செய்தி வெளியான இதழ்: 2017 மே.
வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும் ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது.
இந்தியாவில் வெள்ளாடு ஏழைகளின் பசு என்று அழைக்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக ஆடு வளர்ப்புத் தொழில் விளங்குகிறது. பசு, எருமைகளை வளர்க்க முடியாதவர்கள், வெள்ளாடுகளை வளர்த்து வருமானத்தைப் பெருக்கலாம்.
ஆடுகளைச் சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும், மலைச் சரிவுகளிலும் மேயவிட்டு வளர்க்கலாம். இதற்காக அதிக இடமோ, அதிகச் செலவோ பிடிப்பதில்லை. எல்லா வகையான புல் பூண்டுகளையும், இலைதழைகளையும், மூலிகை கலந்த செடிகொடிகளையும் மற்ற கால்நடைகள் உண்ணாத பொருள்களையும் கூட உண்டு உயிர் வாழக் கூடியவை.
நம் நாட்டில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களுக்கும், வெள்ளாடு வளர்ப்பு வேலை வாய்ப்பையும், நிரந்தர வருமானத்தையும் கொடுக்கும் தொழிலாக விளங்குவதால், வெள்ளாடுகள் ஏழைகளின் நடமாடும் வங்கியாகக் கருதப்படுகின்றன.
வெள்ளாடுகளினால் கிடைக்கும் நன்மைகள்
குறைவான முதலீட்டில், குறைந்த செலவில் தீவனத்தைக் கொடுத்து வளர்க்கலாம். அதிக உற்பத்தி மற்றும் ஈனும் திறன், அதிகத் தீவன மாற்றுத்திறன் கொண்டவை. வெள்ளாட்டு இறைச்சி அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படுவது. கறிக்காகவும், பாலுக்காகவும், தோலுக்காகவும், உரத்துக்காகவும் வளர்க்கலாம். அதிகளவில் குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை. ஒரு ஈற்றில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும். இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டிகளை ஈனும்.
வெள்ளாட்டு இனங்களைத் தேர்வு செய்தல்
எந்த முறையில் வளர்க்கப் போகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, வெள்ளாட்டு இனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஜமுனாபாரி, பார்பாரி, பீட்டல், தலைச்சேரி ஆகிய இனங்கள் அதிகளவில் பாலைக் கொடுக்கும். ஜமுனாபாரி, போயர், சிரோகி ஆகிய இனங்கள் அதிகளவில் இறைச்சியைக் கொடுக்கும். தலைச்சேரி, பார்பாரி ஆகிய இனங்கள் அதிகளவில் குட்டிகளை ஈனும். அங்கோரா ஆடுகள் நல்ல உரோமத்தைத் தரும்.
தமிழ்நாட்டில் கொட்டில் முறை வளர்ப்பில், இறைச்சி உற்பத்தியை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் பண்ணைக்கு, போயர், ஜமுனாபாரி, தலைச்சேரி, சிரோகி ஆகிய இனங்கள் ஏற்றவை.
இனப்பெருக்கப் பராமரிப்பு
வெள்ளாடு வளர்ப்பில் இனப்பெருக்கப் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். கொட்டில் முறையில் வெள்ளாடுகளை வளர்க்க விரும்புவோர் நல்லதோர் இனச் சேர்க்கைக் கொள்கையைக் கடைப்பிடித்தல் அவசியம். ஏனெனில், அப்போது தான் தரமான குட்டிகளை உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட முடியும்.
பெட்டையாடுகள் 6-8 மாதத்திலும், கிடாக்கள் 8-10 மாதத்திலும் பருவமடையும். ஆனால், இனப்பெருக்கத் தகுதியைப் பெட்டையாடுகள் 12-15 மாதங்களிலும், கிடாக்கள் 18 மாதங்களிலும் அடைகின்றன. பொதுவாக, வெள்ளாடுகள் மே, ஜனவரி மாதங்களில் சினைக்கு வரும். எனினும், ஆண்டின் எத்தருணத்திலும் இனவிருத்திக்குத் தயாராகும்.
பெட்டையாடுகள் 19-21 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவத்துக்கு வருகின்றன. சினைப்பருவம் 24-28 மணி நேரம் நீடித்திருக்கும். சினைப்பருவ அறிகுறிகள் ஆரம்பித்த பிறகு 12 முதல் 24 மணி நேரத்தில், நல்ல தரமான கிடாவுடன் பெட்டையாட்டை இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனப்பெருக்கம் செய்ய, 20 முதல் 30 ஆடுகளுக்கு ஒரு பொலிக்கிடா போதுமானது.
சினைப்பருவ அறிகுறிகள்
சினைப்பருத்தில் உள்ள ஆடு அடிக்கடி கத்தும். நிதானமின்றியும், வாலை ஆட்டிக் கொண்டும், தீவனத்தில் விருப்பம் இல்லாமலும் காணப்படும். மற்ற ஆடுகளின் மேல் தாவும். தன்மேல் மற்ற ஆடுகளைத் தாவ அனுமதிக்கும். இனப்பெருக்க உறுப்பானது தடித்துக் காணப்படும். அதிலிருந்து வழவழப்பான திரவம் வெளிவரும். வெள்ளாடுகள் சினைத் தருணத்தை மிகுந்த வெளிப்படையாகக் காட்டாது. எனவே, பொலிக்கிடாவைக் காலை, மாலையில் அருகில் விட்டு, சினைத் தருணத்தை அறிந்து, தக்கபடி இனச்சேர்க்கை செய்யலாம்.
ஆடுகளின் சினைக்காலம் 145 முதல் 150 நாட்களாகும். சினையுற்ற ஆட்டின் வயிறு கருவூட்டல் செய்த இரண்டு மாதத்தில் பெரிதாகக் காணப்படும். காலை நேரத்தில் சினையாடுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம். ஏனெனில், காலை நேரத்தில் வெறும் வயிறாக இருக்கும் பொழுது சினையில்லா ஆடுகள் வயிறு ஒட்டியும், சினையாடுகளின் வயிறு பெரிதாகவும் காணப்படும்.
அதோடு வயிற்றின் கீழ்ப்பகுதியின் ஒருபுறத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு மறுபுறம் இருந்து மறு கையின் உதவியால் மென்மையாக அழுத்திப் பார்ப்பதன் மூலம், குட்டியின் இருப்புத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
ஈற்றுக்காலம்
குட்டி ஈனும் போது, ஆடு அமைதியற்றுக் கத்துவதுடன், வயிறு சுருங்கி விரிதல், அடிக்கடி உட்கார்ந்து எழுதல், மூச்சுத் திணறல், தரையைக் காலால் பிராண்டுதல் போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்ட ஒருமணி நேரத்தில் குட்டியை ஈன்று விடும்.
குட்டியானது முன்னங்கால்கள் இரண்டையும் நீட்டி, தலையைக் காலின் மேல் வைத்தபடி வெளிவரும். இரண்டு குட்டிகளை ஈனும் நேரமானது சற்றே வேறுபடும். அதாவது, முதலாவது குட்டிக்கும், இரண்டாவது குட்டிக்கும் இடையே உள்ள ஈனும் நேரமானது, சில நிமிடங்களில் இருந்து ஒருமணி நேரத்துக்கு மேலாகவும் ஆகலாம்.
குட்டியை ஈன்றபின் நஞ்சுக் கொடியானது 30 நிமிடம் முதல் 8 மணி நேரத்தில் வெளியே தள்ளப்பட்டு விடும். குட்டியை ஈன்ற ஆடுகளுக்குச் சரியான முறையில் அடர் தீவனமும், பசுந்தீவனமும் கொடுப்பதன் மூலம், அதன் கருப்பை சுருங்கி, 45 நாட்களில் மீண்டும் பருவச் சுழற்சி ஏற்படும். இல்லையெனில் 7 முதல் 9 மாதங்களுக்குப் பின்பே பருவச் சுழற்சி ஏற்படும்.
தீவனப் பராமரிப்பு: பசுந்தீவனம்
தானியவகைத் தீவனப் பயிர்கள்: இவ்வகைத் தீவனப் பயிர்களில் அதிகளவு மாவுச்சத்தும், ஓரளவு புரதச்சத்தும் உள்ளன. இவ்வகையில், தீவனச்சோளம் கோ.எப்.எஸ்.29, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியன முக்கியமானவை.
புல்வகைத் தீவனப் பயிர்கள்: இப்பயிர்களில், அதிகளவு மாவுச்சத்தும் ஓரளவு புரதச்சத்தும் உள்ளன. இவ்வகையில், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் (கோ-4), கொழுக்கட்டைப் புல், கினியாப்புல், மயில் கொண்டைப்புல் ஆகியன முக்கியமானவை. இவற்றில், உலர் பொருள் அடிப்படையில் புரதம் 5-10 சதவீதம் உள்ளது.
பயறுவகைத் தீவனப் பயிர்கள்: இப்பயிர்களில், அதிகப் புரதச்சத்து மற்றும் தாதுப்புகள் உள்ளன. இவ்வகையில், வேலிமசால், குதிரைமசால், தீவனத் தட்டைப்பயறு, தீவனச் சோயா மொச்சை, கொள்ளு, நரிப்பயறு ஆகியன முக்கியமானவை. பயறுவகைப் பசுந்தீவனங்களைப் புல்வகைத் தீவனங்களுடன் கலந்து ஆடுகளுக்குக் கொடுப்பது அடர் தீவனத்தைக் கொடுப்பதற்குச் சமமானது.
மரவகை தீவனப் பயிர்கள்: இப்பயிரகளில், அதிகப் புரதச்சத்து நிறைந்துள்ளது. இவ்வகையில், சூபாபுல், கிளைரிசிடியா, அகத்தி, சித்தகத்தி ஆகியன முக்கியமானவை.
