முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம், பழங்காலம் முதல் மனிதனின் உணவாகப் பயன்பட்டு வரும் முக்கியப் பழமாகும். இது, தாவர முறைப்படி மூசா எனப்படுகிறது. சைட்டாமினே குடும்பத்தையும், முசேசியே என்னும் துணைக் குடும்பத்தையும் சார்ந்தது. இதன் தாயகம் ஆசிய கண்டமாகும். உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
ஆதாமின் அத்தி மற்றும் சொர்க்கத்தின் ஆப்பிள் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்ட வாழை, இந்தியாவில் முக்கிய உணவுப் பயிராகப் பயிரிடப்படுகிறது. இதன் பழங்கள் மட்டுமின்றி, இலை, பூ, தண்டு, காய் போன்ற பாகங்களும் பயன்மிகு பொருள்களாகும். ஆகவே, இந்தியாவில் பயிரிடப்படும் பழப்பயிர்கள் பரப்பில், மாங்கனிக்கு அடுத்த இடத்தையும், உற்பத்தியில் முதலிடத்தையும் வாழை பெறுகிறது.
வாழைப்பழம், சர்க்கரை மற்றும் மாவுச்சத்து வடிவில் ஆற்றல் நிறைந்த ஆதாரமாக உள்ளது. எல்லா வயதினரும் உண்ணும் இனிப்புப் பழமாக உள்ளது. இது நல்ல மலமிளக்கியாகும். கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், ரிபோஃப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் கால்சியம், மெக்னீனிசியம், கந்தகம் ஆகிய தாதுகளின் வளமான ஆதாரமாக விளங்குகிறது.
வாழைப்பழம், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் முக்கிய உணவுப் பொருளாகும். நூறு கிராமுக்கு 67-137 என்னும் கலோரிஃபிக் மதிப்புடன் எளிதில் செரிக்கும் கார்போஹைட்ரேட்களின் வளமான ஆதாரமாக இது உள்ளது. மேலும், இதில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் அல்லது சோடியம் இல்லை.
இந்தியாவின் மொத்தப் பழங்கள் உற்பத்தியில் வாழைப்பழம் 37 சதமாகும். இந்தியாவில் விளையும் மொத்த நிலப்பரப்பில் வாழை 20 சதவீதப் பரப்பைப் பிடித்துள்ளது. அதாவது, இந்தியாவில் 880 ஆயிரம் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது. மொத்த உற்பத்தி சுமார் 32,454 ஆயிரம் டன்கள்.
தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, தூத்துக்குடி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக விளைகிறது. உற்பத்தி, உற்பத்தித் திறன், சந்தைப்படுத்தல் மற்றும் வருமானம் பற்றிய தகவல்கள் ஆகியவற்றால், விவசாயப் பொருள்கள் உற்பத்தி, குறிப்பாகப் பழங்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகமாகப் பயன்படுவது வாழைப்பழம் தான்.
இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த வாழையில் மிகவும் சிறப்பு மிக்கது நெய்ப்பூவன் வாழையாகும். நல்ல வடிகாலும், ஆழமான மண்கண்டமும் உள்ள வளமான நிலத்தில் அதிக மகசூலை ஈட்டித் தரும்.
நெய்ப்பூவன் (ஏபி) சிறிய பழம். ஒத்த சொற்கள், இரசகதலி, ஏலக்கி, செனொரீடா மற்றும் நல்லிப்போவன். இது, சிறந்த டிப்ளாய்டு இரகமாகும். கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் வணிக நோக்கில் சாகுபடியில் உள்ளது. கேரளத்தில் கொல்லைப்புற வளர்ப்பாக இருந்த இந்த வாழை, தற்போது பெரியளவிலான சாகுபடிக்கு மாறி வருகிறது.
நெய்ப்பூவன் குலையில், 12-14 மாதங்களுக்குப் பிறகு, 15-30 கிலோ எடையுள்ள பழங்கள் கிடைக்கும். அடர் பச்சைநிறப் பழங்கள் தங்க மஞ்சள் நிறமாக மாறும். அதிக மணம், சுவையுடன் இருக்கும். உண்ணும் மற்றும் பராமரிப்புத் தரம் காரணமாக, அதிக ஏற்றுமதித் திறனைக் கொண்டுள்ளது. நல்ல பராமரிப்பின் விளைவாக, மற்ற வகைகளைக் காட்டிலும் நெய்ப்பூவன் பழம், சந்தையில் அதிக விலை பெறுகிறது.
முனைவர் இரா.ஜெயவள்ளி,
உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைப் பழவியல் துறை, மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி – 620 027.