெல் விதைப்பு, பயிர்க் கழிவுகளை எரிக்காமல் மறுசுழற்சி செய்வது, பண்ணைக் குட்டைகளை அமைப்பது, துல்லியப் பண்ணையம் அமைப்பது, ஆழச்சால், அகலப்பாத்திகளை அமைப்பது, தடுப்பணைகளைக் கட்டுவது, பசுந்தாள் பயிர்களைப் பயிரிடுவது, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது, குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களை சாகுபடி செய்வது, வறட்சி மற்றும் வெள்ளத்தைத் தாங்கி வளரும் இரகங்களைப் பயிரிடுவது, முறையான பயிர்ச் சுழற்சியை மேற்கொள்வது, குறுகிய காலப் பயிர் இரகங்களைத் தேர்வு செய்வது,
மாற்று மின்சக்திகளான சூரிய மின்சக்தி, காற்று மின்சக்தி, கடல் அலை மின்சக்தி, நீர்மின் சக்தி, புவி வெப்ப மின்சக்தி மற்றும் உயிரி எரிபொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது போன்ற முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.