அனனாஸ் கொமோசஸ் என்னும் அன்னாசிப் பழச்செடி, வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த அன்னாசிப் பழம் மருத்துவத் தன்மைகள் மிக்கது. இப்பழப்பயிர், பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, உற்பத்தி இழப்பு ஏற்படக் கூடும். எனவே, இச்செடியில் தோன்றும் முக்கிய நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் இங்கே காணலாம்.
அடித்தண்டு அழுகல் நோய்
இந்நோய், செரடோசிஸ்டிஸ் பேரடாக்சா என்னும் பூசணத்தால் தோன்றக் கூடியது. இதனால் பாதிக்கப்படும் செடியின் அடித்தண்டில் அழுகல் ஏற்பட்டு, நார்கள் உள்ள பொந்தைப் போல் காணப்படும்.
குருத்தழுகல் நோய்
இந்நோய், பைட்டோப்தோரா சின்னமோமி என்னும் பூசணத்தால் தோன்றக் கூடியது. இதனால் பாதிக்கப்படும் செடியின் குருத்து இலைகள், மஞ்சளாக அல்லது தாமிரப் பழுப்பு நிறத்தில் இருக்கும். இவை, நாளடைவில் அழுகி இறந்து விடும். இத்தகைய இலைகளை இழுத்தால், எளிதில் வெளியே வந்து விடும்.
ஒருங்கிணைந்த நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
ஆழமாக நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீர்த் தேங்கினால் அடித்தண்டு அழுகல் நோய் தோன்றக் கூடும். எனவே, மேட்டுப் பாத்திகளை அமைத்து நடவு செய்வதன் மூலம், நீர்த் தேங்காமல் பராமரிக்கலாம். நோய்களால் பாதிக்கப்பட்ட செடிகளின் கழிவுகளை அகற்றி அழிக்க வேண்டும்.
புண்ணாக்கு வகைகள், மட்கு, மண்புழு உரம் போன்றவற்றை மண்ணில் இடலாம். நோய்க் காரணிகள் தங்குமிடமாகக் களைகள் இருப்பதால், நிலத்தைக் களையின்றிப் பராமரிக்க வேண்டும். நடவுக்கு முன், ஒரு சதவீத போர்டோ கலவை அல்லது 0.2 சதவீத மெட்டலாக்சில் கலவையில் நனைத்து நட வேண்டும்.
ரா.திலகவதி, பயிர் நோயியல் துறை, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.