செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர்.
முன்னாள் பிரதமர் நேரு பிறந்த தினம், குழந்தைகள் நாளாகவும், முன்னாள் அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம், தேசிய ஒருங்கிணைப்பு நாளாகவும் கொண்டாடப்படுவதைப் போல, நாட்டுக்காகப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் பிறந்த நாள்கள், சமூக நோக்கங்களை வலியுறுத்தும் விதமாகப் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.
அந்த வகையில், வெண்மைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும், அமுல் நிறுவனர் டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் தேதி, தேசியப் பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளைத் தேசியப் பால் தினமாகக் கொண்டாடுவது என, இந்தியப் பால் நிறுவனமான Indian Dairy Association முன்மொழிந்தது. அதன்படி, 2014 ஆம் ஆண்டு முதல், டாக்டர் குரியனின் பிறந்தநாள் தேசியப் பால் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள மாடுகளின் எண்ணிக்கை 200 மில்லியன். இது உலகளவில் 13 சதமாகும். இந்த மாடுகளில் 151 மில்லியன் மாடுகள் நாட்டினமாகும். இவற்றில் 80 சதம் இந்திய மாடுகள். இந்தியாவில் உள்ள எருமை மாடுகள் 110 மில்லியன். இது உலகளவில் 57 சதமாகும். எருமைகளில் இருந்து 57 சதவீதப் பாலும், பசுக்களில் இருந்து 43 சதவீதப் பாலும் கிடைக்கிறது.
நமது நாட்டினப் பசுக்கள் கொடுக்கும் பாலுக்கு ஏ2 பால் என்று பெயர். இந்தப் பால் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதய நோய்கள், சர்க்கரை, நரம்பு நோய்கள், ஆஸ்டியோ போரோஸிஸ் (osteo porosis) ஆஸ்டியோ மலேசியா (osteo malsia) போன்ற எலும்பு சார்ந்த நோய்களுக்கும், மகளிர்க்கு வரும் மார்பகப் புற்று நோய்க்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது.
1965 ஆம் ஆண்டு அமுல் பண்ணையைப் பார்வையிட்ட அப்போதைய பாரதப் பிரதமர் இலால் பகதூர் சாஸ்திரி, இதைப்போல இந்தியா முழுவதும் பால்பண்ணைத் திட்டத்தை ஏற்படுத்துமாறு, டாக்டர் குரியனிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, குஜராத்தில் National Dairy Development Board நிறுவப்பட்டது.
பால் மனிதர் வர்கீஸ் குரியன்
டாக்டர் குரியன் முதுநிலைப் பொறியியல் பட்டதாரியாவார். இவர், கேரளத்திலுள்ள கள்ளிக்கோட்டையில் 26-11-1921-இல் பிறந்தார். பால்வளத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக இவருக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. வெண்மைப் புரட்சி என்னும் Operation Flood திட்டத்தைச் சிறப்பாக நடத்தியதற்காக, The Architect of Operation Flood என்னும் விருது வழங்கப்பட்டது.
மேலும், 1963-இல் ரமோன் மக்சேசே, 1965-இல் பத்மஸ்ரீ, 1966-இல் பத்மபூஷன், 1986-இல் கிருஷி ரத்னா, 1986-இல் வாடேலர் அமைதி விருது, 1989-இல் உலக உணவுப் பரிசு, 1999-இல் பத்ம விபூஷன், 2001-இல் எக்கனாமிக் டைம்ஸ் விருது என, பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளன.
இவர், இந்தியளவில் 160 இலட்சம் பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவர். எனவே, கடந்த 15 ஆண்டுகளாகப் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்திய நாட்டினப் பசுக்களின் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நிதி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் (Rastriya Gokul Mission) என்னும் அமைப்புத் தொடங்கப்பட்டு, தேசியளவில் கறவை மாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஜூன் முதல் நாள், உலகப் பால் தினமாக, 2001-ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அங்கமான உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் (Food and Agriculture Organisation) மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் நன்மைகள்
உலகளவிலான பால் உற்பத்தியில் இந்தியா 15 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள 96,000 சங்கங்கள் மூலம், 16 மில்லியன் லிட்டர் பால், உற்பத்தி செய்யப்படுகிறது. பாலுற்பத்தி மூலம் ஆண்டுக்கு 1,65,000 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கிறது.
பால் உற்பத்தியாளர் ஒருவரின் மாத வருமானம் 25,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. பால்வளத் தொழில் நுட்பக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. 2020-ஆம் ஆண்டில் பால் உற்பத்தியை 200 மில்லியன் டன்னாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பால் தினம் தேவையா?
ஆம். இதன் மூலம் பால் பொருள்களான, நெய், பன்னீர், கோவா, தயிர், யோக்கர்ட் தயாரிப்பு முறைகளைத் தெரிந்து கொள்ளலாம். பாலிலுள்ள சத்துகளைப் பற்றியும், பாலைப் பருக வேண்டிய அவசியத்தைப் பற்றியும் இந்த நாளில் விழிப்புணர்வு தரப்படுகிறது. அதனால், பால் உற்பத்தியாளர்கள், அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள், பொது மக்கள், பால் தின நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இதில், கவியரங்கம், கருத்தரங்கம், திரைப்படங்கள் மூலம், கால்நடை வளர்ப்பு, நோய்த்தடுப்பு, பாலுற்பத்தி, சந்தைப்படுத்தல் போன்ற விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
பாலைச் சாப்பிட வேண்டுமா?
ஆம். பாலிலுள்ள புரதச்சத்து, கேசின், சீரம் என இருவகைப்படும். பாலில் கேசின் 83 சதம் உள்ளது. புரதக் குறையால் உண்டாகும் குவாசியர்கர் நோய், ஸ்டன்ட் குரோத் ஆகியவற்றுக்குப் மருந்தாக, பாலிலுள்ள இரண்டு புரதங்களும் பயன்படுகின்றன. தாய்ப்பாலில் உள்ள பீடா கேசினும், பசும்பாலில் உள்ள பீடா கேசினும் ஒன்றாகவே உள்ளன. அதனால் தான், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்குப் பசும்பால் தரப்படுகிறது.
பசுநெய் கண் பார்வையை அதிகரிக்கும். மாலைக்கண் நோயைக் குணமாக்கும் வைட்டமின் ஏ உள்ளது. இதனால், நோயெதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் அதிகரிக்கும். பாலிலுள்ள பி12 வைட்டமின், இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியாகி, நரம்பு மண்டலம் சீராகச் செயல்பட உதவுகிறது. வைட்டமின் டி, கால்சியத்தை உறிஞ்சுவதற்கு ஆதாரமாக உள்ளது. பாலிலுள்ள கால்சியம், எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பாலில் 350-400 மி.கி. பொட்டாசியம் உள்ளது. இதனால், இரத்தக் குழாய்கள் நன்றாக விரிந்து (Vasodilator) இரத்த ஓட்டம் சீராகும் என்பதால், இரத்தழுத்தம் வருவதில்லை. நரம்புகளும், தசை நார்களும் சிறப்பாகச் செயல்பட, பொட்டாசியம் உதவுகிறது. பாலில் சோடியம் குறைவாக இருப்பதால் இதய நோய்கள் வருவதில்லை.
பசு நெய்யிலுள்ள ஆன்ட்டி கார்சினோ ஜெனிக் காம்பௌன்ட் (Anti carcino genic compound) புற்றுநோயைத் தடுக்கும். இதில் கொலஸ்ட்ரால் குறைவாகவே உள்ளது. பாலிலுள்ள வைட்டமின் டி, புற்றுநோய்ச் செல்களின் வளர்ச்சியையும், கால்சியம், லாக்டோஸ் ஓவேரியன் புற்றுநோயையும் தடுக்கும்.
வயதான ஆண்களையும், மாதவிலக்கு நின்ற பெண்களையும் தாக்கும், ஆஸ்டியோ போரோசிஸ், ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ், ஆஸ்டியோ மலேசியா மற்றும் பெண்களுக்கு வரும் மார்கப் புற்றுநோயைத் தடுக்க, தினமும் அரை லிட்டர் பாலைப் பருக வேண்டும்.
பாலில் நிறைந்துள்ள கோலின் சத்து, நன்கு தூங்க, தசை நார்கள் சீராக இயங்க, படிப்பாற்றல், நினைவாற்றல் பெருக உதவுகிறது. பாலிலுள்ள லாக்டிக் அமிலம் முகப்பொலிவுக்கு, தோல் பளபளப்புக்கு உதவுகிறது. இதிலுள்ள அமினோ அமிலம், தோல் ஈரப்பசையுடன் இருக்கத் துணையாகிறது.
கல்லீரலில் தயாராகும் கொலஸ்ட்ராலை, பால் கட்டுப்படுத்துகிறது. பச்சைத் தீவனத்தைச் சாப்பிடும் மாடுகளின் பாலில் அன்சாசுரேடட் பேட்டி அமிலம் உள்ளது. இதில், ஒமேகா 3 மற்றும் 6 சக்தி உள்ளது. இவற்றிலுள்ள காஞ்சுகேட்டெட் லினொயிலிக் அமிலம் (Conjucated linoleic Acid) சிலவகைப் புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.
இந்த அமிலம், இன்சுலின் சுரப்பைக் கூட்டி, இரத்தச் சர்க்கரையைக் குறைக்கிறது. இதனால், டைப் 2 சர்க்கரை நோய் வருவது தடுக்கப்படுகிறது. பாலிலுள்ள அயோடின், தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்ய உதவுகிறது.
எனவே, தேசியப் பால் தின உறுதிமொழியாக, பால் உற்பத்தியைப் பெருக்குவோம்! தேவையான பாலைப் பருகுவோம்! நோயின்றி வாழ்வோம்!
டாக்டர் A.R.ஜெகத் நாராயணன், மேனாள் மண்டல இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத்துறை, சேலம் – 636 008.