நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மைத் துறையின் மூலம் செயல்பட்டு வரும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் (அட்மா) திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் குறைக்கப்பட்ட இரசாயன உரங்களின் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் தலைமை வகித்த, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, வேளாண்மைத் துறையின் மானியத் திட்டங்கள், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம், நுண்ணீர்ப் பாசனத் திட்டம், பயிர்க் காப்பீடு திட்டம், பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டம் ஆகிய திட்டங்கள் பற்றியும், உயிர்ம இடுபொருள்களின் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
முன்னிலை வகித்த, நாமக்கல் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மைத் துணை இயக்குநர் கோவிந்தசாமி, அட்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகள், செயல் விளக்கத் திடல்கள், பண்ணைப்பள்ளி, கண்டுணர்வுப் பயணம், விவசாயிகள் வேளாண்மை விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் உயிர் உரங்களின் பயன்கள், மண்புழு உரம் தயாரிப்பு, களர் உவர் நிலச் சீர்திருத்தம், இரசாயன உரங்களின் அளவைக் குறைத்து, கரிமச்சத்து அதிகரிக்க இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்துதல் குறித்து விளக்கம் அளித்தார்.
நாமக்கல் மாவட்ட மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் கலைராணி, மண் மாதிரி, நீர் மாதிரி எடுக்கும் முறைகள், மண், நீரைப் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், அதற்கேற்ற சாகுபடி முறைகள் மற்றும் உரமிடுதல் பற்றியும், இரசாயன உரங்களின் அளவைக் குறைப்பது பற்றியும், விளக்கமாக எடுத்துரைத்தார்.
மோகனூர் வட்டார உயிர்ம வேளாண்மைச் சான்றிதழ் பெற்ற இயற்கை விவசாயி வேலுசாமி, இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் முறை பற்றியும், இயற்கை விவசாயத்தின் நோக்கம், பயன்கள், சிறப்புகள் குறித்தும், விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.
நாமக்கல் வட்டார வேளாண்மை அலுவலர் காஞ்சனா, பஞ்சகவ்யம், ஜீவாமிருதம், கன ஜீவாமிருதம் குறித்தும், வேஸ்ட் டீ கம்போசரைப் பயன்படுத்தி. பண்ணைக் கழிவுகளை உரமாக்கல் மற்றும் மண்ணின் மலட்டுத் தன்மையை மாற்றியமைப்பது பற்றியும், இரசாயன உரங்களின் அளவைக் குறைத்து, இயற்கை உரங்களின் அளவை அதிகமாக பயன்படுத்துவது பற்றியும் விளக்கமளித்தார்.
வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபிநாத், சதீஸ்குமார், பெரியசாமி, திலீப்குமார், மாலதி ஆகியோர், துறை சார்ந்த மானியத் திட்டங்களை எடுத்துக் கூறினர். அட்மா திட்ட வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் இரமேஷ், அட்மா திட்டத்தின் செயல்கள் குறித்து விளக்கமளித்தார்.
இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கவிசங்கர், ஹரிஹரன் ஆகியோர், வருகை புரிந்த விவசாயிகளுக்கு, உழவன் செயலியின் பயன்களைக் கூறியும், பதிவேற்றம் செய்தும் காட்டினர்.
செய்தி: நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.