வெங்காயத்தின் பாசனத் தேவையானது, பயிரின் பருவம், மண்வகை, பாசன முறை, பயிரின் வயது ஆகியவற்றைப் பொறுத்தது. ஒருமுறை வெங்காய சாகுபடி செய்ய, 30 அங்குல நீர்த் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 0.3-0.4 அங்குல ஆழத்துக்குப் பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்து மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்நீர் கொடுக்க வேண்டும்.
பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, 7-10 நாட்கள் இடைவெளியில் பாசனம் தேவைப்படும். பொதுவாக, காரீஃப் பயிருக்கு 5-8 பாசனமும், தாமதமான காரீஃப் பயிருக்கு 10-12 பாசனமும், ராபி பயிருக்கு 12-15 பாசனமும் தேவை.
வெங்காயம் சல்லிவேர்ப் பயிராக இருப்பதால், சரியான வளர்ச்சி மற்றும் குமிழ் வளர்ச்சிக்கு உகந்த மண்ணின் ஈரப்பதத்தைப் பராமரிக்க, அடிக்கடி லேசான பாசனம் தேவைப்படுகிறது. அறுவடைக்கு 10-15 நாட்களுக்கு முன், பாசனத்தை நிறுத்த வேண்டும். இது, சேமிப்பின் போது குமிழ்கள் அழுகுவதைக் குறைக்கவும், குமிழ்களின் ஆயுட்காலத்தைக் கூட்டவும் உதவுகிறது.
அதிகப்படியான பாசனம் எப்போதும் தீங்கு விளைவிக்கும். மழைக்காலத்தில் நிலங்களில் நீர்த் தேங்காத வகையில் வடிகால் வசதி இருக்க வேண்டும். அடியுரமாக, ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 2 கிலோ டிரைக்கோடெர்மா ஹர்சியானத்தை 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும்.
வளர்ச்சிப் பருவத்தில், ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் பேசில்லஸ் + டிரைக்கோடெர்மா ஹர்சியானம் வீதம் கலந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை தெளித்தால், பூசணங்களின் பெருக்கத்தைக் குறைக்க முடியும். வறட்சிக் காலத்தில் தரப்படும் பாசனம், வெங்காயத்தின் வெளிப்புறச் செதில்கள் பிளவுபடவும் மற்றும் பூக்கள் (bolting) உருவாகவும் வழிவகுக்கும். பூக்கள் உருவாகத் தொடங்கினால், காய்கள் சிறியதாகி விடும். இதனால், மகசூல் குறைவதுடன், காய்களுக்குச் சரியான விலையும் கிடைக்காது.
கடத்தல், கசிவு மற்றும் ஊடுருவல் இழப்புகளால், வாய்க்கால் பாசனத்தில் நீரிழப்பு மிக அதிகமாக உள்ளது. சொட்டுநீர் மற்றும் நுண் தெளிப்புநீர்ப் பாசனம் போன்ற நவீனப் பாசன நுட்பங்கள், நீரைச் சேமிக்க உதவுவதோடு, தரமான காய்கள் விளைச்சலையும் கணிசமாக அதிகரிக்கச் செய்யும்.
சொட்டுநீர்ப் பாசனத்தில், நாற்றுகளை 10×15 செ.மீ. இடைவெளியில், 15 செ.மீ. உயரம் மற்றும் 120 செ.மீ. மேல் அகலம், 45 செ.மீ. ஆழமுள்ள அகலப் பாத்திகளில் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு அகலப் பாத்திக்கும் 16 மி.மீ. அளவுள்ள இரண்டு சொட்டுப் பக்கவாட்டுகள், 60 செ.மீ. தொலைவில் உமிழ்ப்பான்கள் (inbuilt emitters) இருக்க வேண்டும்.
உள்ளமைக்கப்பட்ட இரண்டு உமிழ்ப்பான்களுக்கு (inbuilt emitters) இடையே உள்ள தூரம் 30-50 செ.மீ. மற்றும் நீர் வெளியேற்றம் மணிக்கு 4 லிட்டர் வீதம் இருக்க வேண்டும். ரைன்ஹோஷ் முறையைப் பயன்படுத்தும் போது, 20 மி.மீ. நுண்துளைக் குழாய்களின் இரண்டு பக்கவாட்டுகளுக்கு இடையே உள்ள தூரம், 6 மீட்டராக இருக்க வேண்டும். டிஸ்சார்ஜ் வீதம் மணிக்கு 135 லிட்டராக இருக்க வேண்டும்.
வாய்க்கால் பாசனத்துடன் ஒப்பிடுகையில், சொட்டுநீர்ப் பாசன முறையில், 15-25 சதவீத விளைச்சல் கூடுவதோடு, சந்தைப்படுத்த உகந்த தரமான காய்களும் கிடைக்கும். மேலும், 35-40 சதவீத நீர்ச்சேமிப்பு, 25 சதவீத வேலையாட்கள் சேமிப்புப் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.
உரப்பாசனம் என்பது, சொட்டுநீர்ப் பாசனம் மூலம், பயிர்களுக்கு உரங்களை இடும் பயனுள்ள மற்றும் சிறந்த முறையாகும். இம்முறையில், பயிர்களுக்குத் தேவையான சத்துகள், பாசன நீரில் கலந்து விடப்படும்.
ஒரு எக்டர் வெங்காயப் பயிர்களுக்கு, 60:60:30 கி.கி. தழை, மணி மற்றும் சாம்பல் சத்துத் தேவைப்படும். இவற்றில், 75 சதவீத மணிச்சத்தை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 60:15:30 கி.கி. தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை, உரப்பாசன முறையில் அளிக்க வேண்டும். இதற்கு, தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அந்த நீருடன் கரையும் உரத்தையும் சேர்த்து விட வேண்டும். பயிரின் ஆயுட்காலம் வரை கிடைக்கும் வகையில், உரங்களின் அளவைப் பிரித்து, மூன்று நாட்களுக்கு ஒருமுறை உரப்பாசனம் செய்ய வேண்டும்.
அளவு விவரம் எக்டருக்கு:
3, 6, 9 ஆகிய நாட்களில், 19:19:19 உரம் 2.12 கிலோ மற்றும் 0.88 கிலோ (880 கிராம்) யூரியாவைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
11 நாள் முதல் 35 நாள் வரை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை, 12-61-0 உரம் 0.36 கிலோ (360 கிராம்), 13-0-45 உரம் 0.68 கிலோ (680 கிராம்) மற்றும் 1.68 கிலோ (1,680 கிராம்) யூரியாவைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
36 நாள் முதல் 60 நாள் வரை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை, 12-61-0 உரம் 0.36 கிலோ (360 கிராம்), 0:0:50 உரம் 0.92 கிலோ (920 கிராம்) மற்றும் 1.88 கிலோ (1,880 கிராம்) யூரியாவைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
61 நாள் முதல் 90 நாள் வரை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை, 19:19:19 உரம் 0.64 கிலோ (640 கிராம்), 0:0:50 உரம் 0.72 கிலோ (720 கிராம்) மற்றும் 1.32 கிலோ (1,320 கிராம்) யூரியாவைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதன் மூலம், அதிக மகசூல், நல்ல சந்தைக்கான காய்கள் மற்றும் நல்ல விலையைப் பெற முடியும். சொட்டுநீர்ப் பாசனமுறை, நீர்ச் சேமிப்பதில் உதவுவது மட்டுமின்றி, நிலத்தடி நீரில் கலந்து நைட்ரஜன் இழப்பையும் குறைக்கிறது. ஏனெனில், உரச் சத்துகள் வேர் மண்டலத்தில் மட்டுமே பயன்படுகின்றன.
முனைவர் வி.சங்கீதா,
தோட்டக்கலைத் தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், பெரம்பலூர்.