பழப் பயிர்களில் மிக முக்கியமானது கேரிகேபப்பாயே என்னும் பப்பாளி. இது, வெப்ப மண்டலப் பகுதியில் வளரக்கூடிய சிறிய மரச்செடியாகும். மருத்துவத் தன்மைகள் மிக்க பப்பாளிப் பழத்தில், விட்டமின் சி நிறைந்துள்ளது. உலகளவிலான பப்பாளிப்பழ உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 43 சதமாகும்.
இத்தகைய சிறப்புத் தன்மைகளைக் கொண்ட பப்பாளிப் பயிரை, நோய்கள் தாக்குவதால் பழ உற்பத்திக் குறைந்து விடுகிறது. எனவே, இச்செடியைத் தாக்கும் நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் இங்கே காணலாம்.
அடித்தண்டு அழுகல் நோய்
இந்நோய், பித்தியம் அபானிடெர்மேடம் என்னும் பூசணத்தால் தோன்றக் கூடியதாகும். இதனால் பாதிக்கப்பட்ட செடியின் மண்ணை ஒட்டிய தண்டுப் பகுதியில், நீரில் ஊறியதைப் போன்ற திட்டுகள் தோன்றும். பின்பு, இந்தத் திட்டுகள் பெரிதாகி, பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தில், நீர்க் கோர்த்து நலிவுற்றுக் காணப்படும். நாளடைவில் பாதிக்கப்பட்ட பகுதியானது சிதைவுற்று, சுருங்கி, தேனடையைப் போல மாறுவதுடன் பொந்தும் தோன்றும். பிறகு, இலைகள் மஞ்சளாகி வாடி விடும், காய்கள் உதிர்ந்து விடும்.
சாம்பல் நோய்
இந்நோய், ஆய்டியம் கேரிகேபப்பாயே என்னும் பூசணத்தால் தோன்றக் கூடியதாகும். இதனால் பாதிக்கப்பட்ட செடியின் இலைகள் மற்றும் காய்களில் வெண்ணிறப் பொடியைப் தூவியதைப் போன்ற பூசண வளர்ச்சி இருக்கும். காய்கள் சிறுத்தும், இலைகள் வெளிரியும் இருக்கும். பிறகு, இவை காய்ந்து உதிர்ந்து விடக்கூடும்.
இலை நெளிவு நோய்
இந்நோய், டொபேக்கோ இலை நெளிவு நச்சுயிரியால் தோன்றக் கூடியது. வெள்ளை ஈக்கள் இந்த நச்சுயிரிகளைப் பரப்பும் வேலையைச் செய்கின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட செடியின் இளம் இலைகள், அளவில் சிறுத்தும், சுருங்கியும், கீழ்நோக்கி வளைந்து குப்பிகளைப் போலவும் இருக்கும். இலைக் காம்புகள் வளைந்து இருக்கும். தீவிர நிலையில் பூக்களே இருக்காது.
வளையப்புள்ளி நோய்
இந்நோய், பப்பாளி வளையப்புள்ளி நச்சுயிரியால் தோன்றக் கூடியது. இந்த நச்சுயிரிகளைப் பரப்பும் வேலையை அசுவினிப் பூச்சிகள் செய்கின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட செடியின் இலை நரம்புகள் வெளிரியும், மடல்கள் புடைத்தும் இருக்கும். காய்களில், ஆங்கில எழுத்தான C-யைப் போன்ற வளையப் புள்ளிகள் இருக்கும். மேலும், இலைக்காம்பு மற்றும் தண்டில், கரும்பச்சைக் கோடுகள் மற்றும் வளையங்கள் காணப்படும். தீவிர நிலையில், இலை மடல்கள் சிறுத்து, காலணிக் கயிற்றைப் போலக் காணப்படும்.
தேமல் நோய்
இந்நோய், பப்பாளித் தேமல் நச்சுயிரியால் தோன்றக் கூடியது. அசுவினிப் பூச்சிகள் இந்த நச்சுயிரிகளைப் பரப்புகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட செடியின் இலைகளில், கரும்பச்சைப் புடைப்புகளும், மஞ்சள் திட்டுகளும் இருக்கும். இலைக்காம்புகள் குட்டையாவதால் உச்ச இலைகள் செங்குத்தாகக் காணப்படும். பழங்களில், நீரில் ஊறியதைப் போன்ற திட்டுகளும் அவற்றின் நடுவே வெண் புள்ளிகளும் இருக்கும். பழங்கள் சிறுத்து விடும்.
நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
நோய்க் காரணிகளின் தங்குமிடமாக விளங்கும் களைகளை அகற்றி, நிலத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். நீர்த் தேங்கினால் அடித்தண்டு அழுகல் தோன்றக் கூடும். எனவே, நிலத்தில் நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும். ஒரு சதவீத போர்டோ கலவை அல்லது 0.2 சதவீத மெட்டலாக்சில் கலவை மூலம், அடித்தண்டு மற்றும் சுற்றியுள்ள மண்ணை நனைத்தால் அடித்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
நோய்க் காரணிகளைப் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை, எக்டருக்கு 12 வீதம் வைக்கலாம். நோய்களால் பாதிக்கப்பட்ட செடிக் கழிவுகளை அகற்றி அழிக்க வேண்டும். புண்ணாக்கு வகைகள், மட்கு மற்றும் மண்புழு உரத்தை மண்ணில் இடலாம்.
வளையப்புள்ளி நோயைப் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பப்பாளி நாற்றுகளை, பூச்சி நுழையா வலையால் மூடி வளர்க்க வேண்டும். பப்பாளி நாற்றுகளை நடுவதற்கு 30 நாட்களுக்கு முன்பே, வரப்புப் பயிராக இரு வரிசைகளில், மக்காச்சோளத்தை விதைத்து வளர்த்தால், வளையப்புள்ளி நோய்க் காரணியைப் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மி.லி. டைமெத்தோயேட் வீதம் கலந்து, ஒரு மாத இடைவெளியில் ஐந்து மாதங்கள் வரை தெளித்தல் மற்றும் சிங்க் சல்பேட் 0.5 சதவீதக் கலவை, போரான் 0.1 சதவீதம் கலவையை, 4 மற்றும் 7 மாதத்தில் தெளித்தல் மூலம், செடிகளை நோயின்றிப் பாதுகாக்கலாம். நனையும் கந்தகத்தைத் தெளிப்பதன் மூலம், சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
ரா.திலகவதி, பயிர் நோயியல் துறை, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.