வெள்ளாடுகளும் வளர்ப்பு முறைகளும்!

வெள்ளாடு

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர்.

கிராமங்களில் வசிக்கும் படித்த வேலையில்லா இளைஞர்களும், சுயதொழில் செய்ய நினைப்போரும், வெள்ளாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், எந்த நேரத்திலும் பணத் தேவையைத் தீர்க்க உதவும் வெள்ளாடுகள், எளிய பராமரிப்பில், சிறந்த பலனைக் கொடுக்கும் என்பதாகும். தற்போது சந்தையில் வெள்ளாட்டு இறைச்சியின் விலை நாளுக்கு நாள் கூடி வருவதும் ஒரு காரணமாகும்.

வெள்ளாட்டு இனங்கள்

கன்னியாடு: பிறப்பிடம்: திருநெல்வேலி. சிறப்புகள்: கருமுகம், காது, அடிவயிறு, வாலில் இரு வெள்ளை/ சிவப்புக் கோடுகள்.

கொடியாடு: பிறப்பிடம்: தூத்துக்குடி. சிறப்புகள்: வெள்ளையில் கருமை மற்றும் செம்பழுப்பு நிறம்.

சேலம் கறுப்பாடு: பிறப்பிடம்: சேலம், தருமபுரி, ஈரோடு. சிறப்புகள்: கருநிறம்.

தலைச்சேரி ஆடு: பிறப்பிடம்: கேரளம். சிறப்புகள்: வெள்ளை, பழுப்பு மற்றும் கறுப்பு நிறம்.

பார்பாரி ஆடு: பிறப்பிடம்: தில்லி, அரியானா, உத்தரபிரதேசம். சிறப்புகள்: வெள்ளை மற்றும் பழுப்பு நிறம்.

ஜமுனாபாரி ஆடு: பிறப்பிடம்: உத்தரபிரதேசம். சிறப்புகள்: நீண்ட காதுகள்.

போயர் ஆடு: பிறப்பிடம்: தென்னாப்பிரிக்கா. சிறப்புகள்: உடல் வெள்ளை, தலையும் கழுத்தும் சிவப்பு நிறம்.

தேர்வு செய்தல்

இனப்பெருக்கக் கிடாயானது, 2-3 குட்டிகளை ஈனும் பெட்டை ஆட்டிலிருந்து பிறந்ததாக இருக்க வேண்டும். உயரமாகவும், நெஞ்சு அகன்றும், உடல் நீண்டும் இருத்தல் வேண்டும். அதிக எடையுள்ள கிடாக்குட்டிகளை ஆறு மாத வயதிலும், நல்ல தரமான பெட்டைக் குட்டிகளை மூன்று மாத வயதிலும், வளர்ப்புக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

வளர்ப்பு முறைகள்

மேய்ச்சல் முறை. அதாவது, 8-10 மணி நேரம் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை. அதாவது, 4-5 மணி நேரம் மேய்ச்சலுக்குப் பின்னர் கொட்டிலில் தீவனம் அளித்துப் பராமரிக்க வேண்டும். கொட்டில் முறை. அதாவது, 24 மணி நேரமும் கொட்டிலில் வைத்து வளர்க்க வேண்டும். பரண் அல்லது சல்லடை முறை. அதாவது, தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மரப்பலகைகள் மூலம் தரையை அமைத்து வளர்த்தல்.

இனவிருத்திப் பராமரிப்பு

வெள்ளாட்டுப் பண்ணையை இலாபமிக்கதாக நடத்த வேண்டுமானால், ஆடுகள், இரண்டு ஆண்டில் மூன்று முறை குட்டிகளை ஈன வேண்டும். பருவ வயது 6-8 மாதங்கள். இனப்பெருக்க வயது 12 மாதங்கள். பருவச் சுழற்சிக்காலம் 18-21 நாட்கள். சினைப்பருவக் காலம் 24-72 மணி நேரம். சினைக்காலம் 150 நாட்கள். ஈன்றபின் வரும் அடுத்த சினைப்பருவம் 21 நாட்கள். இனப்பெருக்கக் காலம் 5-8 ஆண்டுகள். விற்பனை வயது 6-8 மாதம். விற்பனை வயதில் எடை 20-25 கிலோ.

தீவனப் பராமரிப்பு

வெள்ளாடுகளுக்குப் பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் ஆகிய மூன்றும் தேவை. அடர் தீவனக் கலவையை, விவசாயிகள் தங்கள் கிராமத்தில் எளிதாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தயாரிக்கலாம். வளர்ந்த ஆட்டுக்கு, தினமும் பசுந்தழை மற்றும் புல் 3 கிலோ, உலர் தீவனம் 400 கிராம், கலப்புத் தீவனம் 100 கிராம் கொடுக்க வேண்டும்.

பசுந்தீவனம்

கோ.3, கோ.4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல். வேலிமசால், முயல் மசால், சவுண்டல், கிளைரிசிடியா, கொடுக்காய்ப்புளி, வேம்பு, கல்யாண முருங்கை, உதியன், மரவள்ளி, ஆலிலை, அரசிலை, மாவிலை, பலாத்தழை, கருவேல், வெள்வேல், பூவரசு, முருங்கை, இலந்தை, வாகை, அகத்திக்கீரை போன்றவற்றை ஆடுகளுக்கு அளிக்கலாம். சோளத்தட்டை, கம்புத்தட்டை, வைக்கோல், கடலைக்கொடி போன்றவற்றை உலர் தீவனமாக அளிக்கலாம்.

கலப்புத் தீவனம்

நூறு கிலோ கலப்புத் தீவனத்தைத் தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள்: மக்காச்சோளம் அல்லது சோளம் 35 கிலோ, கடலை அல்லது எள் புண்ணாக்கு 20 கிலோ, கோதுமைத் தவிடு 42 கிலோ, தாதுப்புகள் 2 கிலோ, சாதாரண உப்பு 1 கிலோ. இந்தத் தீவனத்தைக் குட்டிக்கு 50-75 கிராம், வளரும் ஆட்டுக்கு 100-150 கிராம் வீதம் தினமும் கொடுக்க வேண்டும்.

நோய்ப் பராமரிப்பு

வெள்ளாடுகளைப் பல்வேறு நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரி நோய்கள் தாக்குகின்றன. இந்நோய்கள் வராமல் தடுக்க, தடுப்பூசிகளைத் தக்க நேரத்தில் ஆடுகளுக்கு அளித்தல் மிகவும் அவசியம்.

தடுப்பூசி 

துள்ளுமாரி: முதல் தடுப்பூசி: 6 மாத வயதில். தொடர் தடுப்பூசி: ஆண்டுக்கு ஒருமுறை.

கோமாரி: முதல் தடுப்பூசி: 2 மாத வயதில். தொடர் தடுப்பூசி: ஆண்டுக்கு ஒருமுறை.

தொண்டை அடைப்பான்: முதல் தடுப்பூசி: 6 மாத வயதில். தொடர் தடுப்பூசி: ஆண்டுக்கு ஒருமுறை.

ஆட்டம்மை: முதல் தடுப்பூசி: 3-6 மாத வயதில். தொடர் தடுப்பூசி: ஆண்டுக்கு ஒருமுறை.

நீலநாக்கு: முதல் தடுப்பூசி: 6 மாத வயதில். தொடர் தடுப்பூசி: ஆண்டுக்கு ஒருமுறை, நோய்க் கிளர்ச்சி உள்ள இடங்களில் மட்டும்.

இரண ஜன்னி: முதல் தடுப்பூசி: குட்டிப் போட்ட 48 மணி நேரத்தில்.

ஒட்டுண்ணிகள்

தொற்று நோய்கள் மட்டுமின்றி, ஒட்டுண்ணிகளும் வெள்ளாடுகளைத் தாக்குகின்றன. இவை, அக ஒட்டுண்ணிகள், புற ஒட்டுண்ணிகள் என இரண்டு வகைப்படும். தட்டைப் புழுக்கள், உருண்டைப் புழுக்கள், நாடாப்புழுக்கள் ஆகியன அக ஒட்டுண்ணிகள். ஆட்டுப்பேன், தெள்ளுப்பூச்சி, உண்ணிகள், ஈக்கள், கொசுக்கள் ஆகியன புற ஒட்டுண்ணிகள்.

அக ஒட்டுண்ணிகளை நீக்க, முறையாகக் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியம். ஆறு மாதம் வரையான குட்டிகளுக்கு மாதம் ஒருமுறையும், பின் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முறையாக சிகிச்சை அளிப்பதன் மூலம் புற ஒட்டுண்ணிகளையும் தவிர்க்கலாம். நோய்களைக் களைய, கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை செய்வதே சரியான முறையாகும்.


PB_DEVAKI

முனைவர் க.தேவகி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading