மரமோ செடியோ நானறியேன்;
கறிவேப்பிலையே
மணமும் சுவையும் நீ கொண்டாய்!
மருந்தோ உணவோ நானறியேன்;
கறிவேப்பிலையே
மாந்தர் சுகமே நீயானாய்!
நமது சமையலில் கறிவேப்பிலை தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. காய், குழம்பு, இரசம், மோர் ஆகியவற்றில் கறிவேப்பிலை தாளிதப் பொருளாகப் பயன்படுகிறது. கறிவேப்பிலையைப் பயன்படுத்தும் போது உணவுக்குக் கிடைக்கும் மணம், உணவில் சுவையையும், விரும்பி உண்ணும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதால், இதை, உணவுக்கெல்லாம் தாய்ப்பிள்ளை என்று அழைப்பதுண்டு.
கறிவேப்பிலை, கருவேப்பிலை, கறியபிலை எனப் பல பெயர்களில் அழைக்கப்படும். இதன் தாவரப் பெயர் murraya keonigii என்பதாகும். வேம்பினத்தைச் சார்ந்த இதில், நாட்டுக் கறிவேப்பிலை, காட்டுக் கறிவேப்பிலை என இரண்டு வகைகள் உண்டு. நாட்டுக் கறிவேப்பிலை உணவாகும். காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகும். காட்டுக் கறிவேப்பிலை இலை சற்றுப் பெரிதாகவும், கசப்புத் தன்மை மிகுதியாகவும் இருக்கும். இதன் வளரியல்பைச் சிறுமரம் அல்லது பெருஞ்செடி என்று சொல்லலாம். இந்தியாவில், மலை, காடுகளில் ஏராளமாக வளர்கிறது. வீட்டுக் கொல்லையிலும் வளர்க்கலாம்.
கறிவேப்பிலை இலை, ஈர்க்கு, பட்டை, வேர் ஆகியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படும். இது, சிறு கார்ப்பாகவும் வெப்பத் தன்மை மிக்கதாகவும் இருக்கும். பொதுவாக, நாட்டுக் கறிவேப்பிலையில் சில, இனிப்பு, துவர்ப்பு, நறுமணம் ஆகிய தன்மைகளைக் கொண்டிருக்கும். கறிவேப்பிலை, பசியைத் தூண்டி உடம்பை உரமாக்கும். உடலின் நீரை வற்றச் செய்யும்.
வயிற்றில் வாயுவைப் பிரித்துக் குடலில் மலவாயுக்கட்டு ஏற்படாமல் காக்கும். நீரக உணவுகளில் இது சேர்வதால், அவ்வுணவுகள் நறுமணத்தையும் சுவையையும் பெற்றுச் சுரவேக ஆற்றலைத் தணிக்கும். இது, இரைப்பைக்கு வலுவைக் கொடுக்கும் என்றாலும், குடல் வறட்சியை உண்டாக்கும். ஆகையால், இதை அமுதமாக்க, இது சேர்ந்த உணவுகளில் கொஞ்சம் நெய்யைச் சேர்த்து உண்பது வழக்கம்.
பிணிக்கு மருந்தாகத் தரப்படும் பத்திய உணவில் கறிவேப்பிலைத் துவையலுக்கு முக்கிய இடமுண்டு. வயிற்றோட்டம், செரியாக் கழிச்சல், உண்டதும் மலங்கழிக்கும் வேக இயல்பு (reflex) ஆகிய தொல்லைகளை உடையவர்கள், தொடர்ந்து கறிவேப்பிலைத் துவையலை உணவில் சேர்த்து வந்தால், படிப்படியாக இவை விலகிக் குடல் நலமாகும். மிக அதிகமாக உண்பவர்கள், முதலில் கறிவேப்பிலைத் துவையலைக் கலந்து கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, அடுத்து உணவை எடுத்துக் கொண்டால், அவ்வுணவு எளிதில் செரிக்கும்.
பத்திய உணவுக்கான கறிவேப்பிலைத் துவையலைத் தயாரிக்க, சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நீர்விட்டு அரைக்க வேண்டும். இந்தத் துவையல், சுவையின்மை, வயிற்றில் வாயு மந்தம், பித்த வாந்தி, உணவு செரியாமை, வயிற்று உளைச்சல் ஆகியவற்றுக்கு அருமருந்தாகும்.
வழக்க முறைகள்
ஒரு பங்கு கறிவேப்பிலையுடன் அதே அளவில் மிளகு, இந்துப்பு, சீரகம், தோலை நீக்கிய சுக்கு, பொரித்த பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து இடித்துப் பத்திரமாக வைத்துக் கொண்டு, மதிய உணவில் சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்துப் பிசைந்து முதலில் கொஞ்சம் சாப்பிட்ட பிறகு, மற்ற உணவுகளைச் சாப்பிடுதல் வழக்கம்.
ஒரு பிடி கறிவேப்பிலையுடன் சிறிது சீரகம், மஞ்சளைச் சேர்த்து நீரிட்டு அரைத்துப் புன்னைக்காய் அளவு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், உடலில் பித்தத் தாது மிகுதியால் ஏற்படும் பிறழ்ந்த மனநலம் இயல்பாகும்.
கறிவேப்பிலைப் பொடியுடன் கொஞ்சம் கற்கண்டைச் சேர்த்துக் காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டி அளவில் ஆறிய வெந்நீருடன் அருந்தி வந்தால், நீர்க்கோவை, சூதக வாயு ஆகியன அகலும். கறிவேப்பிலை ஈர்க்கின் புறணியைத் தாய்ப்பாலில் இட்டு இடித்துச் சாறெடுத்து, கிராம்பு, திப்பிலியை இதில் ஊற வைத்து, இந்தச் சாற்றினை இரண்டு, மூன்று முறை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்களுக்கு ஏற்படும் வாந்தி நின்று பசி உண்டாகும்.
கறிவேப்பிலை ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு ஆகியவற்றைச் சேர்த்து இடித்து நீரை விட்டுக் காய்ச்சி, காலை, மதிய வேளைகளில் அருந்தினால், பித்த மிகுதியால் ஏற்படும் வாந்தி குணமாகும். கறிவேப்பிலை வேரிலிருந்தும், விதையிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெய், உடலைத் தேற்றும் சித்த மருந்துகளில் பயன்படுகிறது.
கறிவேப்பிலைக் கஞ்சி
கறிவேப்பிலையை அரிசியுடன் சேர்த்து உரலில் இட்டுக் குத்தித் தேய்த்துப் புடைத்து எடுத்துக் கொண்டு, இத்துடன் வறுத்த மிளகாய் வற்றல், சுட்ட வசம்பு, சிறுநாகப்பூ, அதிவிடயம் ஆகியவற்றை வகைக்கு ஐந்து கிராம் சேர்த்து, நீரை விட்டுக் காய்ச்சிக் குடித்தால், செரியாமையால் உண்டாகும் பேதி, மந்தம், வயிற்றுப் பொருமல் ஆகியன அகலும்.
மரு.ப.குமாரசுவாமி,
மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு– 603001.