My page - topic 1, topic 2, topic 3

மலை வாழை இரகங்களும் சிறப்புகளும்!

முக்கனிகளில் ஒன்றான வாழை, பழங்காலம் முதல் மனிதனின் உணவாகப் பயன்பட்டு வரும் முக்கியப் பழமாகும். ஆசிய கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட இவ்வாழை, உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, தாவர முறைப்படி மூசா எனப்படுகிறது. சைட்டாமினே குடும்பத்தையும், முசேசியே என்னும் துணைக் குடும்பத்தையும் சார்ந்தது.

ஆதாமின் அத்தி மற்றும் சொர்க்கத்தின் ஆப்பிள் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்ட வாழைப்பழம், இந்தியாவில் முக்கிய உணவுப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. பழம் மட்டுமின்றி, இலை, பூ, தண்டு, காய் போன்ற பாகங்களும் பயன்படுகின்றன. ஆகவே, இந்தியாவில் விளையும் பழப்பயிர்கள் பரப்பில், மாங்கனிக்கு அடுத்த இடத்திலும், உற்பத்தியில் முதலிடத்திலும் வாழை உள்ளது.

இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த வாழையில் சிறப்பு மிக்கது மலை வாழை. மலைப் பகுதிகளில் மட்டும் விளைவதால், மலை வாழை எனப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,000 அடி முதல் 5,000 அடி உயரம் வரையிலும், சுழல் காற்று வீசாமல் ஆண்டுக்குச் சராசரியாக 1,500 மி.மீ. மழை பெய்யும் இடங்களிலும் சாகுபடி செய்யலாம்.

நல்ல வடிகால், மண் ஆழமுள்ள வளமான நிலங்கள் அதிக மகசூலை ஈட்டித் தரும். மலை வாழை மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பல்லாண்டுப் பயிராக, மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது.

மலை வாழைத்தண்டு நீளமாக, தடிமனாக, அங்காங்கே காப்பி நிறம் கலந்த கறுப்பு கோடுகளுடன் இருக்கும். இலைகள் சற்று நீளமாக இருக்கும். பழம், மஞ்சள் நிறத்திலும், தோல் தடித்து எளிதில் உரிக்கும் தன்மையிலும் இருக்கும்.

மலை வாழை, சத்துப் பொருள்கள் நிறைந்த பழமாகும். மாவுச்சத்து 22 சதம், புரதச்சத்து 1 சதம், கொழுப்புச்சத்து 0.2 சதம் உள்ளன. மேலும், 100 கிராம் பழத்தில் 27 மி.கி. பாஸ்பரஸ், 460 மி.கி. பொட்டாசியம், 7 மி.கி. கால்சியம், 36 மி.கி. மெக்னீசியம், 34 மி.கி. சல்பர், 0.04 மி.கி. தையமின், 0.07 மி.கி. ரைபோபிளேவின், 10 மி.கி. வைட்டமின் சி ஆகியன உள்ளன.

மலைவாழைப் பழம் 7 முதல் 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஆண்டு முழுவதும் கிடைக்கும் இப்பழம், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பழமாகும். இப்பழம், மணமாக, சுவையாக, சாப்பிடத் தூண்டும் தன்மையில் இருக்கும். குழந்தையின் பால் குடியை மறக்கச் செய்யும் தன்மையும் மிக்கது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

ஆகவே, தமிழ்நாட்டு மக்கள், வீட்டில் நடக்கும் விழாக்கள் மற்றும் விருந்தினர்கள் உபசரிப்பில் இப்பழத்தைப் பயன்படுத்துகிறார்கள். மேலும், இறை வழிபாட்டிலும், பஞ்சாமிர்தத் தயாரிப்பிலும், இந்தப் பழம் பயன்படுகிறது.

மலை வாழையில், விருப்பாட்சி, சிறுமலை, நமரன், செவ்வாழை, கற்பூரவள்ளி, சந்தன வாழை போன்றவை, தமிழ்நாட்டின் பல்வேறு மித வெப்ப மண்டல மலைப் பகுதிகளில் விளைகின்றன. இவை, பொதுவாக மானாவாரிப் பயிராகவே பயிரிடப்படுகின்றன.

தமிழ்நாட்டில், கீழ்ப்பழனி மலை, குற்றாலம், பேச்சிப்பாறை, சிறுமலை, கல்வராயன் மலை, பச்சைமலை, அற்றூத்து மலை, கொல்லிமலை, சித்தேரி மலை, ஏலகிரி, சேர்வராயன் மலை, நீலகிரி அடிவாரப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மலை வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த இரகங்கள் பெரும்பாலும் பல்லாண்டுப் பயிராக சாகுபடி செய்யப்படுகின்றன.

மலைவாழை இரகங்கள்

விருப்பாட்சி: இந்த வாழைத் தண்டு, நீளமாகவும், தடித்தும் இருக்கும். 300 செ.மீ. உயரம் வரை வளரும். இலைகள் நீளமாக இருக்கும். தண்டில் கறுப்பு நிறத் திட்டுகள் காணப்படும். நன்கு பழுத்த பழம் மஞ்சள் நிறமாக இருக்கும். பழத்தோல் எளிதில் உரியும். பழத்தோலில் நூலிலை போன்ற சதைப்பகுதி இருக்கும். பழம், மணமாக இருக்கும். TSS அளவு 21 பிரிக்ஸ் இருக்கும். பழத்தில் 0.56 சதம் அமிலத் தன்மை இருக்கும். பத்து நாட்கள் வரை பழம் அழுகாமல் இருக்கும்.

பழத்தில் குறைந்தளவே நீர் இருக்கும். பழத்தோலில் கரும்புள்ளி நோயின் பாதிப்பு இருந்தாலும், பழத்தில் எவ்விதப் பாதிப்பும் இருக்காது. பஞ்சாமிர்தம் போன்ற மதிப்புமிகு பொருள் தயாரிப்பில் இப்பழம் பயன்படுகிறது.

நூறு கிராம் விருப்பாட்சி வாழையில் உள்ள சத்துகள்

மாவுச்சத்து 22 சதம், சாம்பல் சத்து 460 மி.கி., புரதம் 1.1 சதம், கொழுப்பு 0.2 சதம், பாஸ்பரஸ் 36 மி.கி., சாம்பல் சத்து 460 மி.கி., கால்சியம் 7 மி.கி., மக்னீசியம் 36 மி.கி., சல்பர் 34 மி.கி., தயாமின் 0.04 மி.கி., ரைபோபிளேவின் 0.07 மி.கி., பைரிடாக்சின் 0.51 மி.கி., வைட்டமின் சி- 10 மி.கி.

சிறுமலை வாழை: இந்த வாழைச் சீப்பில் 11-14 பழங்கள் இருக்கும். தாரிலிருந்து பழச்சீப்பை எளிதாகப் பிரித்து எடுக்கலாம். அரிவாள் தேவைப்படாது. ஆனால், சீப்பிலிருந்து பழங்களை எளிதாகப் பிரித்தெடுக்க இயலாது. பழத்தின் இனிப்புத் தன்மை, அறுவடை செய்த 7-10 நாட்களில் அதிகமாக இருக்கும். TSS அளவு 24-26 பிரிக்ஸ் இருக்கும். பஞ்சாமிர்தம் போன்ற மதிப்புமிகு பொருள் தயாரிப்பில் இப்பழம் பயன்படுகிறது.

இந்த இரகம் நட்ட 12-13 மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும். தாரின் எடை 15-25 கிலோ, 8-10 சீப்புகள், 80-100 காய்கள் இருக்கும். இதன் பழங்கள் விருப்பாட்சி இரகத்தைக் காட்டிலும் சுவையாக இருக்கும். இவ்வாழை இலை, தண்டின் குணங்கள் அனைத்தும், விருப்பாட்சி இரகத்தில் இருப்பதைப் போலவே இருக்கும்.

நூறு கிராம் சிறுமலை வாழையில் உள்ள சத்துகள்

மாவுச்சத்து 22 சதம், புரதம் 1.1 சதம், கொழுப்புச்சத்து 0.2 சதம், பாஸ்பரஸ் 27 மி.கி., சாம்பல் சத்து 500-550 மி.கி., கால்சியம் 7 மி.கி., மக்னீசியம் 36 மி.கி., சல்பர் 34 மி.கி., தையமின் 0.04 மி.கி., ரைபோபிளேவின் 0.07 மி.கி., பைரிடாக்சின் 0.51 மி.கி., வைட்டமின் சி- 10 மி.கி.

செவ்வாழை: இதற்கு, அக்னீஸ்வார், லால்கேலா, சென்கதலி, அனுபம், இரதம்பாலா, எர்ரா அரடி, சந்திரபேல், கெம்பேல் என்னும் பெயர்களும் உண்டு. இது, அனுபம் என்று பீகாரிலும், இரதம்பாலா என்று இலங்கையிலும், செவ்வாழை என்று தமிழ்நாட்டிலும் அழைக்கப்படுகிறது. இதைச் சமவெளியிலும், மலைப்பகுதிகளிலும் பயிரிடலாம். பழம், சிவப்புத் தோலுடன், சுவை மிக்கதாக இருக்கும். இந்த வாழையை வாடல் நோய்த் தாக்காது. ஆனால், முடிக்கொத்து நோயானது எளிதில் தாக்கும்.

செவ்வாழை, உலகத்தின் எல்லா நாடுகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில், கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் விளைகிறது. மலைப்பகுதியில் விளையும் பழத்தின் நிறம், சமவெளியில் விளையும் பழத்தின் நிறத்தை விட அதிகமாக இருக்கும்.

இந்த மரத்தண்டு, இலைக்காம்பு, நரம்பு மற்றும் பழங்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதால், இது செவ்வாழை எனப்படுகிறது. இவ்வாழை, நட்ட 14-16 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். தாரின் எடை 20-25 கிலோ, 7-9 சீப்புகள், 80-100 பழங்கள் இருக்கும். அதிகளவில் இடைக்கன்றுகளை உற்பத்தி செய்வதால், இதைப் பல்லாண்டுப் பயிராக சாகுபடி செய்யலாம்.

கற்பூரவள்ளி: இது, கற்பூர வாழை சாம்பல் வாழை, இராஜ வாழை, கொஸ்தா- பொன்தா, கான்தாளி, சுர்மணி கான்தாளி, சினாளி, பாரத் மோனி, பைசாங் அவாக் மற்றும் சாம்பலைப் பூசியதைப் போல இருப்பதால், சாம்பல் வாழை எனப்படுகிறது. இவ்வாழையை முடிக்கொத்து நோய்த் தாக்குவதில்லை. கூன்வண்டுத் தாக்கம் குறைவாக இருக்கும். வாடல் நோய் மற்றும் நூற்புழுத் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த இரகம், காய் மற்றும் இலைக்காகப் பயிரிடப்படுகிறது.

கற்பூரவள்ளியை, மலைப்பகுதி மற்றும் சமவெளியில் சாகுபடி செய்யலாம். ஆனால், மலைப்பகுதியில் மகசூல் அதிகமாகக் கிடைக்கும். இந்த மரங்கள் நடுத்தர உயரத்தில் இருக்கும். நட்ட 10-12 மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும். தாரின் எடை 25-35 கிலோ, 10-14 சீப்புகள், 150-180 பழங்கள் இருக்கும். இதைப் பல்லாண்டு வாழையாக சாகுபடி செய்யலாம்.

நமரன்: அதிகச் சுவையும் வாசமும் மிக்க இந்த வாழை, கல்வராயன் மலை, பச்சைமலை, ஏலகிரி, சித்தேரி மலை, கொல்லிமலை மற்றும் சேர்வராயன் மலையில் சாகுபடி செய்யப்படுகிறது. தாரின் எடை 15-25 கிலோ, 7-10 சீப்புகள், 80-110 பழங்கள் இருக்கும். இந்த வாழையில் முடிக்கொத்து நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து 800-100 மீட்டர் வரையுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யலாம்.

சந்தன வாழை: இந்த வாழை, செவ்வாழையில் இயற்கையாக நிகழ்ந்த திடீர் மாற்றம் என்று கூறப்படுகிறது. பழத்தின் அளவு செவ்வாழையைப் போன்றே இருக்கும். ஆனால், நிறம் மட்டும் பச்சையாக இருக்கும். இப்பழம், சுவையும், வாசமும் கொண்டிருப்பதால், இதற்கு மனோரஞ்சிதம் என்னும் பெயரும் உண்டு. மரமானது, செவ்வாழை மரத்தைப் போலவே இளம் பச்சையாக இருக்கும்.

இந்த இரகம், நட்ட 12-14 மாதங்களில் அறுவடைக்கு வரும். தாரின் எடை 20-25 கிலோ, 7-9 சீப்புகள், 60-75 பழங்கள் இருக்கும். இந்த வாழை, சேர்வராயன் மலை, கொல்லிமலை மற்றும் கல்வராயன் மலையில் பயிர் செய்யப்படுகிறது.

NPH-02-01 வீரிய ஒட்டு இரகம்: இந்த வாழை, H-201 ஆனைக் கொம்பனின் வீரிய ஒட்டு இரகமாகும். இது, மலைப்பகுதியில் விளையும் வாழையை ஒத்திருக்கும். இவ்வாழை, நூற்புழு மற்றும் பியூசோரியம் பூசணத்தைத் தாங்கி வளரும். இந்த இரகம் கீழ்ப்பழனி மலையில் விளைகிறது. தாரின் எடை 19 கிலோ, 10-11 சீப்புகள், 213 பழங்கள் இருக்கும். இந்தப் பழங்கள் சுவை மிக்கவை.


முனைவர் இரா.ஜெயவள்ளி, முனைவர் இரா.அருள் மொழியான், முனைவர் ஜே.சுரேஷ், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks