My page - topic 1, topic 2, topic 3

சமவெளிப் பகுதியில் மிளகு உற்பத்தி!

றுப்புத் தங்கம் எனப்படும் மிளகு, வாசனைப் பயிர்களில் தனித் தன்மை மிக்கது. தலை சிறந்த மணமூட்டும் பொருளாக இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் தொன்று தொட்டுப் பயன்பட்டு வருகிறது. சிறப்பான மணமூட்டும் குணத்தால், வாசனைப் பயிர்களின் அரசன் (King of Spices) எனப்படுகிறது.

கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், காப்பியில் ஊடுபயிராகப் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில், கீழ்ப்பழனி மலை, சேர்வராயன் மலை, நீலகிரி, சிறுமலை, கொல்லிமலை, கல்வராயன் மலை மற்றும் மேகமலைப் பகுதியில் அதிகப் பரப்பில் விளைகிறது.

இப்படி, மலைப் பகுதிகளில் மட்டும் தான் மிளகைப் பயிரிட முடியும் என்னும் நிலைக்கு மாறாக, சமீப ஆண்டுகளில் சமவெளிப் பகுதி தென்னந் தோப்புகளிலும் சிறப்பாகப் பயிரிடப்படுகிறது. சமவெளிப் பகுதியில் தென்னை அல்லது கல்யாண முருங்கை, கிளுவை ஆகியவற்றைப் படர் மரங்களாகப் பயன்படுத்தலாம்.

தட்பவெப்ப நிலை

மிளகு மித வெப்பப் பயிர். இதை 10-40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பயிரிடலாம். எனினும், 20-22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிகவும் உகந்தது. ஆண்டுக்கு 150-250 செ.மீ. மழையுள்ள இடங்களில் மிளகை சாகுபடி செய்யலாம். கடல் மட்டத்திலிருந்து 400-1,500 மீட்டர் உயரமுள்ள மலைப்பகுதிகள் மிளகு சாகுபடிக்கு மிகவும் உகந்தவை.

மண்வளம்

அதிக இலை மட்கும், நல்ல வடிகால் வசதியும் உள்ள இருமண் பாங்கான நிலம் மிகவும் ஏற்றது. குறைந்தது 40 செ.மீ.க்கு மேல், மண் கண்டம் இருக்க வேண்டும். மண்ணின் கார அமிலத் தன்மை 5.5-7.0 இருக்க வேண்டும்.

மிளகு இரகங்கள்

மிளகில் பல இரகங்கள் இருப்பினும், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற இரகங்கள் வேறுபடுகின்றன. சமவெளிப் பகுதியில் பயிரிட, பன்னியூர்-1, கரிமுண்டா, கொட்டநாடன் ஆகிய இரகங்கள் மிகவும் ஏற்றவை.

பயிர்ப் பெருக்கம்

கொடிக்குச்சிகள் தயாரித்தல்: வீரிய வளர்ச்சி, அதிகக் காய்ப்புத் திறன் மற்றும் நீளமான சரத்தைக் கொடுக்கும் தாய்க் கொடிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அவற்றில் ஓடும் கொடிகள், செடியின் அடிப்பாகத்தில் வளர்ந்து தரையில் படர்ந்து கிடக்கும். இத்தகைய கொடிகளின் நடுப்பகுதியில் இருந்து கொடிக் குச்சிகளை எடுக்க வேண்டும்.

கொடிக்குச்சிகள் உற்பத்திக்கு ஏற்ற காலம், பிப்ரவரி மார்ச் மாதங்கள் ஆகும். மண் வளத்துக்கு ஏற்ப, நன்கு மட்கிய தொழுவுரத்தை மணலுடன் கலக்க வேண்டும். இந்த மண் கலவையை நெகிழிப் பைகளில் நிரப்பு முன், சூடோமோனாஸ் புளுரசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகிய இயற்கைப் பூசணக் கொல்லிகளைக் கலந்தால் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் ஐ.பி.ஏ. என்னும் வளர்ச்சி ஊக்கி வீதம் கலந்து (1000 பி.பி.எம்.) அதில் கொடிக்குச்சிகளின் அடிப்பாகத்தை 45 நிமிடங்கள் நனைத்து எடுத்து, நெகிழிப் பைகளில் ஒரு கணு மண்ணுக்குள் இருக்கும்படி நட வேண்டும். பிறகு, பூவாளி மூலம் நீரைச் சீராகத் தெளிக்க வேண்டும்.

இப்படி நட்ட கொடிக்குச்சிகளைப் பனிக்கூடாரம் (Mist Chamber) அல்லது மிதமான நிழலில் வைத்துப் பராமரித்தால், ஒரு மாதத்தில் புதிய துளிர் விட்டு வளரத் தொடங்கும். நன்கு வேர்விட்ட குச்சிகளை, தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நடவு செய்யலாம்.

நடவு முறை

சமவெளி நிலங்களிலும், மலைச் சரிவுகளிலும் மிளகை நடலாம். வடக்கு, வடகிழக்குச் சரிவுகள், மிளகை நடுவதற்கு ஏற்றவை. இதனால், கடும் வெய்யிலில் இருந்து இளம் மிளகுக் கொடிகளைப் பாதுகாக்கலாம். படர் மரத்தின் தூரிலிருந்து 30 செ.மீ. தள்ளி, 30 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளைத் தோண்டி, குழிக்கு 10 கிலோ கம்போஸ்ட் உரம் மற்றும் மேல் மண்ணைக் கலந்து குழிகளை நிரப்பி 15 நாட்கள் ஆறவிட வேண்டும்.

தொழுவுரத்தில் 10 கிராம் சூடோமோனாஸ், 10 கிராம் டிரைக்கோடெர்மா வீதம் கலக்க வேண்டும். இதனால், வாடல் நோயைத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்தலாம். ஒரு குழிக்கு 2 மிளகுக் கொடிகள் வீதம் எடுத்து, படர் மரத்தை நோக்கிச் சாய்வாக, குழியின் நடுவில் நட வேண்டும்.

நடும் போது, வேரைச் சுற்றியுள்ள மண் விழாத வகையில், நெகிழிப் பையின் அடிப்பாகத்தைக் கிழித்து விட்டு நட வேண்டும். மிளகுக் கொடிகள் படர் மரத்தில் ஏறுவதற்கு ஏதுவாக, குச்சிகளைச் சாய்வாக நட்டு வைக்க வேண்டும்.

போதிய நிழல் இல்லாத இடங்களில் கோடை வெய்யிலைத் தாங்கும் வகையில், இளம் கொடிகளைச் சுற்றி மரத்தழைகள் மற்றும் சிறு கிளைகளை இட்டு நிழல் கிடைக்கச் செய்யலாம். ஆண்டுக்கு 2-3 முறை கொடிகளைச் சுற்றியுள்ள களைகளை நீக்கி, மண் அணைப்பது நல்லது.

உரமிடுதல்

பரிந்துரை செய்யப்பட்ட உரங்களைச் சமமாகப் பிரித்து ஏப்ரல்- மே மற்றும் ஆகஸ்ட்- செப்டம்பரில் இட வேண்டும். மூன்று வயது மிளகுக் கொடிக்கு, 10 கிலோ தொழுவுரம், 150 கிராம் தழைச்சத்து, 50 கிராம் மணிச்சத்து, 150 கிராம் சாம்பல் சத்து, 25 கிராம் மக்னீசியம் சல்பேட் வீதம் இட வேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, தூரைச் சுற்றி 500 கிராம் சுண்ணாம்பை இட்டால், மண்ணின் அமிலத்தன்மை சரியாகி, கொடிகள் நன்றாக வளரும்.

வளர்ச்சி ஊக்கி

மிளகில் மகரந்தச் சேர்க்கை நீர் மூலமே நடைபெறுகிறது. எனவே, மிளகு பூத்த 40 நாளில் நீரைத் தெளிக்க வேண்டும். அடுத்து, 10 நாட்கள் கழித்து, 4.5 லிட்டர் நீருக்கு 4 மி.லி. பிளானோபிக்ஸ் வீதம் கலந்து தெளித்தால், காய்கள் அதிகமாகப் பிடித்து நன்கு வளரும்.

பயிர்ப் பாதுகாப்பு

நாற்றங்காலில் மிளகைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது அடித்தண்டு அழுகல் நோயாகும். நாற்றங்காலில் நல்ல நிழல் இருத்தல், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருத்தல் மற்றும் குளிர்ச்சியான சூழலில், இந்த நோயின் தாக்கம் ஏற்படும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு சத போர்டோ கலவை அல்லது 0.1 சத மெட்டலாக்சைல் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

பொல்லு வண்டு

இப்பூச்சி, 30 முதல் 40 சதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இதன் புழுக்கள், வளரும் குருத்து, இளந்தண்டு, இலைக்காம்பு, சரங்கள் மற்றும் மிளகு மணிகளைத் தாக்கும். சீரான இடைவெளியில், மிளகுக்கொடி தூரைச் சுற்றியுள்ள மண்ணைக் கிளறி, கார்பரில் பத்து சதத் தூளை இட்டு, கூட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

திடீர் வாடல் நோய்

இந்நோய், நாற்றங்காலிலும், இளம் கொடிகள் மற்றும் மகசூல் தரும் கொடிகளையும் தாக்கும். பருவமழைக் காலத்தில் அதிகமாக இருக்கும்.

தடுப்பு முறைகள்: நாற்றங்கால்: நல்ல கொடிகளில் இருந்து நடவுக்கான வேர்க்குச்சிளை எடுக்க வேண்டும். இந்தக் குச்சிகளை 0.25 சதம் காப்பர் ஆக்ஸி குளோரைடு கலவையில் நனைத்து நட வேண்டும். நடவுக்கு முன், நடவுப் பைகளிலுள்ள மண் நன்கு நனையும்படி 1 சத போர்டோ கலவை அல்லது 0.25 சத காப்பர் ஆக்ஸி குளோரைடு கலவையை ஊற்ற வேண்டும்.

வளர்ந்த கொடிகளில் நோய்த் தடுப்பு: கீழே படரும் மிளகுக் கொடிகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும். தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரம் வரையுள்ள பக்கக் கொடிகளை நீக்கி விட வேண்டும். மழைக் காலத்தில் கொடியின் தூரில் நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நோயுற்ற கொடிகளைத் தூருடன் அகற்றி எரித்துவிட வேண்டும். அந்த இடத்தில் 2-3 லிட்டர் வீதம் ஒரு சத போர்டோ கலவை அல்லது 0.25 சத காப்பர் ஆக்ஸி குளோரைடு கலவையை, மண் நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும். அடுத்து இந்தக் குழிகளில் ஓராண்டுக்குப் பிறகு தான் புதிய மிளகுக் கொடிகளை நட வேண்டும். இந்தக் குழிகளில் 250 கிராம் சுண்ணாம்புத் தூள் மற்றும் மட்கிய 15 கிலோ தொழுவுரம் வீதம் இட வேண்டும்.

மெதுவாடல் நோய்

இதனால் தாக்கப்பட்ட கொடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். நோய் முற்றிய நிலையில், இலைகள் பின்னோக்கிக் கருகி உதிர்ந்து விடும். பெரும்பாலும் அக்டோபர், நவம்பர் மாதங்களுக்குப் பிறகு, அதாவது, பருவ மழைக்குப் பிறகு, இந்த நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் தீவிரமடையும்.

இதைக் கட்டுப்படுத்த, ஒரு கொடிக்கு முப்பது கிராம் போரேட் குருணை மருந்து வீதம் எடுத்து, மே ஜூன் மற்றும் ஆகஸ்ட் செப்டம்பரில் இட வேண்டும். ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் மண்ணில் இட்டுக் கிளறி விட வேண்டும்.

அறுவடை

மிளகுக் கொடிகள், நட்ட 2.5-3 ஆண்டுகளுக்குப் பிறகு காய்க்கத் தொடங்கும். ஆனால், நிறைவான காய்ப்புக்கு ஆறு ஆண்டுகள் ஆகும். பூக்கள் பூத்து, காய்த்து, காய்கள் முதிர, ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். மலைச்சரிவு மற்றும் சமவெளியில் நவம்பர்- ஜனவரி காலத்திலும், மலைத் தோட்டங்களில் ஜனவரி- மார்ச் காலத்திலும் அறுவடை செய்யலாம்.

பருவங்கள் மற்றும் இரகங்களுக்கு ஏற்ப மகசூல் வேறுபடும். மிளகுக் கொடிகள் படர் மரங்களில் உயரமாகப் படர்ந்து செல்வதால், ஏணிகளை வைத்து அறுவடை செய்வது வழக்கம். மிளகுச் சரங்களில் ஒன்றிரண்டு காய்கள் பச்சை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறமாக அல்லது வெளிர் ஊதா நிறமாக மாறும் போது அறுவடை செய்ய வேண்டும். மிளகுச் சரங்களை மெதுவாக அறுத்து எடுக்க வேண்டும்.

பிறகு, மிளகுக் காய்களைச் சரங்களில் இருந்து சேகரிக்க வேண்டும். நூறு கிலோ பச்சைக் காய்களில் இருந்து 33-37 கிலோ கருமிளகு கிடைக்கும். நன்கு முதிராத காய்கள் ஊறுகாய்த் தயாரிக்கப் பயன்படும்.

வெள்ளை மிளகுத் தயாரிப்பு

வெள்ளை மிளகைத் தயாரிக்க, காய்கள் நன்கு முதிர்ந்த பிறகு, அதாவது, காய்கள் செந்நிறத்தை அடைந்ததும் அறுவடை செய்ய வேண்டும். பிறகு, மிளகுச் சரங்களில் இருந்து காய்களைப் பிரித்தெடுக்க வேண்டும். இந்தக் காய்களை 7-10 நாட்கள் நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, நீரிலிருந்து எடுத்துக் குவித்து நல்ல துணியால் மூடி வைக்க வேண்டும். இதனால், காய்களில் நொதித்தல் (Fermentation) ஏற்பட்டு, மிளகுத் தோலும் விதையும் பிரியும்.

பிறகு, கருந்தோலை விதைகளில் இருந்து பிரித்தெடுக்க வேண்டும். இந்த விதைகளை நல்ல நீரில் கழுவி அழுகிய பகுதி மற்றும் கருந்தோலை நீக்க வேண்டும். இப்படித் தயாரிக்கப்பட்ட வெள்ளை மிளகில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், வெய்யிலில் நன்கு காய வைக்க வேண்டும்.

சேமிப்பு

மிளகை நீண்ட காலம் சேமிக்க, சுத்தமான சணல் பைகள் மற்றும் மூடியுடன் கூடிய பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், காய்ந்த மிளகின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கலாம். தேவைப்படும் போது வெய்யிலில் உலர்த்துதல் மூலம், பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.


முனைவர் இரா.ஜெயவள்ளி, முனைவர் ஜே.சுரேஷ், முனைவர் இரா.அருள் மொழியான், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks