தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி, பிரேசிலில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, முதன் முதலாகக் கோவா கடற்கரைப் பகுதியில் பயிரிடப்பட்டது. உலக முந்திரி ஏற்றுமதிச் சந்தையில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. ஆண்டுதோறும் 2,515 கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரிப் பருப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முந்திரி சாகுபடி குறிப்பிடும் அளவில் உள்ளது. நம் மாநிலத்தின் முந்திரி உற்பத்தித் திறன், எக்டருக்கு 620 கிலோவாக உள்ளது. இது, எக்டருக்கு 2,500 கிலோ என்னும் வியட்நாமின் உற்பத்தித் திறனை ஒப்பிடும் போது, மிகவும் குறைவான அளவாகும்.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை: நம் நாட்டிலுள்ள 40-50 சத முந்திரித் தோப்புகள் விதை மூலம் உற்பத்தி செய்த கன்றுகளால் ஆனவை. மேலும், இவற்றில் 40 சதப் பரப்பிலுள்ள மரங்கள், மிகவும் வயதானவை மற்றும் உற்பத்தித் திறன் குறைந்த நிலையில் உள்ளவை. பெரும்பாலான தோப்புகள், வளம் குறைந்த மற்றும் மணல் சார்ந்த கடற்கரைப் பகுதிகளில் இருப்பது.
பரப்புக்கு ஏற்ற வகையில் இல்லாமல், குறைந்தளவில் மரங்களை வளர்த்து வருவது. சரியாக உரமிடாமல் இருப்பது மற்றும் சரியான நேரத்தில், சரியான பயிர்ப் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமல் இருப்பது. எனவே, முந்திரியின் மகசூலை உயர்த்த வேண்டுமானால், உயர் இரக ஒட்டுச் செடிகளை நடவு செய்து, புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இரகங்கள்
வறட்சி மற்றும் மானாவாரிப் பகுதிக்கேற்ற வி.ஆர்.ஐ.2, ஏற்றுமதித் தரம் வாய்ந்த கொட்டைகளைத் தரும் வி.ஆர்.ஐ.3, அதிக மகசூலைத் தரும் வி.ஆர்.ஐ.4 ஆகிய இரகங்களைப் பயிரிடலாம். இச்செடிகள் குறுகிய காலத்தில் காய்க்கத் தொடங்கும் தாய் மரங்களின் மரபியல்பை ஒத்திருக்கும். மேலும், ஒரே சீராகக் காய்ப்புக்கு வரும். திரட்சியான பருப்புகள் கிடைக்கும்.
பயிர் எண்ணிக்கை
முந்திரிக் கன்றுகளை 7×7 மீட்டர் இடைவெளியில் நட்டு, எக்டருக்கு 200 கன்றுகள் இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். இதையே அடர் நடவு முறையில் 5×4 மீட்டர் இடைவெளியில் நட்டுப் பராமரித்து, பத்து ஆண்டுக்குப் பிறகு, மரங்களைக் கலைத்து விடலாம். இதன் மூலம் ஆரம்பக் காலத்தில் அதிக வருவாயை எடுக்க முடியும்.
தட்பவெப்ப நிலை
முந்திரியானது வெப்ப மண்டலப் பயிராகும். இதன் வளர்ச்சிக்குச் சூரிய ஒளி நன்றாக இருக்க வேண்டும். இது நன்கு வளர, ஒரு நாளைக்கு 6-8 மணி நேரமும், பூப்பதற்கு 8-10 மணி நேரமும் சூரிய ஒளி கிடைக்க வேண்டும். முந்திரி பூக்கும் போதும், காய்க்கும் போதும், வறண்ட தட்பவெப்ப நிலை இருந்தால் மகசூல் அதிகமாகும்.
மழையும் வெப்பமும் அதிகமாக இருந்தால், கொட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஈரப்பதம் 60 சதத்துக்கும் குறைவாக இருந்தால், மரங்களின் வளர்ச்சியும், உற்பத்தித் திறனும் பாதிக்கப்படும். 600 முதல் 1,500 மி.மீ. வரை மழை பெய்யும் இடங்களில் முந்திரியைப் பயிரிடலாம்.
மண்ணின் தன்மை
செம்மண், செம்பொறை மண் மற்றும் கடலோர மணற்பாங்கான மண்ணில் முந்திரி நன்கு வளரும். களர், உவர் மண்ணுள்ள நிலங்களைத் தவிர்த்து விட வேண்டும்.
நடவு
வடகிழக்குப் பருவமழைக் காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடலாம். பாசன வசதியுள்ள இடங்களில் ஜூன் முதல் மார்ச் வரை நடலாம். கடினமான மண்கண்டம் உள்ள நிலங்களில் ஒரு கன மீட்டர் அளவில் குழிகளை எடுக்க வேண்டும். நல்ல நிலங்களில் 45 கன செ.மீ. அளவில் குழிகளை எடுத்து நடலாம். வெய்யிலில் இந்தக் குழிகளை நன்றாகக் காய விட்டு, மேல் மண்ணுடன், குழிக்கு 10 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு, 100 கிராம் லின்டேன் வீதம் கலந்து இட வேண்டும்.
இந்தக் குழிகளில் 3-6 மாத வயதுள்ள ஒட்டுச் செடிகளை நடலாம். வேர்கள் சிதையாமல் பையிலிருந்து நாற்றுகளை எடுத்து, ஒட்டுப்பகுதி, தரையிலிருந்து 5 செ.மீ. உயரத்தில் இருக்கும் வகையில் நட வேண்டும். ஒட்டுக் கட்டிய பகுதி காற்றில் அசையாமல் இருக்க, குச்சியை நட்டு அதனுடன் செடியைக் கட்டிவிட வேண்டும்,
நடுகைக்குப் பிந்தைய பராமரிப்பு
நட்டு ஒரு மாதம் கழித்து, ஒட்டுச் சேர்க்க உதவிய நெகிழிப் பட்டையை அகற்றி விட வேண்டும். மழைக் காலத்தில் நீர் தேங்காமல் இருப்பது நல்லது. வேர்ச் செடியிலிருந்து துளிர்க்கும் கிளைகள் மொட்டுகளாக இருக்கும் போதே கிள்ளிவிட வேண்டும். நட்டு 60 நாட்கள் கழித்து வேர்ச்செடியின் இலைகளை அகற்றி விடலாம். நடவு செய்து மூன்று ஆண்டுகள் வரை பூக்களைக் கிள்ளி விட்டால் இளஞ் செடிகளின் ஆரம்பக்கால வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்நிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஊடுபயிர்களை வளர்க்கலாம். பசுந்தாள் உரங்கள், மணிலா, உளுந்து, எள், பயறு வகைகள், சிறுதானியப் பயிர்கள் போன்றவற்றைப் பயிரிட்டுக் கூடுதல் வருமானம் பெறலாம்.
பின்செய் நேர்த்தி
தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரம் வரை, பக்கக் கிளைகள் இல்லாமல் மரம் நேராக இருக்க வேண்டும். காய்ந்த கிளைகள், நோய் மற்றும் பூச்சிகளால் தாக்கப்பட்ட கிளைகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும். கவாத்து செய்த பிறகு வெட்டுப் பகுதிகளில் 10 சத போர்டோ பசையைத் தடவிவிட வேண்டும்.
களை எடுத்தல்
தொடக்கக் காலத்தில் கன்றுகளைச் சுற்றி 2 மீட்டர் சுற்றளவில் உள்ள களைகளை அவ்வப்போது அகற்றிச் சுத்தமாக வைப்பது, கன்றுகளின் நல்ல வளர்ச்சிக்கு அவசியமாகும். பொதுவாக ஆண்டுக்கு இருமுறை களைகளை நீக்க வேண்டும். களைகளைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.லி. கிராமாக்சோன் வீதம் கலந்து தெளிக்கலாம்.
பாசனம் மற்றும் வடிகால் வசதி
பெரும்பாலும் முந்திரி மானாவாரிப் பயிராகவே இடப்படுகிறது. எனினும், ஜனவரி- மார்ச் காலத்தில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செடிக்கு 200 லிட்டர் வீதம் நீரைப் பாய்ச்சினால் மகசூலை அதிகரிக்கலாம். நீர் தேங்கும் இடங்களில் முந்திரி சரியாக வளராது என்பதால், நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
உர நிர்வாகம்
அடிமரத்தில் இருந்து 1.5 மீட்டர் தள்ளி, 3 மீட்டர் சுற்றளவுக்கு 10 செ.மீ. ஆழத்தில் தோண்டி உரங்களை இட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும்.
பூச்சிக் கட்டுப்பாடு
தேயிலைக் கொசு: இதைக் கட்டுப்படுத்த, முந்திரித் தோப்பில் அல்லது தோப்புக்கு அருகில் கொய்யா, வேம்பு, திராட்சை போன்றவற்றைப் பயிரிடலாம். தளிர் பருவத்தில், ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மி.லி. மானோகுரோட்டாபாஸ் 0.50 சத மருந்து வீதம் தெளிக்கலாம். பூக்கும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் யூரியா மற்றும் 1.5 மி.லி. எண்டோசல்பான் 0.05 சத மருந்து வீதம் கலந்து தெளிக்கலாம்.
காய்க்கும் பருவத்தில், ஒரு லிட்டர் நீருக்கு 30 கிராம் யூரியா மற்றும் 2 கிராம் கார்பரில் 0.1 சத மருந்து வீதம் கலந்து தெளித்தால், பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிராமல் காக்கலாம்.
தண்டு மற்றும் வேர்த் துளைப்பான்: இவற்றைக் கட்டுப்படுத்த, களையை அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். வேர் மற்றும் தண்டிலுள்ள புழுக்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். மே மற்றும் நவம்பர் மாதத்தில், ஒரு பங்கு தார், இரண்டு பங்கு மண்ணெண்ணெய் வீதம் கலந்து மரங்களில் பூசினால், பெண் வண்டுகள் முட்டைகள் இடுவதைத் தடுக்கலாம்.
மரங்களைச் சுற்றி, கார்பரில் 0.2 சத மருந்தை நீரில் கலந்து ஊற்றிவிட வேண்டும். 20 மி.லி. மானோகுரோட்டாபாசை 20 மி.லி. நீருடன் கலந்து நெகிழிப் பையில் நிரப்பி, அதற்குள், நுனி சீவப்பட்ட வேரை இட்டுப் பையை இறுக்கிக் கட்டி வைக்க வேண்டும். இலையை அரிக்கும் புழுக்கள் மற்றும் தளிரையும் பூவையும் பிணைக்கும் புழுக்களைக் கட்டுப்படுத்த, மானோகுரோட்டாபாஸ் 0.05 சத மருந்தைத் தெளிக்கலாம்.
நோய்க் கட்டுப்பாடு
நாற்றழுகல் மற்றும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, நாற்றங்கால் உற்பத்திக்கு உதவும் மண் கலவை அல்லது நாற்றங்காலை 1 சத போர்டோ கலவை அல்லது 0.2 சத திரம் மருந்துக் கலவையில் நனைத்து விதைக்க வேண்டும். ஆந்த்ரக்னோஸ் என்னும் சூறை நோய் மற்றும் இளஞ்சிவப்புப் பட்டை அல்லது நுனிக்கருகல் நோயைக் கட்டுப்படுத்த, நோயுற்ற கிளைகளை நீக்க வேண்டும். மேலும், 0.2 சத மேங்கோசெப் அல்லது 1 சத போர்டோ கலவையைத் தெளிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் மகசூல்
நான்காம் ஆண்டிலிருந்து முந்திரிக் கொட்டைகளைப் பெறலாம். வி.ஆர்.ஐ.2 இரகம் மூலம் எக்டருக்கு 2,000 கிலோ, வி.ஆர்.ஐ.3 இரகம் மூலம் எக்டருக்கு 2,500 கிலோ, வி.ஆர்.ஐ.4 மூலம் எக்டருக்கு 3,000 கிலோ, வி.ஆர்.ஐ.1 வீரிய ஒட்டு இரகம் மூலம் எக்டருக்கு 2,900 கிலோ முந்திரிக் கொட்டைகள் மகசூலாகக் கிடைக்கும்.
முனைவர் க.வேங்கடலெட்சுமி,
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.