ரோஜாச்செடி, பல்லாண்டுத் தாவரமாகும். பல நிறங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்ட ரோஜாச் செடி அனைவராலும் விரும்பப்படுவது. வீட்டின் இரு பக்கமும் பூத்திருக்கும் ரோஜாப் பூக்கள், வீட்டுக்கு அழகைச் சேர்ப்பதோடு, காண்போரின் மனங்களைத் தூய்மையாக்கி, நேர்மறை எண்ணங்களை மலரச் செய்யும் தனித்தன்மை மிக்கவை.
மேலும், மருத்துவத் தன்மைகள் மிக்க ரோஜாப்பூவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே, ரோஜாச் செடிகளைத் தாக்கும் நோய்களையும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் இங்கே காணலாம்.
சாம்பல் நோய்
நோய்க்காரணி: இந்நோய், போடோஸ் பேரியாபன்னோசா என்னும் பூசணத்தால் தோன்றக் கூடியது.
அறிகுறிகள்: நோயுற்ற செடியின் இலைகள், இளம் தளிர்கள், மொட்டுகள் மற்றும் பூக்களில், வெண்ணிறப் பொடியைத் தூவியதைப் போன்ற பூசண வளர்ச்சி, திட்டுகளாகக் காணப்படும். இதனால், செடிகள் வளர்ச்சிக் குன்றியும், இலைகள் சிதைவுற்றும், பூக்கள் காய்ந்தும் காணப்படும்.
கரும்புள்ளி நோய்
நோய்க்காரணி: இந்நோய், டிப்ளோகார்ப்பன் ரோசே என்னும் பூசணத்தால் ஏற்படக் கூடியது.
அறிகுறிகள்: நோயுற்ற செடியின் இலைகளின் மேற்பரப்பில் கருவட்டப் புள்ளிகள் தோன்றும். இந்தப் புள்ளிகளின் விளிம்புகளில், மயிரிழையைப் போன்ற நீட்சியும், நாளடைவில் மஞ்சள் வளையம் சூழ்ந்தும் இருக்கும். பிறகு, மஞ்சளாகி உதிர்ந்து விடும். இதனால், பூ உற்பத்தியும் மிகவும் குறைந்து விடக்கூடும்.
பின்னோக்குக் கருகல் நோய்
நோய்க்காரணி: இந்நோய், லெப்டோஸ்பேரியா கொனியோதிரியம், டிப்ளோடியா ரொசேராம், போட்ரியோ டிப்ளோடியா தியோபுரோமே மற்றும் கொல்லிடோ டிரைகம் சிற்றினங்கள் போன்ற பூசணங்களால் தோன்றக் கூடியது.
அறிகுறிகள்: இந்நோய், கவாத்து செய்த பிறகு தோன்றக் கூடியது. வெட்டப்பட்ட தண்டின் நுனியிலிருந்து, மஞ்சள் அல்லது செந்நிற மாற்றம் ஏற்படும். பிறகு, பழுப்பு நிறமாகிப் பின்னோக்கிக் காயத் தொடங்கும். நோயுற்ற தண்டானது வெடிப்புற்றும், பட்டைகள் நலிவுற்றும் காணப்படும். மேலும், நோயுற்ற பகுதியில், நுண்ணிய கரும் புள்ளிகள் தோன்றியிருக்கும்.
துரு நோய்
நோய்க்காரணி: இந்நோய், பிராகுமிடியம் மியூகுரோனேடம் என்னும் பூசணத்தால் தோன்றக் கூடியது.
அறிகுறிகள்: நோயுற்ற இலையின் மேற்பரப்பில் ஆரஞ்சு கலந்த செந்நிறத் துரு தோன்றும். சில நாட்களுக்குப் பிறகு இலையின் பின்புறத்தில் மஞ்சள் நிறத் துரு தோன்றும். இது, மேலும் நிறமாற்றம் அடைந்து செம்மை கலந்த ஆரஞ்சு நிறத் துருவாக மாறும். கோடையில் இந்தத் துரு, சாக்லேட் பழுப்பு அல்லது கறுப்பாக மாறும். செடியின் அனைத்துப் பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாகும். இலைகள் வாடி உதிர்ந்து விடும். தண்டுப்பகுதி செந்நிறமாக மாறி நலிவுற்றுக் காணப்படும்.
அடிச்சாம்பல் நோய்
நோய்க்காரணி: இந்நோய், பெரனோஸ்போரா ஸபார்ஸா என்னும் பூசணத்தால் தோன்றக் கூடியது. இது, தோட்ட ரோஜாக்கள், தொட்டி வளர்ப்பு ரோஜாக்கள், சிறிய ரோஜாக்கள் மற்றும் பூங்கொத்துகள் என, அனைத்து வகை ரோஜாச் செடிகளையும் தாக்கும்.
அறிகுறிகள்: பாதிக்கப்பட்ட இலையின் அடிப்புறத்தில் வெண்துகள் போன்ற பூசண வளர்ச்சியும், மேற்பரப்பில் மஞ்சள் நிறத் திட்டுகளும் காணப்படும். நாளடைவில், இலை முழுவதும் பரவி, அடிப்புறத்தில் சாம்பல் நிறத்தையும், மேற்பரப்பில் பழுப்பு நிறத் திட்டுகளையும் ஏற்படுத்தும். பிறகு, இந்த இலையானது காய்ந்து உதிர்ந்து விடும். செடியின் அனைத்துப் பகுதிகளும் பாதிப்புடன் இருக்கும்.
போட்ரைடிஸ் கருகல்
நோய்க்காரணி: இந்நோய், போட்ரைடிஸ் சினேரியா என்னும் பூசணத்தால் தோன்றக் கூடியது. தோட்டச் செடிகளிலும் பூங்கொத்துகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்: நோயுற்ற செடியின் பூக்கள், மலராமல் சாம்பல் கலந்த பழுப்பு நிறப் பூசண வளர்ச்சியுடன் இருக்கும். பூவிதழ்களில், நீரில் நனைந்ததைப் போன்ற புள்ளிகள், கொப்புளங்கள் அல்லது குழிவான பகுதிகள் தோன்றி, செம்பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனால், பூக்கள் காய்ந்து உதிர்ந்து விடக்கூடும். தண்டுகளிலும் நீண்ட குழிவான கருந் திட்டுகள் காணப்படும். முடிவில், செடியானது நலிவுற்றுக் காய்ந்து விடும்.
மஞ்சள் தேமல் நோய்
நோய்க்காரணி: இந்நோய், ரோஜா தேமல் கூட்டு நச்சுயிரிகளால் தோன்றக் கூடியதாகும்.
அறிகுறிகள்: பொது அறிகுறிகளாக, வெளிரிய திட்டுகள் அல்லது வளையப் புள்ளிகள், அலை போன்ற வரிகள், மஞ்சள் நரம்புகள், ஓக் இலை அமைப்பு மற்றும் நிற மாற்றம் காணப்படும். இத்தகைய செடியில், சில பூக்கள் மட்டுமே இருக்கும்.
உச்சிக்கழலை நோய்
நோய்க்காரணி: இந்நோய், ரைசோபியம் ரேடியோபேக்டர் என்னும் பாக்டீரியா மூலம் தோன்றக் கூடியது.
அறிகுறிகள்: தொடக்க அறிகுறிகளாக, சிறிய, கோள வடிவ, இளம் பச்சை நிற மென் கட்டிகள் அல்லது கழலைகள், மண்ணை ஒட்டிய தண்டுப் பகுதியிலோ, கவாத்து செய்து துண்டித்த பகுதியிலோ, ஒட்டுச் சேர்த்த பகுதியிலோ தோன்றக் கூடும். இவை நாளடைவில் அளவில் பெரிதாக, கடினக் கட்டிகளாக மாறி, பாதிப்பை ஏற்படுத்தும். இந்தக் கட்டிகள் வேரிலும் தோன்றக் கூடும். இதனால், செடியானது வளர்ச்சிக் குன்றியும், இலைகள் வெளிரியும், கிளைகள் பின்னோக்கிக் கருகியும் இருக்கும்.
நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
நோயற்ற, வளமான ரோஜாச் செடிகளை நடவு செய்ய வேண்டும். நோய் எதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நடவின் போது, செடிகளில் காயம் ஏற்படாமல் கவனமாகக் கையாள வேண்டும். இதனால், உச்சிக் கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
போதிய இடைவெளியில் செடிகளை நடவு செய்ய வேண்டும். கவாத்துக் கருவிகளைக் கிருமிநாசினியில் நனைத்துப் பயன்படுத்த வேண்டும். ஜூலை மற்றும் அக்டோபரில் கவாத்து செய்த பிறகு, செடிக்கு 10 கிலோ தொழுவுரம், 6 கிராம் தழைச்சத்து, 12 கிராம் மணிச்சத்து மற்றும் 12 கிராம் சாம்பல் சத்து வீதம் இட வேண்டும். அதிகத் தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நோயுற்ற இலைகள் மற்றும் மலர்களை அகற்றி அழிக்க வேண்டும். வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு, ஊட்டமேற்றிய தொழுவுரம், தழையெரு, நன்கு மட்கிய கோழியெரு, மட்கு, மண்புழு உரம் போன்றவற்றை மண்ணில் இடலாம். இதனால், மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகி, நோய்க் கிருமிகள் அழியக் கூடும்.
நோய்க் காரணிகளின் தங்குமிடமாக விளங்கும் களைகளை அகற்றி, நிலத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பத்து சதவீத நொச்சியிலைக் கரைசல் அல்லது மூன்று சதவீத வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளித்து, நச்சுயிரி நோயைக் கட்டுப்படுத்தலாம். வேதி மருந்துகளை, பரிந்துரை அளவில் தெளித்து நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். உதாரணமாக, சாம்பல் நோயையும், துரு நோயையும் கட்டுப்படுத்த, 3 சதவீத நனையும் கந்தகக் கரைசலைத் தெளிக்கலாம். கரும்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, 0.1 சதவீத கார்பென்டாசிம் கரைசலைத் தெளிக்கலாம்.
பின்னோக்குக் கருகலையும், போட்ரைடிஸ் கருகலையும் கட்டுப்படுத்த, 0.2 சதவீத குளோரோதலோனில் கரைசலைத் தெளிக்கலாம். அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, 0.3 சதவீத மெட்டலாக்சில் மேன்கோசெப் கலவையைத் தெளிக்கலாம்.
ரா.திலகவதி, பயிர் நோயியல் துறை, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.