பசுந்தீவனம் கொடுக்கும் அளவு: வளரும் குட்டிகளுக்குத் தினந்தோறும் அரைக்கிலோ முதல் 1 கிலோ வரை பசுந்தீவனம் தேவைப்படும். சுமார் 20 முதல் 40 கிலோ எடையுள்ள வெள்ளாடுக்குத் தினந்தோறும் 1 கிலோ முதல் 2 கிலோ வரை பசுந்தீவனம் தேவைப்படும்.
அடர் தீவனம்
வெள்ளாடுகளுக்குத் தீவனப் புற்களைக் கொடுத்தால் மட்டும் போதாது. இவற்றின் தேவைக்குத் தக்கவாறு அடர் தீவனமும் அளிக்கப்பட வேண்டும். அடர் தீவனக் கலவையை நாள் ஒன்றுக்கு, வளரும் இளம் ஆட்டுக்கு 100 கிராமும், பெரிய ஆடு மற்றும் சினை ஆட்டுக்கு 250 கிராமும், பொலிக் கிடாவுக்கு 400 கிராமும் கொடுக்க வேண்டும்.
உலர் தீவனம்
வெள்ளாடுகளுக்கு உலர் தீவனமாகச் சோளத்தட்டு, கடலைக்கொடி, கொள்ளு மற்றும் நரிப்பயறு போன்ற காய்ந்த பயறுவகை தீவனங்களை அளிக்கலாம். இவற்றை மானாவாரி நிலங்களில் பருவ மழைக் காலங்களில் விதைத்து, பூக்கும் போது அறுவடை செய்து உலர்த்தி, சேகரித்து வைப்பதன் மூலம், மேய்ச்சல் குறைந்த கோடையில் ஆடுகளுக்கு அளிக்கலாம்.
நோய்ப் பராமரிப்பு
வெள்ளாடுகளை, அடைப்பான், தொண்டை அடைப்பான், நிமோனியா, டெட்டானஸ், துள்ளுமாரி நோய் போன்ற நுண்ணுயிரிகளால் உண்டாகும் நோய்களும், ஆட்டம்மை, கோமாரி, ஆட்டுக்கொல்லி நோய், நீலநாக்கு நோய் போன்ற நச்சுயிரிகளால் உண்டாகும் நோய்களும் தாக்குகின்றன. இந்நோய்களைத் தடுக்க ஆண்டுதோறும் பருவமழை தொடங்கு முன்பும், கோடைக்காலம் தொடங்கு முன்பும் தடுப்பூசிகளைப் போட்டுவிட வேண்டும்.
தடுப்பூசி அட்டவணை
கோமாரி நோய்: முதல் தடுப்பூசி 2 மாதத்தில். தொடர் தடுப்பூசி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை.
ஆட்டுக்கொல்லி நோய்: முதல் தடுப்பூசி 3-4 மாதத்தில். தொடர் தடுப்பூசி ஆண்டுக்கு ஒருமுறை.
துள்ளுமாரி நோய்: முதல் தடுப்பூசி 6 வாரத்தில். தொடர் தடுப்பூசி ஆண்டுக்கு ஒருமுறை.
ஆட்டம்மை: முதல் தடுப்பூசி 3-4 மாதத்தில். அடுத்து, நோய் காணும் பகுதியில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை.
டெட்டானஸ் தடுப்பூசி: குட்டி ஈனுவதற்கு 6 – 8 வாரத்துக்கு முன்.
குடற்புழுத் தாக்கம்
ஆடுகளைத் தட்டைப்புழு, நாடாப்புழு, உருண்டைப்புழு போன்ற மூன்று வகையான குடற் புழுக்கள் தாக்குகின்றன. இவற்றின் தாக்கம் கண்ட ஆடுகளில், வயிற்றுப்போக்கு, இரத்தச்சோகை, வளர்ச்சியின்மை, தாடை வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்தக் குடற்புழுத் தாக்கத்தைச் சாணப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
குடற்புழு நீக்கம்
பொதுவாக, மூன்று மாத இடைவெளியில் ஆண்டுக்கு நான்கு முறை கால்நடை மருத்துவரின் ஆலோசனையில், அந்தந்த இடம் மற்றும் புழுக்களின் பாதிப்புக்கு ஏற்ப, குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும். ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில், தட்டைப் புழுக்களுக்கான மருந்தை அளிக்க வேண்டும்.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில், உருண்டை மற்றும் நாடாப் புழுக்களுக்கான மருந்தை அளிக்க வேண்டும். ஜூலை முதல் செப்டம்பர் வரையில், தட்டைப் புழுக்களுக்கான மருந்தை அளிக்க வேண்டும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையில், உருண்டை மற்றும் நாடாப் புழுக்களுக்கான மருந்தை அளிக்க வேண்டும்.
மரு.வ.பா.இராகவேந்திரன், த.பார்த்திபன், சி.நவீன் குமார், முனைவர் அ.வேலாயுதம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிக்குளம், திருநெல்வேலி மாவட்டம்.