தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நடப்பாண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 22 பேர், அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வகையில், காய்கறி அறிவியல் துறையில், பேராசிரியர் முனைவர் க.சுந்தரயா தலைமையில், பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையில், அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடுதல் என்னும் கல்வி முறையின் கீழ், சுமார் அரை ஏக்கர் பசுமைக் குடிலில், வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இப்பயிற்சிக் கல்வி, திறந்த சாகுபடியை விட பாதுகாக்கப்பட்ட சாகுபடி, அதிக உற்பத்தித் திறன் மற்றும் சிறந்த தரத்தை உறுதி செய்கிறது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பசுமைக்குடிலில், தட்பவெப்ப நிலை, சூரிய ஒளி, ஈரப்பதம் ஆகியன, முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் அதிக மகசூலைப் பெற முடிகிறது.
வெள்ளரியின் மருத்துவப் பயன்கள் குறித்து, பேராசிரியர் முனைவர் க.சுந்தரயா கூறியதாவது:
பசுமைக்குடில் வெள்ளரிக்காய், அதாவது, குக்குமிஸ் சடைவஸ் எல். என்பது, உலகளவில் பயிரிடப்படும் பொதுவான மற்றும் முக்கியமான பயிராகும். வெள்ளரியின் இளம் பிஞ்சு, சாலட் செய்யவும், முதிர்ந்த வெள்ளரி, காய்கறியாகவும் பயன்படும். இந்தியாவில் பழங்காலத்தில் இருந்தே, இது, உணவாக அல்லது மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.
வெள்ளரிக்காயில் 96 சதம் நீர் உள்ளது, இது, கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் காக்கிறது. உடல் நலம் மற்றும் சரும நலனுக்குப் பயன்படுகிறது. வெள்ளரிக்காய், மாலிப்டினம், வைட்டமின், பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாக விளங்குகிறது.
எனவே, தோல் பிரச்சனைகள், சிறுநீரகம் மற்றும் இதய பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது. இது, தமனிகளில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து நீரேற்றமாக வைத்திருக்கிறது. வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது என்றார்.
மேலும், வெள்ளரி சாகுபடி குறித்து அவர் கூறியதாவது: வெள்ளரி, மெல்லிய கொடி இனத்தைச் சார்ந்தது. இதன் இலைகள் பெரியதாக, வெள்ளை ஊசி போன்ற முட்களுடன் இருக்கும். மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
வெள்ளரி சாகுபடி நிலம், நல்ல வடிகால் வசதியுடன் கூடிய, கரிமப் பொருள்கள் மிகுந்த மணல் கலந்த களிமண் மண் மற்றும் 2 dS/m க்கும் குறைவான மின் கடத்துத் திறன் மற்றும் கார அமிலநிலை 6.5-7.5 வரை உள்ளதாக இருக்க வேண்டும் என்றார்.
சி.பவன் குமார், தோட்டக்கலை இறுதியாண்டு மாணவர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்.