முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

முயல் Rabbit weaner group 6fa93ec9fdf8d50757b555207c372b4f scaled

லாபமிகு இறைச்சி முயல் வளர்ப்பு என்பது, அதன் விற்பனை வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு திறம்படச் சந்தைப்படுத்துவதில் தான் இருக்கிறது. சந்தை வாய்ப்பு இல்லாத எந்த ஒரு தொழிலும் வெற்றிகரமான தொழிலாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதே அளவுகோலில், இறைச்சி முயல் உற்பத்திப் பண்ணையாளர்கள், முயல் விற்பனை வாய்ப்புகளைப் பற்றி ஆலோசிக்காமல் அல்லது அதுகுறித்து எவ்வித முடிவும் எடுக்காமல் இருக்கும் நிலையில், இறைச்சியைச் சரியான முறையில் விற்க முடியாது. எனவே, இலாபம் வந்து சேர்வதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கும்.

இறைச்சிக்காக வளர்க்கப்படும் முயல்கள் அதிக எண்ணிக்கையில் குட்டிகளை ஈனும் திறனைப் பெற்றிருப்பதாலும், அவற்றுக்கு வேகமாக வளரும் தன்மை இருப்பதாலும், அவற்றை வளர்ப்பதால் இலாபம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். முயல் வளர்ப்பில் ஈடுபடும் குடும்பத்தினருக்கு நிலையான வருமானம் மற்றும் குடும்பத்தின் புரதத் தேவையைச் சரி செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.

பண்ணை முயல்கள், பன்னிரண்டு வாரங்களில் போதிய உடல் எடையைப் பெற்று விடுவதால் அவற்றைப் பெரும்பாலும் இறைச்சிக்காகப் பயன்படுத்தலாம். வயதான முயல்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இனப்பெருக்கத் திறனை இழந்து விட்டால் அல்லது குறைந்து விட்டால், அவற்றையும் இறைச்சிக்காகப் பயன்படுத்த முடியும்.

தூய இனங்களைச் சேர்ந்த முயல்களை, இனப்பெருக்க மாற்றுக்காக, முயல் பண்ணையாளர்கள் தங்களுக்குள் விற்பனை செய்து கொள்ள முடியும். புதிதாகப் பண்ணையைத் தொடங்குவோருக்குத் தரமான முயல்கள் தேவைப்படும் போதும் அவற்றை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இவை மட்டுமின்றி, பண்ணையாளர்கள்  தங்களது பண்ணையின் அருகிலேயே முயல்களை வெட்டிச் சுத்தப்படுத்தி, இறைச்சியாக விற்பனை செய்யவும் முடியும்.

முதல் தரமான இறைச்சியைச் சரியான முறையில் சுத்தப்படுத்தி, பதப்படுத்தி, ஏற்றுமதி செய்தால், பெருமளவில் வருவாய் ஈட்டலாம். ஆய்வகங்களுக்கான முயல்களின் தேவையும் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. முயல் இறைச்சியை மதிப்புக்கூட்டி அதிக இலாபத்தைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.

தடுப்பூசி மற்றும் அதிகளவில் மருந்துகள் பயன்படுத்தப்படாத பண்ணை முயல்களின் இறைச்சி மிகத் தரமாக இருக்கும். தரமான முயல் இறைச்சியை, விற்பனை வாய்ப்புகளை  அறிந்து, சரியாக விற்கும் போது உறுதியாக இலாபத்தைப் பெற முடியும்.

உயிருடன் இறைச்சி முயல்கள் விற்பனை

இறைச்சிக்காக வளர்க்கப்படும் முயல்களை மற்றும் இனப்பெருக்கத் தேவைக்கு அதிகமாக உள்ள முயல்களை, உயிருடன் விற்பனை செய்யலாம். பன்னிரெண்டு வாரங்களைக் கடந்த முயல் இறைச்சி, மிகுந்த சுவையும் ஏற்கத்தக்க மணமும் கொண்டதாக இருக்கும். வைட் ஜெயன்ட், சோவியத் சின்சிலா போன்ற இறைச்சி முயலினங்கள், பன்னிரண்டு வாரங்களில் 2-2.5 கிலோ எடையில் இருக்கும்.

சிறந்த முறையில் தீவனம் மற்றும் இதர பண்ணை நடைமுறைகளை மேற்கொண்டால், முயல்களுக்கான சந்தை எடையை மிகக் குறுகிய காலத்திலேயே பெற இயலும். ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியின் விலையைப் போல, முயல் இறைச்சியின் விலை நிலையாக இருப்பதில்லை. முயலின் சந்தை விலையானது, இடத்துக்கு இடம், விற்பனை நேர்த்தி மற்றும் வேறு சில உள்ளூர்க் காரணங்களால் பெரிதும் மாறுபடுகிறது.

ஒரு முயலிலிருந்து கிடைக்கும் இறைச்சி என்பது, அதன் உயிர் எடையில் 50 சதவீத அளவில் மட்டுமே இருக்கும். இவ்வகையில் உயிருள்ள முயல், கிலோ ரூபாய் 200 முதல் 500 வரை விற்கப்படுகிறது. இனப்பெருக்கக் காலம் கடந்த, வயதான ஆண், பெண் முயல்களையும் இதே முறையில், இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்யலாம்.

இனப்பெருக்க முயல்கள் விற்பனை

இனப்பெருக்கம் செய்வதற்கான முயல்களை இரண்டு விதமாக விற்பனை செய்கிறார்கள். முதலாவதாக, உயரின முயல்களை, யூனிட் முறையில் புதிய பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். அதாவது, சிறந்த தாய் முயல்கள் விற்பனை இம்முறையில் நடைபெறுகிறது. இவற்றை வாங்கும் புதிய பண்ணையாளர்கள் இந்த முயல்கள் மூலம் குட்டிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வார்கள்.

இரண்டாவதாக, ஏற்கெனவே முயல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சில இனப்பெருக்கச் சுழற்சிகளுக்குப் பிறகு, தாய் முயல்களை மாற்றி விடுவது நல்லது. ஒரே வம்சாவளியில் உள்ள பெண் முயல்களைத் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தினால், மரபு சார்ந்த காரணங்களால், அவற்றின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியில் தொய்வு ஏற்படும்.

எனவே, இவ்வகையில் விற்கப்படும் முயல்கள், சரியான அடையாளம் கொண்டவையாக இருத்தல் அவசியம். இதற்கு, முயல்களின் காதில் எண்ணிட்ட தோடுகளை அணிவிக்கலாம், பச்சை குத்தலாம், கூண்டுகளில் விவர அட்டைகளை வைக்கலாம். முயல்களை வாங்குவோர், முயல்களுக்குச்  சரியான அடையாள எண்கள் மற்றும் பதிவேடுகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்து கொண்டு வாங்குவது நல்லது.

அலகு என்னும் யூனிட் முறை விற்பனை என்பது, பொதுவாக எட்டுப் பெட்டை முயல்கள், இரண்டு ஆண் முயல்கள் அடங்கிய தொகுப்பாகும்.  இம்முறை விற்பனையில் முயல்களின் விலையானது, அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்யத் தயாராக இருக்கும் முயல்களைச் சற்று அதிக விலையில் சினை முயல்களாக விற்கலாம்.

எப்படி இருப்பினும், இம்முறை விற்பனையில், ஆண் பெண் இரண்டுமே ஒரு வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. தரமான மேலாண்மை மூலம் சிறந்த குட்டிகளைத் தமது பண்ணையிலேயே உருவாக்க முடியும், உருவாக்க வேண்டும் என்பதை, பண்ணையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

செல்லப் பிராணியாக முயல்களை விற்பனை செய்தல்

இது, முயல் விற்பனையில் ஒரு வாய்ப்பாக அமையுமே தவிர, முழு நேர விற்பனை முறையாக இருக்காது. நகரங்கள், மாநகரங்கள், பெருநகரங்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு அருகில் பண்ணை வைத்திருப்போர், செல்லப் பிராணியாக முயல்களை விற்பதற்கு முயற்சி செய்யலாம். இதற்கு, அழகான பொம்மை போன்ற தோற்றமுள்ள டச்சு போன்ற முயல்களை வளர்க்கலாம்.

சில நேரங்களில், தூய இனங்களுக்குள் கலப்பினம் செய்யும் போது, பல நிறங்களில், கண்ணைக் கவரும் முயல் குட்டிகள் உருவாவதும் உண்டு. இத்தகைய குட்டிகளைச் செல்லப் பிராணியாக விற்கலாம். இந்த விற்பனை முறையில் சில நேரங்களில் பெரிய இலாபம் கிடைக்கக் கூடும்.

குறிப்பாக, திருவிழாக்கள், வார, மாதச்  சந்தைகள், கண்காட்சிகள், செல்லப் பிராணிகள் பூங்கா போன்ற இடங்களில், இம்மாதிரியான முயல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முயல்களின் நிறங்கள் மற்றும் நிறக்கலவை அமைப்பு முறைகளைக் கொண்டு, ரூபாய் 200 முதல் 2,000 வரையிலும் கூட விற்க முடியும்.

பண்ணையாளர்கள் மிக முக்கியமாக இங்கே கவனிக்க வேண்டியது, செல்லப் பிராணியாக முயல்களை விற்பதை, ஒரு வாய்ப்பாகத் தான் கருத வேண்டுமே தவிர, முழு நேரத் தொழிலாக அல்ல. செல்லப் பிராணிகள் விற்பனையில் முயல்கள் பங்கேற்பதன் மூலம், முயல் பண்ணையம் பெருந் தொழிலாக வளர்வதற்கான வாய்ப்பு மட்டுப்படும்.

ஆய்வுக்கூடங்களுக்கான முயல் விற்பனை

பல ஆய்வு நிறுவனங்கள், ஆராய்ச்சி விலங்குகளாக முயல்களைப் பயன்படுத்துவது உண்டு. எடுத்துக்காட்டாக, மருந்து பரிசோதனை, தடுப்பூசி பரிசோதனை, சில உணவுச் சேர்மானங்களின் சோதனை என, பல நிலைகளில் முயல்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள். இத்தகைய ஆய்வுக் கூடங்களில் முயல்களின் தேவை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

இந்த விற்பனை முறையின் மூலமும், முயல் பண்ணையாளர்கள் குறிப்பிட்ட அளவில் இலாபத்தை ஈட்ட முடியும். ஆனால், இந்த விற்பனை முறை சிறிய அளவிலேயே நடைபெறுவதாலும், தொடர் நுகர்வில்லாத தொழில் வாய்ப்பாக இருப்பதாலும், இது பெரியளவிலான விற்பனைச் சந்தையாக இருப்பதில்லை. ஆய்வகங்களுக்கு முயல்களை விற்க விரும்பும் பண்ணையாளர்கள், மத்திய, மாநில அரசுகளின் சட்டத் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு முயல்களை வளர்க்க வேண்டியிருக்கும்.

ஆய்வக விலங்குகளை இனப்பெருக்கம் செய்வதற்கு, அவற்றை வளர்ப்பதற்கு, அவற்றை மேலாண்மை செய்வதற்கு என, பலவிதமான சட்டத் திட்டங்கள் அடங்கிய கொள்கை வழிமுறைகளை CPCSEA எனப்படும், மத்திய அரசு நிறுவனம் வழங்கியிருக்கிறது. அந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி முயல்களை இனப்பெருக்கம் செய்து வளர்த்து, ஆய்வகங்களுக்குச் சரியான முறையில் வழங்குவதன் மூலம் இலாபத்தை ஈட்டலாம். இந்த ஆய்வக விலங்குகள் உற்பத்தியில், முதலீட்டுச் செலவு கூடுதலாக இருப்பது என்பது, எதிர்மறையான அம்சமாக இருக்கிறது.

முயல் இறைச்சி விற்பனை

முயல்களை உயிருடன் விற்பனை செய்வதைப் போல, பண்ணையாளர்கள் தங்களது பண்ணைகளில் அல்லது அருகிலுள்ள இறைச்சிக் கூடங்களில்  முயல்களை வெட்டி இறைச்சியாக விற்பனை செய்யலாம். பன்னிரண்டு வார முயல்களை இறைச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில், இறைச்சிக்கான சிறப்புக் கூறுகள் அனைத்தும் இந்த 12 வார வயதிலுள்ள முயல் இறைச்சியில் நிறைவாக இருக்கும். அதாவது, இந்த முயல்களில் போதியளவில் புரதமும், சரியான அளவில் சதை, எலும்பு விகிதமும் அமைந்திருக்கும். மேலும், இறைச்சியானது மென்மையாகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும்.

தொழில் முறையில் சிறப்புப் பயிற்சியைப் பெற்ற விவசாயிகள், ரீட்டைல் கட் (retail cut) என்னும் முறையில், முயல்களை, கால்கள், முதுகு, முன்னங் கால்கள் என, தனித்தனியாக வெட்டி, நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யலாம். இதர பாகங்களான தோல், குடல், குருதி போன்றவற்றையும் தனித்தனியாக விற்பனை செய்யலாம். கூடுதலாக உற்பத்தியாகும் காலங்களில், இறைச்சியைச் சரியான முறையில் பதப்படுத்தி சில நாட்கள் வரை பாதுகாத்து விற்க முடியும். மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சியையும் மேற்கொள்ளலாம்.

மத மற்றும் வேறு நம்பிக்கைகள் சார்ந்து, சில நாடுகளில், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை ஏற்பதில்லை. ஆனால், முயல் இறைச்சியைப் பொறுத்தவரை எந்தவித நம்பிக்கை சார்ந்த புறக்கணிப்பும் இல்லையென்பது சிறப்பாகும். மேலும், எல்லா வகுப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருப்பது வெகு சிறப்பாகும்.

மதிப்புக்கூட்டிய முயல் பொருள்கள் விற்பனை

இயற்கை முறையிலும், கரிம வேளாண்மை முறையிலும் வளர்க்கப்படும்  வேளாண் பொருள்களுக்கு என்று பெரிய சந்தை இருக்கிறது. குறிப்பாக, இம்முறையில் பயிரிட்டு விற்கப்படும் அனைத்து வேளாண் பொருள்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில் இயற்கை வேளாண் விளைபொருகளுக்குப் பெரிய சந்தை உண்டு.

முயல் வளர்ப்பையும் இயற்கை வேளாண்மை முறையில் மேற்கொண்டால், நல்ல இலாபம் கிடைக்க வழியுண்டு. கரிம வேளாண்மை என்பது, தரச்சான்று பெறுதல் மற்றும் அரசின் அங்கிகாரம் பெறுதல் என்ற, இரண்டு வழிமுறைகளால் ஆனது. இதுவரை முயல் இறைச்சிக்கு மற்றும் முயல் வளர்ப்புக்கு என்று, கரிம வேளாண்மைத் தரச்சான்று, அரசால் உருவாக்கப்படவில்லை. வளர்ந்து வரும் முயல் பண்ணையம் மற்றும் சந்தை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, அரசுகளை அணுகினால் எதிர் காலத்தில் கரிம வேளாண்மைத் தரச்சான்றைப் பெறுவதற்கு மிகுந்த வாய்ப்பு உள்ளது.

முயல்களின் இதர பாகங்கள் விற்பனை

முயல் இறைச்சியைத் தவிர, முயலிலிருந்து கிடைக்கும் மற்ற பகுதிகளையும் விற்பனை செய்தும் இலாபம் ஈட்டலாம். முயல் தோல், குடல், வயிற்றுப் பகுதி, குருதி, முயல் புழுக்கை ஆகியவற்றுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது. தொப்பிகள், கைப்பைகள் (vanity bags), பணப்பைகள் (purse) போன்றவற்றை, இயற்கை மூலப்பொருள்கள் மூலம் தரமாகத் தயாரிக்கும் போது, அவற்றின் சந்தை மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.

ஆனால், இத்தகைய பொருள்களைத் தயாரிக்க, தரமான முயல் தோல்கள் தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் தேவைப்படும். தற்போதைய முயல் பண்ணையத் தொழிலைப் பொறுத்தவரையில் இது ஒரு குறையாகும்.  முயல் பண்ணையம், தொழில் சார்ந்து  வளர வளர, தோல் சார்ந்த தொழில் வாய்ப்பும் பெருகும். முயல் குருதியானது, பாரம்பரிய முறையில் முடி வளர்க்கும் எண்ணெய்த் தயாரிப்பில் பயன்படுகிறது.

எமது தென் மண்டல  ஆராய்ச்சி மையத்தில் முயல் வளர்ப்புப் பயிற்சியைப் பெற்ற சில விவசாயிகள், வெற்றிகரமாக முயல் குருதி எண்ணெய்யைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கால்கள், தலை, குடல் ஆகிய பகுதிகளைச் சுத்தப்படுத்தி, மலிவுவிலைப் புரதமாக (low-cost protein source) இறைச்சியுடன் விற்பனை செய்யலாம்.

மேலும், கால்நடை அல்லது கோழியினத் தீவனத் தயாரிப்பில் புரத மூலப் பொருளாக, முயல்களின் வயிறு, குடல் பகுதிகள் சேர்க்கப்படுகின்றன. பன்றிகளின் உணவாகவும் இத்தகைய மலிவு விலைப் புரதங்களைச் சேர்க்க முடியும். முயல் புழுக்கை, சிறந்த கரிம உரமாகும். இதில், நைட்ரஜன் கூடுதலாக இருப்பதால், விவசாயத்திற்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.

முயல் புழுக்கையை உலர வைத்து அல்லது மண்புழு உரமாக மாற்றி, முறையாகப் பையில் அடைத்து, மதிப்புக்கூட்டி விற்கலாம். மிகுந்த இலாபம் தரக்கூடிய, மதிப்புக் கூட்டப்பட்ட முயல் புழுக்கையானது, வீட்டில் அல்லது மாடித் தோட்டங்களில் வளர்க்கப்படும் குரோட்டன் செடிகள், மணிபிளான்ட் போன்ற தொட்டிச் செடிகளுக்குச் சிறந்த உரமாகப் பயன்படுகிறது.


முயல் DR.THIRUMURUGAN

.திருமுருகன், கு.பச்சையப்பன், .ஜெகவீர பாண்டியன்,

தென் மண்டல ஆராய்ச்சி மையம், மத்திய செம்மறி மற்றும் உரோம ஆராய்ச்சி நிலையம்,

மன்னவனூர், கொடைக்கானல் – 624 103.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading