நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பேபிகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெல் 8,700 எக்டரிலும், சிறுதானியப் பயிர்கள் 76,000 எக்டரிலும், பயறுவகைப் பயிர்கள் 12,000 எக்டரிலும், எண்ணெய் வித்துப் பயிர்கள் 33,000 எக்டரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பயிர்களை வேளாண்மைத் துறையின் விதைப் பண்ணைகள் திட்டத்தில் பதிவு செய்தால், களப் பணியாளர்களின் வழிகாட்டுதல், கண்காணிப்பு மற்றும் உயர் தொழில் நுட்பங்களைப் பின்பற்றி சாகுபடி செய்ய வேண்டும்.
இதனால், சராசரியாகப் பெறும் மகசூலை விடக் கூடுதலாக மகசூலை ஈட்ட முடியும். அத்துடன், விதைப் பண்ணை மூலம் பெறப்படும் விதைகளுக்கு, சந்தை விலையை விடக் கூடுதலாக, அரசு டான்சிடா கொள்முதல் விலையைப் பெற முடியும், இதனால், விவசாயிகள் நல்ல வருவாயை ஈட்ட முடியும்.
நடப்பாண்டில் விதைப்பண்ணை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, நெற்பயிர் தலா 1.0 எக்டரிலும், சிறுதானியங்கள் ஆதி திராவிடர் 2.50 எக்டரிலும், பழங்குடியினருக்கு 1.40 எக்டரிலும், பயறுவகைப் பயிர்கள், ஆதி திராவிடருக்கு 5.70 எக்டரிலும், பழங்குடியினருக்கு 3.2 எக்டரிலும், எண்ணெய் வித்துப் பயிர்கள், ஆதி திராவிடருக்கு 10.0 எக்டரிலும், பழங்குடியினருக்கு 8.0 எக்டரிலும், விதைப்பண்ணை அமைத்துப் பயன் பெற, தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, நடப்புப் பருவத்தில் நெல், சிறுதானியங்கள், பயறுவகைப் பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதிகளவில் விதைப் பண்ணைகளை அமைத்துப் பயனடையலாம். இதற்கு, அவரவர் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
செய்தி: வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், நாமக்கல்.