கறிக்கோழி இறைச்சி மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. ஏனெனில், விலை குறைவாக உள்ளது. இதை, வறுவல், பார்பிக்யூட் இறைச்சி, தந்தூரி இறைச்சி, சிக்கன் சூப் என, பல வகைகளில் சமைத்து, அனைத்து வயதினரும் சுவையாக உண்ணலாம் என்பதால், பல்வேறு சமையல் மரபுகளாலும் பாராட்டப்படுகிறது.
மாட்டிறைச்சிக் கொழுப்பை விட, நிறைவுற்ற கொழுப்புக் குறைவாக உள்ள புரத மூலமாகக் கறிக்கோழி இறைச்சி விளங்குகிறது. மேலும், இந்தப் புரதம், அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுகளின் வளமான மூலமாகும். கறிக்கோழி இறைச்சிக்கு எவ்வித மதக் கட்டுப்பாடும் இல்லாததால், உலகில் அதிகமாக உண்ணப்படும் இறைச்சி வகைகளில் ஒன்றாக உள்ளது.
உணவின் சத்து மதிப்பைத் தீர்மானிப்பதில் அமினோ அமிலக் கலவை முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழி இறைச்சிப் புரதம், முதல் தரப் புரதம் ஆகும். ஏனெனில், இதில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் சீரான அளவில் உள்ளன. மேலும், கறிக்கோழி இறைச்சியில், டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது, மூளைச் செல்களைப் பாதிக்கிறது.
இது, செரோடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகமாக ஏற்படுத்துகிறது. இது, மனநிலையை மேம்படுத்த, மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. கோழி இறைச்சிப் புரதத்தில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலத்தின் உயிரியல் மதிப்பு, வேக வைத்த நிலையில் 87.13 ஆக, உண்மையான செரிமானம் 81.43 ஆக, நிகரப் புரதப் பயன்பாடு 70.95 ஆக உள்ளது.
பயோ ஆக்டிவ் பெப்டைடுகள் என்பவை, நன்மை பயக்கும் உயிரியல் செயல்களைக் கொண்ட குறுகிய புரதத் துண்டுகள் ஆகும். கறிக்கோழி இறைச்சியில், பயோ ஆக்டிவ் பெப்டைடுகள் உள்ளன. இவை, நொதி நீரால் பகுப்பு மூலம் தயாரிக்கப்படுகின்றன.
பல புரதங்கள் மற்றும் பெப்டைடுகள், உயர் இரத்தழுத்த எதிர்ப்புப் பண்புகள், ஓபியாய்டு செயல்கள், நோயெதிர்ப்பு சக்திச் செயல்கள், தாது வரிசைப்படுத்தும் பண்புகள், ஆக்ஸிஜனேற்ற மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புச் செயல்களைக் கொண்டுள்ளன. இந்நிலை, எதிர்காலத்தில் கறிக்கோழி, நம்பிக்கைக்கு உரிய செயல்பாட்டு உணவு என்பதைக் குறிக்கிறது.
கோழி இறைச்சியில் கால் பகுதி, கொலாஜன் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் என்னும் புரதங்களால் ஆனது. இவை, உயிரணுப் பெருக்கத்தை மேம்படுத்துதல், நீர்த்தடுப்புத் திறன், ஈரப்பதத்தை உறிஞ்சுதல், தக்க வைத்தல் போன்ற சிறந்த உயிரியல் செயல்களைக் கொண்டுள்ளதால், சருமத்தில் முதுமை எதிர்ப்புப் பொருளாகப் பயன்படுகிறது.
கோழி இறைச்சியை அடிக்கடி உண்டு வந்தால், வகை 2 நீரிழிவு நோயைத் திறம்படத் தடுக்கலாம். 5-6 மாதங்களுக்குக் கோழி இறைச்சி உண்பது, அதாவது, குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு புரதத்தை உண்பதன் காரணமாக, எடையிழப்பு ஏற்படுகிறது. இந்த நெறிமுறை அதிக திருப்தியை ஏற்படுத்தக் கூடும். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த உணவின் போது, குறைவான கலோரி நுகர்வு மற்றும் புரதங்களின் அதிக விகிதங்களைக் கொண்ட உணவு முறைகளில், கார்போஹைட்ரேட் நுகர்வு குறைகிறது.
கோழி இறைச்சியைச் சிவப்பு இறைச்சியுடன் ஒப்பிடும் போது, குறைந்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ள நல்ல உணவாக விளங்குகிறது. நூறு கிராம் மார்பக இறைச்சியில் 3 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. தோலற்ற நூறு கிராம் சிவப்பு இறைச்சிக்கான சராசரி மதிப்பு 5-7 கிராம் ஆகும்.
இருப்பினும், கோழியைத் தோலுடன் சேர்த்துச் சாப்பிடுவது, உணவில் உள்ள கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பின் அளவை இரட்டிப்பாக்கும். எனவே, தோலை நீக்கி விட்டுக் கோழியைச் சமைக்க வேண்டும். மக்கள், தங்கள் உணவில் கொழுப்பைக் குறைக்க, மாற்று வழிகளைத் தேடுவதால் கறிக்கோழி நுகர்வு அதிகரித்து வருகிறது.
கறிக்கோழி இறைச்சியில் செறிவூட்டப்பட்ட கொழுப்பு அமிலம் குறைவாக உள்ளது. பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. எனவே, கோழி இறைச்சி சிறந்த இறைச்சியாகக் கருதப்படுகிறது. கோழி இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களைத் தருகிறது.
மேலும், இந்தக் கொழுப்பு அமிலங்களின் அளவு, கால்நடைகளை விடக் கோழியில் அதிகமாக உள்ளது. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற, கரோனரி இதய நோய்க்குக் காரணமாகும் டிரான்ஸ் கொழுப்புகள், கோழி இறைச்சியில் இல்லை.
மூளையின் செயலில் ஈடுபடும் தாதுகள் மற்றும் வைட்டமின் சத்துகளையும் கோழி இறைச்சித் தருகிறது. கால்நடை இறைச்சியில் உள்ள தாதுகள், சுவைத் தன்மை, இறைச்சியின் அமிலத் தன்மை, வெவ்வேறு நொதிகளின் உயிரியல் செயல்பாடு மற்றும் இறைச்சியின் சவ்வூடு பரவலைப் பாதிக்கச் செய்கின்றன.
கோழி இறைச்சி பல்வேறு அத்தியாவசிய தாதுகளால் ஆனது, இதில், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் ஆகியன, மற்ற சிவப்பு இறைச்சியுடன் ஒப்பிடும் போது, இறைச்சியில் பாதி இரும்பு, ஹீம் இரும்பாக உள்ளது, இது, தாவர உணவில் இருந்து 1-10 சதம் இரும்புடன் ஒப்பிடும் போது, 15-20 சதம் உறிஞ்சப்படுகிறது.
ஹீமோகுளோபினை உருவாக்க இரும்பு தேவை. இது, இரத்தச்சோகை மற்றும் வழக்கமான தசைச் செயல்களுக்குத் தீர்வாகப் பயன்படுகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், எலும்புகள் உருவாகவும், அவற்றின் இயல்பான செயல்பாட்டுக்கும் அவசியம்.
கோழி இறைச்சியில் உள்ள பாஸ்பரஸ், எலும்புக்கூடு அமைப்பு, மத்திய நரம்பு மண்டல செயல்பாடு, பற்கள் பராமரிப்பு மற்றும் வளர்சிதை மாற்றச் செயலைப் பராமரிக்க உதவுகிறது. மெக்னீசியம், புரதம் உருவாக்கம் மற்றும் இயல்பான தசைச் செயல்களின் உள்ளீடு ஆகும்.
கோழி இறைச்சியில், செலினியம் 8.6 முதல் 41 μg/100 g இருந்தாலும், கோழி இறைச்சியை ஒரு நாளைக்கு 55μg வீதம் உண்பது, வளர்சிதை மாற்ற விகிதங்களை, குறிப்பாக தைராய்டு ஹார்மோன்கள், ஆக்ஸிஜனேற்றப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பைப் பெருகச் செய்யும்.
துத்தநாகம், பல வளர்சிதை மாற்ற எதிர் வினைகளில் ஈடுபடுகிறது. துத்தநாகக் குறை, உயிரினத்தின் நோயெதிர்ப்புப் பாதுகாப்பைக் குறைக்கிறது. துத்தநாகமும் புரதமும், உடலின் சீரான சுகாதார அமைப்பை வழங்கும்.
கோழி இறைச்சியில் உள்ள அனைத்து வைட்டமின்களிலும், வைட்டமின் பி 3 என்னும் நியாசின் அதிகளவில் உள்ளது, மேலும், வைட்டமின்கள் ஏ, பி 6 ஆகியன, மற்ற விலங்குகளில் இருப்பதை விட, கோழி இறைச்சியில் அதிகமாக உள்ளன. கார்போஹைட்ரேட்டின் இயல்பான வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு நியாசின் அவசியம்.
கண்புரை, தோல் நோய்கள் மற்றும் நரம்பு மண்டலச் சிக்கல்களைத் தடுப்பது நியாசினின் வேலையாகும். இது, பாலியல் ஹார்மோன்களின் சத்துகளின் தொகுப்புக்குக் காரணமாகும். இரத்தக் கொழுப்பையும் குறைக்கும். ஒரு நாளைக்கு, குழந்தைக்கு 50 கிராம், பெரியவர்க்கு 100 கிராம் வீதம், கோழி இறைச்சியைத் தருவதன் மூலம், தேவையான நியாசினைப் பெறலாம்.
கோழி இறைச்சி, ஆற்றல் வளர்சிதை மாற்றத்தில் முக்கியமாக விளங்கும் தியாமின் (B1) மற்றும் ரைபோப்ளேவினின் (B2) மிதமான நல்ல மூலமாகும். மேலும், நரம்பு மண்டலத்துக்கு அவசியமான பி12 போன்ற வைட்டமின்னின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
குறைந்த வருமானம் உள்ள மக்கள், தங்களின் உணவில் கோழி இறைச்சியைச் சேர்ப்பதன் மூலம் பெரிதும் பயனடைகின்றனர். இது நன்கு செரிப்பதால், குழந்தைகள் மற்றும் பெரியோர்க்கு நல்ல உணவாகும்.
முட்டை, மாடு மற்றும் பன்றி இறைச்சியுடன் ஒப்பிடும் போது, கோழி, குறைந்த கொழுப்பையும், அதிகப் புரதத்தையும் கொண்டது. இந்நிலை, நுகர்வோர் வெவ்வேறு உறுப்பு அமைப்புகளின் இயல்பான உடலியல் செயல்பாட்டைக் கொண்டிருக்க உதவுகிறது. மேலும், அதிக எடை, நீரிழிவு, இதய நோய்கள் உட்பட, பல தொற்று அல்லாத நோய்களைக் குறைக்க உதவுகிறது.
கோழி இறைச்சியில் உள்ள உணவுப் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுகள், வயது மூப்பைத் தடுக்க, தசை மற்றும் எலும்பை வளர்க்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த மற்றும் மூளையின் செயலைக் கூட்டப் பயன்படுகின்றன. எனவே, கோழி இறைச்சியைச் சிறந்த இறைச்சி உணவாகக் கருதலாம்.
மு.முத்துலட்சுமி, இரா.இராஜ்குமார், ப.நளினி, மு.பிரதீப், சே.திவ்யபிரியா, கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில் நுட்பத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் – 637 002.