இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவால் பாதுகாக்கப்பட்டு வரும் இராகவி என்னும் ஆறு வயது சிங்கவால் பெண் குரங்கும் இரவி என்னும் ஏழு வயது சிங்கவால் ஆண் குரங்கும் இணைந்து 25.5.2014 அன்று குட்டியொன்றை ஈன்றது. இதற்கு முன் 5 வயதான அஞ்சலி என்னும் சிங்கவால் பெண் குரங்குக்கு 1.5.2014 அன்று ஒரு குட்டியும் அமலா என்னும் சிங்கவால் குரங்குக்கு 23.8.2013 அன்று ஒரு குட்டியும் பிறந்துள்ளன. ஓராண்டு இடைவெளியில் சிங்கவால் குரங்குகள் மூன்று குட்டிகளை ஈன்றிருப்பது இப்பூங்காவில் இதுவே முதன் முறையாகும்.
இவற்றுடன் சேர்த்துப் பூங்காவிலுள்ள சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலுள்ள பூங்காக்களிலேயே அதிகளவில் சிங்கவால் குரங்குகளைப் பராமரிக்கும் உயிரியல் பூங்காவாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திகழ்கிறது. சிங்கத்தின் வாலின் நுனியில் கொத்தாக முடியிருப்பதைப் போல, இந்தக் குரங்குகளின் வால்களிலும் இருப்பதால், இவை சிங்கவால் குரங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. இக்குரங்குகள் பெரும்பாலும் சோலைக் காடுகளில் காணப்படுவதால் சோலை மந்திகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
சிங்கத்தின் பிடரியை ஒத்த முகம் மற்றும் வால், கருமை நிறம் ஆகியவற்றால், பெரும்பாலான மக்களைக் கவரும் இவ்வுயிரினம், அரிதான மற்றும் அழிந்து வரும் உயிரினமாகும். உலகிலேயே, மேற்குத் தொடர்ச்சி மலையில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டும் தான் சிங்கவால் குரங்குகள் வாழ்கின்றன.
இந்தக் குரங்குகளின் வாழிடங்களான பசுமை மாறாக் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு, தேயிலை, காபி போன்ற தோட்டப் பயிர்கள் வளர்க்கப்படுவதாலும் உடைபட்டுத் திட்டுத் திட்டாக மாறிப்போன வாழ்விடங்களாலும் இந்தக் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்தது மட்டுமில்லாமல், மரபியல் அடிப்படையிலும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன.
எனவே, இந்த உயிரினத்தை அழிவிலிருந்து காக்கும் பொருட்டு, அடைப்பிட இனப்பெருக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இனப்பெருக்க ஒருங்கிணைப்புப் பூங்காவாக மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டது. மைசூர், திருவனந்தபுரம் பூங்காக்கள் இனப்பெருக்கப் பங்கேற்புப் பூங்காக்களாகச் செயல்பட்டு வருகின்றன.
இத்திட்டப்படி, பார்வையாளர்கள் வருகை புரியாத இடத்தில், இயற்கையான காட்டுப் பகுதியில் இரண்டு அடைப்பிடங்களை ஏற்படுத்தி, ஒரு ஆண், இரண்டு பெண் குரங்குகளைக் கொண்ட இரண்டு குழுக்கள் இந்த அடைப்பிடங்களில் விடப்பட்டன. திறந்தவெளி அடைப்பிடங்களில் இயற்கையாக வளர்ந்துள்ள மரங்களுடன் ஆல், அரசு, மா, பலா, வேம்பு, நெல்லி, இலுப்பை, கொடுக்காப்புளி போன்ற மரங்களும் செடி கொடிகளும் நடப்பட்டன.
விலங்கு இல்லத்தில் குரங்குகள் நடமாடுவதற்கு வசதியாக, மரக்கிளைகள், கயிறுகள், பலகைகள் ஆகியவற்றைக் கொண்டு சுற்றுச்சூழலை வளமைப்படுத்தும் பணிகள் செய்யப்பட்டன. இப்படி, இயற்கையான சூழ்நிலையை ஒத்த வாழ்விடங்கள் அமையப் பெற்றதால் சிங்கவால் குரங்குகள் விரைவாக இனப்பெருக்கம் செய்கின்றன.
இத்திட்டத்தின் கீழ், முதன் முதலாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு, வால்பாறைச் சோலைக் காடுகளில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஒரு ஆணும் மூன்று பெண் சிங்கவால் குரங்குகளும், 1999 ஆம் ஆண்டு ஒரு பெண் குரங்கும் கொண்டு வரப்பட்டன. இந்த நான்கு குரங்குகளும் அவற்றின் வழித்தோன்றல்களும் இனப்பெருக்கம் செய்து இதுவரை 47 குட்டிகளை ஈன்றுள்ளன. அடைப்பிட இனப்பெருக்க முறையில், இந்த எண்ணிக்கை தேசிய அளவில் மிகப்பெரிய சாதனையாகும்.
இங்குப் பிறந்த சிங்கவால் குரங்குகள், விலங்குகள் பரிமாற்ற முறையில் குவஹாத்தி, சிம்லா, தில்லி, திருவனந்தபுரம், மைசூர், ஐதராபாத், பரோடா, கிண்டி ஆகிய இடங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. சிங்கவால் குரங்குகளை அழிவிலிருந்து காக்கும் பணியில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது. இத்தகவலை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குநர் மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
பசுமை