உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரக் கூடியதும், மருத்துவக் குணங்கள் பல அடங்கியதும், காய்கறிகளில் முதன்மையானதும் வெங்காயமே. சத்து மிகுந்த காய் என்பதுடன், சந்தையில் மிக மலிவாகக் கிடைக்கக் கூடியதுமாகும். இயற்கை உணவுப் பொருள்களில் இரத்த விருத்தியும், இரத்தச் சுத்தியும் தருவதில் வெங்காயத்தைப் போல, வேறு பொருள் இல்லை.
மருந்துகளைச் செய்வதற்காகப் பல நாடுகளில் வெகுகாலமாக வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியா, சீனா, அரேபியா, எகிப்து, கிரேக்கம் ஆகிய நாடுகளில், வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டின் சிறப்பைக் கூறாத புராதன மருத்துவ நூலே இல்லை எனலாம். நமது உணவு முறையை, குறிப்பாகத் தென்னக மக்களின் கைபாகத்தை அயல்நாட்டு உணவியல் நிபுணர்களும் வியந்து போற்றுகின்றனர். இதற்குக் காரணம், அறுசுவை உண்டி என்னும் நம் சமையலின் சிறப்பே ஆகும்.
அறுசுவை உண்டியின் சுவையைக் கூட்டுவதில் வெங்காயத்துக்குப் பங்குண்டு என்பதைப் போல, உணவே மருந்து மருந்தே உணவு என்னும் கோட்பாட்டுக்கு ஏற்ப, உணவாகி, உடல் நலம் காக்கும் மருந்தாகவும் வெங்காயம் செயல்படுகிறது.
வளரியல்பு
இது, இந்தியா முழுவதும் பயிரிடப்படும் சிறு செடியினமாகும். வெங்காயச் செடியில் பூக்கள் பூத்து விதைகள் உருவாகும். இந்த விதைகளும் வெங்காயமும் சாகுபடிக்குப் பயன்படும். அல்லியம் சீபா (Allium Cepa) என்பது இதன் தாவரவியல் பெயராகும். அல்லியோஸ் என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு தாவரங்கள் உலகெங்கும் காணப்பட்டாலும், மருத்துவப் பயனுள்ள உணவாகும் தாவரமாக வெங்காயம் விளங்குகிறது.
உள்ளி, ஈருள்ளி, ஈரவுள்ளி, ஈர வெங்காயம், காயம், சுக்கிரந்தம், நிச்சயம், பலாண்டு என வேறு பெயர்களும் வெங்காயத்துக்கு உண்டு. இதன் பூ, தாள், கிழங்கு, விதை ஆகியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. வெங்காயச்செடி, தண்டின் வேர்ப்பகுதியில் உருண்டையாய்க் கிழங்கை (Bulb) உருவாக்கி, அதில் சத்துகளைச் சேமிக்கிறது. இந்தக் கிழங்கை நாம் வெங்காயம் என்கிறோம். நீண்ட குழல் வடிவ வெங்காயத் தாள்கள்(Spring Onion) நவீன உணவுகளிலும், பாரம்பரிய உணவுகளிலும் சத்துக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்றன.
வகைகள்
தமிழகத்தில் சின்ன வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயமும், பெரிய வெங்காயமும் புழக்கத்தில் உள்ளன. இளஞ்சிவப்பு, வெள்ளை நிற வகைகளும் உண்டு. நரி வெங்காயம், காட்டு வெங்காயமும் உண்டு. இவை, பாமர மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயப் பூக்களையும் தாள்களையும் தனி வகையில் பயிரிடுகின்றனர். இதில், உருண்டையாக இல்லாமல் தடித்த தண்டாக வெங்காயம் கிடைக்கிறது. இந்த வெங்காயம் ஸ்கேலியன் (Scallion) அல்லது சாலட் (Salad) எனப்படுகிறது. இதன் தாவரப்பெயர் அல்லியம் ஃபிஸ்டுலோசம் (Allium Fistulosum) ஆகும்.
பண்புகள்
சுவையில், கசப்பையும் வெப்பத் தன்மையையும் கொண்டது வெங்காயம். சீரண நிலையில், காரச்சுவையைக் கொண்டு வெப்பத்தைத் தந்து கோழையை அகற்றும். சிறுநீரைப் பெருக்கி உள்ளழலை ஆற்றும். ஆண்களுக்கு ஆண்மைப் பெருக்கியாக, பெண்களுக்கு ருதுவுண்டாக்கியாகச் செயல்படுகிறது. ஆனால், அதிகமாக உண்டால், உடலின் மென்மையான திசுக்களில் தடிப்பை உண்டாக்கும். சீரண உறுப்புகள் வலிமையாகும். அனல் பித்தத் தாதுவால் செரிக்கும் ஆற்றலைத் தூண்டி, உணவைச் செரிக்கச் செய்யும். வாயுவை அகற்றும்.
வெங்காயத்தின் பெரும்பாகம் நீரே. அதனால் நீராகப் பிழியலாம். உடல் வளர்ச்சிக்கான பல்வேறு தாதுப்பொருள்கள் இதில் அதிகமாக உள்ளன. இதிலிருந்து வெளியாகும் ஒருவித வாசனைக்குக் காரணம், ஆவியாக வெளியாகும் கந்தகமும் ஹைட்ரோ கார்பனும் கலந்த எண்ணெய் தான். மேலும், உப்பு வகை, புளிப்புச்சத்து வகை, அல்புமின் என 18க்கும் மேற்பட்ட அரிய சத்துகளைக் கொண்ட சிறந்த மருந்துக் களஞ்சியமாக வெங்காயம் திகழ்கிறது.
உணவாக
வெப்பமும் வறட்சியுமிக்க கோடைக்காலத்துக்கு நெய்ப்பசை, நீர் அம்ச உணவுகளே தேவை. எடுத்துக்காட்டாகத் தயிருடன் வெங்காயத்தைக் கலந்து உண்ணலாம்; கேழ்வரகு, கம்பு, நொய்யரிசியில் கூழ் செய்து உண்ணலாம். நமது உடலின் இயல்பான வெப்ப நிலையைக் காக்க, அல்லது வெப்பத்தைப் பெற, அளவான உணவு முறையும், எளிய உடற் பயிற்சியும் உதவும்.
அதே சமயத்தில், கடின உழைப்பு, ஓய்வில்லாமை, நோய்த்தாக்கம் போன்றவற்றால் ஏற்படும் கூடுதல் வெப்பத்தைச் சரிசெய்ய, ஓய்வெடுப்பதுடன், உடல் நிலைக்குத் தக்கவாறு, இயற்கை நமக்கு அளித்துள்ள பனைநுங்கு, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றுடன், வெங்காயத்தையும் உணவில் பக்குவமாய்ச் சேர்த்துக் கொள்வது நல்லது.
மருந்தாக
உடலில் ஏற்படும் வீக்கங்களை நீக்கும் (Anti Inflammatory). தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் (Anti cholestrol). புற்றுநோயை எதிர்க்கும் (Anti cancer). மேலும், Anti oxidant properties தன்மையும், க்வெர்சிடின், கிளைக்கோஸைட்கள் போன்ற நன்மையைச் செய்யும் இரசாயனங்களும் வெங்காயத்தில் உள்ளதென நவீனப் பகுப்பாய்வுகள் குறிப்பிடுகின்றன.
வழக்கிலுள்ள எளிய முறைகள்
தேள் கொட்டினாலோ, விஷ வண்டுகள் கடித்தாலோ, ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, பாதித்த இடத்தில் தேய்த்தால் தேள் விஷம் இறங்கும்; வண்டு விஷப் பாதிப்பு அகலும். வீட்டிலும், குழந்தைகள் விளையாடும் இடங்களிலும் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு விட்டால், அந்த இடங்களில் விஷ ஜந்துகள் அண்டாது. பாம்பு, தேள் போன்றவற்றால் வெங்காய வாசத்தைத் தாங்க முடியாது. ஆகவே, இதுவொரு தடுப்பு மருந்தாகும்.
வறுத்துத் தூளாக்கிய சீரகம், உப்புடன் வெங்காயத்தை அரிந்து போட்டு நன்கு மென்று உண்டபின் நீரைக் குடித்தால், வயிற்றுவலி, மாந்தம், மந்தபேதி குணமாகும். மாதவிடாய்க் காலத்தில், வெங்காயத்தைத் தின்று வந்தால், உதிரச் சிக்கல் அகன்று சிறுநீரும் சிரமமின்றி வெளியேறும்.
தற்காலத்தில் தானியங்களும் காய்கறிகளும் இரசாயனப் பொருள்களின் துணை கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால் நச்சுத் தன்மையைக் கொண்டவையாக இருக்கின்றன. நம் அன்றாட உணவில் வெங்காயத்தைச் சேர்த்து வந்தால், இந்த நச்சுத்தன்மை மற்றும் அதனால் வரும் கேட்டிலிருந்து நம் உடம்பைப் பாதுகாக்கலாம்.
மூலநோய் அகல
வெங்காயத்தை நறுக்கித் தயிருடன் கலந்து மதிய உணவில் சேர்த்து உண்பது மூலநோய் நீங்கத் துணை மருந்தாக அமையும். பாசிப் பருப்புடன் வெங்காயத்தைச் சேர்த்துப் புளியில்லாக் கூட்டாக்கி உண்டால், மூல நோயால் ஏற்படும் எரிச்சல் மட்டுப்படும். வெங்காயத்தை நறுக்கி நெய்யில் வதக்கிச் சூடான சாதத்தில் பிசைந்து உணவுக்கு முன் மூன்று கவளம் சாப்பிட, நாள்பட்ட குடல் விரணம் நீங்கி மூலநோய் அகலும்.
பற்களைக் காக்க
உயிர்ச்சத்து சி, உலோக, உப்புப் பற்றாக்குறை உடலில் இருந்தால், பற்களுக்கு இடையே ஈற்றில் ஒருவிதப் பசை படரும். இதனால், பற்களில் பிடிமானமின்மை, அசைவு, வாயில் துர்நாற்றம், பல்வலி ஆகியன உண்டாகும். நாளும் வெங்காயத்தை உணவில் சேர்த்தல், வெங்காயச் சாற்றில் வாயைக் கொப்பளித்தல் ஆகியவற்றால், வாய்ப்புண் நீங்கி, ஈறுகள் பலப்பட்டுப் பற்கள் ஆரோக்கியம் பெறும்.
காக்கை வலிப்பு – நீர்க்கோவை நீங்க
அன்றாட உணவுடன் வேக வைத்த வெங்காயத்தைக் காலை, மாலை உண்டு வந்தால், காக்கை வலிப்பின் வேகம் படிப்படியாகக் குறைவதைக் காணலாம். அதைப்போல, படுக்கைக்குப் போகும் போது ஒரு வெங்காயத்தைத் தின்று விட்டுச் சுடுநீரைப் பருகினால், எவ்வளவு கடுமையான நீர்க்கோவையும் நீங்கும்.
புழுதிக் காற்றால் ஏற்படும் ஒவ்வாமையால் தொண்டையில் கரகரப்பு, எரிச்சல் உண்டாகும். இவை, வெங்காயத்தை அரைத்துப் பற்றுப் போடுவதாலும், அதன் சாற்றை நுகர்ந்து பார்ப்பதாலும் அகலும். எனவே, வெங்காயம் தானே என்று புறந்தள்ளாமல், நம் வாழ்வில் அளவோடு பயன்படுத்தி நலம் பெறுவோம்.
மலிவான எளிமையான வெங்காய மூலியே!
மேலான உணவாகும் நல்மருந் துணவே!
அளவோடு புவிமாந்தர் நாளும் புசிக்க
ஆன்றோரின் வளநலமும் நமதென் போமே!
மரு.ப.குமாரசுவாமி,
மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு.