பப்பாளி சாகுபடியில் ஒரு மரத்து வருமானம் 6,500 ரூபாய்!

பப்பாளி சாகுபடி DSC00044

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2016

வீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் விளையும் பொருள்களிலும் தொடர்கிறது. இதனால், இந்தப் பொருள்களை உணவாக எடுத்துக் கொள்ளும் மக்கள், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, நஞ்சில்லா உணவு மீதான நாட்டம் மக்களிடம் அதிகமாகி வருகிறது. மக்கள் நலச் சிந்தனையாளர்களும் நஞ்சில்லா உணவு உற்பத்தியை வலியுறுத்தியும் செயல்படுத்தியும் வருகின்றனர்.

அந்த வகையில், நமது பாரம்பரிய வேளாண்மையில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார், கரூர் மாவட்டம், சின்னத் தாராபுரம் வேட்டையார் பாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரும், ஜெயகவின் இயற்கை வேளாண் பண்ணையின் உரிமையாளருமான பெ.மனோகரன். நஞ்சென்று சொன்னாலே தூரமாய்ப் போ என்னுமளவில், தன்னுடைய பண்ணையில் இயற்கை வேளாண்மையைச் செழிக்கச் செய்து வருகிறார். அண்மையில் அவருடன் பேசினோம். அப்போது அவர், இயற்கை முறையில் பயிரிட்டுள்ள பப்பாளி சாகுபடியைப் பற்றிக் கூறினார்.

“ஒரு காலத்துல பப்பாளின்னா அந்தப் பக்கம் ஜனங்க திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாங்க. அந்தளவுக்கு அது கேட்பாரற்ற பொருளா இருந்துச்சு. ஆனா பப்பாளியில நெறைய மருத்துவக் குணங்கள் இருக்குன்னு தெரிஞ்சதும் இந்தப் பழத்தை எல்லாரும் இப்போ விரும்பிச் சாப்பிடுறாங்க. அதுலயும் நகரத்து ஜனங்க பப்பாளியை அன்றாடம் சாப்பிடுறாங்க. பப்பாளிக் காய்கள்ல இருந்து பாலும் எடுக்கப்படுது. பாலையும் பழத்தையும் கொடுக்குறதுனால, பப்பாளி முக்கியமான பணப்பயிர் சாகுபடியா மாறியிருக்கு.

அதனால எங்கேயோ ஒரு வீட்டுல, ஒரு தோட்டத்துல ஒத்த மரமா நின்னுக்கிட்டு இருந்த பப்பாளி மரம், தென்னந்தோப்பு, மாந்தோப்பு மாதிரி, இன்னிக்குத் தோப்புகளா மாறிக்கிட்டு வருது. மக்களுக்கு விருப்பமான நெறம், எடுப்பான தோற்றம், அதிகமான எடையுள்ள பழங்களைத் தரக்கூடிய புது இரகங்களும் இப்போ வந்துருக்கு. அதனால, நெறைய விவசாயிகள் தனிப்பயிரா பப்பாளியைச் சாகுபடி செய்யிறாங்க.

மாவுப்பூச்சித் தாக்குதல், வளையப்புள்ளி நச்சுயிரித் தாக்குதல் வந்துட்டா பப்பாளியில பெருத்த சேதம் வந்துரும். அப்புறம், நூற்புழுத் தாக்குதல், வேரழுகல் நோய் வர்றதுக்கும் வாய்ப்பிருக்கு. அதனால, கொஞ்சமா சாகுபடி செஞ்சு ஒரு அனுபவத்தைப் பார்த்துக்கிறலாம் அப்பிடீன்னு நெனச்சு, ஒரு இருபது சென்ட் நெலத்துல ரெட் லேடி, கோ.7 ஆகிய ரெண்டு இரகங்கள  சாகுபடி செஞ்சிருக்கோம். இப்போ கோ.8ன்னு ஒரு இரகம் வந்துருக்கு. இது நல்லா காய்க்குது.

இதுக்காக ஏழடி இடைவெளியில ஒரு அடி சதுரத்துல குழிகளை எடுத்து ஒருவாரம் ஆறப் போட்டோம். அப்புறம் குழிக்கு, மட்குன குப்பை, மண்புழு உரம் அஞ்சு கிலோ, ஆசோஸ்பயிரில்லம் இருபது கிராம், பாஸ்போ பாக்டீரியா இருபது கிராம்ங்கிற கணக்குல போட்டு, நடவுநாள் காலையில குழிகள்ல தண்ணிய விட்டோம். குழிகள்ல விட்ட தண்ணி இஞ்சுனதும் அன்னிக்குச் சாயங்காலமே கன்னுகள நட்டுட்டோம்.

பப்பாளிக் கன்னுகள வெய்யில் குறைவான சாயங்கால நேரத்துல நடுறது தான் நல்லது. பப்பாளிக் கன்னோட வேர்ப்பகுதி மூடுற அளவுக்கு மட்டும் மண்ணைப் போட்டா போதும். மத்த மரக்கன்னுகளுக்குப் போடுறதைப் போல, தண்டுப் பாகத்துல மண்ணைப் போடக் கூடாது.

தொடர்ந்து பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை இருநூறு லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனத் தண்ணியோட கலந்து விடுறோம். அப்புறம் ஒரு லிட்டர் தண்ணிக்கு முப்பது மில்லி பஞ்சகவ்யாங்குற கணக்குல கலந்து தெளிக்கிறோம். இப்பிடித் தெளிக்க, ஒரு ஏக்கருக்குப் பத்து லிட்டர் பஞ்சகவ்யா போதும்.

இதுல முக்கியமான செய்தி, பப்பாளியில ஆண் மரம், பெண் மரம், இருபால் மரம்ன்னு இருக்கு. இருபது பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் இருந்தா போதும். ஆனா, மரம் நல்லா வளர்ந்து பூக்குற சமயத்துல தான் ஆணா பெண்ணான்னு நாம பார்க்க முடியும். ஆண் மரங்கள் காய்க்காது. ஆனா, இருபால் மரங்கள் நல்லா காய்க்கும். எங்க நெலத்துல இருபால் மரங்கள் அதிகமா இருக்கு.

பப்பாளி மரங்கள மாவுப்பூச்சிகள் அதிகமா தாக்கும். இதைக் கட்டுப்படுத்த, பத்து லிட்டர் தண்ணிக்கு நூறு மில்லி வேப்பெண்ணெய் அப்பிடீங்கிற கணக்குல, ஒட்டும் திரவமா காதி சோப்பையும் கலந்து தெளிக்கலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள, அசிரோ ஃபேகஸ் பப்பாயாங்கிற ஒட்டுண்ணிகள பப்பாளித் தோட்டத்துல விடலாம். நல்லா புளிச்ச மோர் ரெண்டு லிட்டர், அரைக்கிலோ மைதா மாவு, நூறு கிராம் உப்பை நூறு லிட்டர் தண்ணியில கலந்து தெளிக்கலாம்.

அடுத்து, பப்பாளியைத் தாக்குற மோசமான நோய், பப்பாளி வளையப்புள்ளி நோய். இது வைரஸ்ங்கிற நச்சுயிரியால வரக்கூடியது. இந்த நோய்க்கு உள்ளான மரத்து இலைகள் வெளிர் மஞ்சளா மாறும்; இலைகள் சிறுக்கும்; அப்புறம் காஞ்சு போகும். இதுக்கான வைத்தியம் இதுவரைக்கும் இல்ல. அதனால, இந்த நோயால் தாக்கப்பட்ட மரங்களை உடனே நிலத்தை விட்டு அப்புறப்படுத்திறணும்.

வேரழுகல் நோய் வரும். நிலத்துல தண்ணி தேங்காம இருந்தா இந்த நோயிலிருந்து மரங்களைக் காக்கலாம். பப்பாளி மரங்களை நூற்புழுக்களும் தாக்கும். பப்பாளிக் கன்னுகளை நடுறதுக்கு முன்னால, குழிக்கு 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு, நாலு கிராம் சூடோமோனாசைப் போட்டா, நூற்புழுக்களோட தாக்குதலைத் தடுக்கலாம். பப்பாளி நிலத்தைச் சுத்தி ரெண்டு வரிசையில மக்காச்சோளத்தை நட்டு வச்சா, பூச்சி, நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்ன்னு சொல்றாங்க.

இப்பிடி, பப்பாளியைப் பாதுகாத்து வளர்த்தா எட்டு மாசத்துல காய்க்கத் தொடங்கும். ரெண்டு ஆண்டு வரைக்கும் நல்லா காய்க்கும். அப்புறம் காய்ப்புக் குறையும். அதனால ரெண்டரை ஆண்டுகள் வரைக்கும் வச்சுக்கிறலாம். அடுத்துப் புதுசா கன்னுகளை நடணும். பப்பாளிக் காயின் நுனியில வெளிர் மஞ்சள் கோடுகள் தெரிஞ்சா, பறிப்புக்கு உகந்த நிலைன்னு முடிவு பண்ணலாம். அஞ்சு கோடுகள் வந்துட்டா பறிச்சிறணும். இந்த நிலையில பறிச்சா தான் விற்பனைக்கு ஏத்ததா இருக்கும். ரெட்லேடி பழம் ஒன்னரையில இருந்து ரெண்டு கிலோ வரையில இருக்கும். கோ.7 ரெண்டுல இருந்து ரெண்டரை கிலோ வரைக்கும் இருக்கும்.

நம்ம பண்ணையில இயற்கை முறையில சாகுபடி செய்யிறதுனால ஒரு கிலோ பழம் பதினாறு ரூபான்னு குடுக்குறோம். கணக்கெடுத்துப் பார்த்ததுல, ஒவ்வொரு மரமும் ரெண்டு ஆண்டுல 6,500 வருமானம் கொடுத்துருக்கு. இன்னும் ஆயிரம் ரூபாய்க்குக் காய்க்கும். அதனால, விற்பனையில தேக்கம் இல்லாத அளவுல பப்பாளியைச் சாகுபடி செஞ்சா, நல்ல வருமானம் கிடைக்கும். பப்பாளி நிலத்துல ஆறு மாசம் வரையில தக்காளி, கொத்தவரை, தட்டைப்பயறை ஊடுபயிரா சாகுபடி செய்யலாம். இதனால இன்னும் கூடுதலான வருமானம் கிடைக்கும்’’ என்றார்.


பசுமை 

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading