My page - topic 1, topic 2, topic 3

மதிப்புக் கூட்டிய மலை வாழை உணவுப் பொருள்கள்!

லை வாழைப் பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. சில பருவங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. அப்போது விற்பனை மந்த நிலையில் உள்ளது. பழுத்த பழங்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாது. எனவே, இவற்றை மாற்றுப் பொருள்களாக மாற்றினால், வீணாகாமல் தடுத்து நல்ல விலைக்கு விற்கலாம். மலை வாழைப் பழத்தைப் பதப்படுத்தி, பலவகையான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம்.

உலர் மலை வாழைப் பழம்

முற்றி வெளிர் மஞ்சள் நிறமாக மாறிய பழங்களை எடுத்துத் தோலை உரித்து, ஒரு லிட்டர் நீருக்கு 7.4 கிராம் வீதம் கலந்த பொட்டாசியம் மெட்டா பைசல்பேட் கரைசலில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, தட்டுகளில் பரப்பி, உலர் எந்திரத்தில் 50 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் உலர்த்த வேண்டும். இந்த உலர் பழங்களுக்கு மேலை நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதை, ஆங்கிலத்தில் பனானா ஃபிக் என்று கூறுவர்.

சர்க்கரைக் கரைசலில் பழங்களைப் பதப்படுத்தல்

உலர் பழத் தயாரிப்புக்குச் செய்ததைப் போலவே, முற்றி வெளிர் மஞ்சள் நிறமாக மாறிய பழங்களை எடுத்துத் தோலை உரித்து, ஒரு லிட்டர் நீருக்கு 7.4 கிராம் வீதம் கலந்த பொட்டாசியம் மெட்டா பைசல்பேட் கரைசலில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு கிலோ பழத்துக்கு முக்கால் கிலோ சர்க்கரை தேவைப்படும்.

தேவையான சர்க்கரையை மூன்று பங்காகப் பிரித்து, ஒரு பங்கு சர்க்கரையை, பழங்கள் மூழ்கும் அளவிலான நீரில் கரைத்துக் கொதிக்க வைக்க வேண்டும். அதில் பழங்களை இட்டு, இலேசாகச் சூடானதும் இறக்கி விட வேண்டும். பழத்துண்டுகளை எடுத்து, இரண்டாம் நாள் மற்றொரு பங்கு சர்க்கரைக் கரைசலில் போட்டுச் சூடாக்க வேண்டும். பிறகு, சூடு சற்று ஆறியதும் பழங்களை மூடி வைக்க வேண்டும். இதைப்போல, மூன்றாம் நாளும் செய்ய வேண்டும். முதல்நாள் சர்க்கரையின் அளவு 50 பிரிக்சும், மூன்றாம் நாள் 70 பிரிக்சும் இருக்க வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று நாட்கள், பழங்களை அப்படியே சர்க்கரைப் பாகில் ஊறவிட வேண்டும். பிறகு, வெளியே எடுத்துத் தட்டுகளில் பரப்பி, உலர்த்தும் எந்திரத்தில் வைத்து உலர்த்த வேண்டும். பழங்களை வட்டத் துண்டுகளாக வெட்டியோ அல்லது முழுப் பழமாகவோ இதைத் தயாரிக்கலாம். இதை, ஆங்கிலத்தில் ஆஸ்மாட்டிக் டிஹைடுரேடட் பனானா (osmatic dehydrated banana) என்று சொல்வர்.

மலை வாழைப்பழ கெட்சப்

மலை வாழைப் பழங்களைத் தோல் நீக்கிக் கூழாக்கிக் கொள்ள வேண்டும். இத்துடன் 30 விழுக்காடு பப்பாளிப் பழக்கூழைக் கலக்க வேண்டும். இத்துடன் 10 கிராம் வெங்காயத் துண்டுகள், மூன்று பட்டை, மூன்று கிராம்பு, நான்கு பூண்டுப் பற்கள், ஐந்து கிராம் மிளகு, ஐந்து கிராம் சீரகம், இரண்டு கிராம் மிளகாய்த்தூள் ஆகியவற்றை இலேசாக அரைத்து, மெல்லிய துணியில் கட்டி, பழக்கூழில் இறக்கி விட வேண்டும்.

பழக்கூழ் மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை வேகவிட்டு, துணி முடிச்சை எடுத்து விட வேண்டும். பிறகு, உப்பு, வினிகர், சோடியம் பென்சோயேட் ஆகியவற்றைச் சிறிதளவு சேர்த்துக் கலக்க வேண்டும். இதைச் சுத்தமான கண்ணாடிப் புட்டிகளில் நிரப்பி வைக்கலாம். பப்பாளிப் பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும், இது கெட்சப்புக்கு நல்ல நிறத்தைத் தருவதுடன், தக்காளிப் பழத்தில் தயாரித்ததைப் போலவே இருக்கும்.

மலை வாழைப்பழ ஜாம்

மலை வாழைப்பழக் கூழுடன் 15 விழுக்காடு மாம்பழக் கூழ், 30 விழுக்காடு ஆரஞ்சுப் பழச்சாற்றைச் சேர்க்க வேண்டும். ஒரு கிலோ பழத்துக்கு 600 கிராம் சர்க்கரை வீதம் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இத்துடன் 20 கிராம் சிட்ரிக் அமிலத்தையும் கலந்து கொதிக்க விட வேண்டும். அடிப்பிடிக்காமல் இருக்க, கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஜாம் பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

ஜாம் பதத்தை அறிய, ஒரு கரண்டியில் எடுத்து நீரில் விட்டுப் பார்க்க வேண்டும். அப்போது அந்த ஜாம் நீரில் பரவாமல் மெல்லிய உருண்டையாக நிற்க வேண்டும். இப்படித் தயாரித்த ஜாமை, சூடு ஆறுவதற்கு முன், சுத்தமான கண்ணாடிப் புட்டிகளை மரப்பலகையில் வைத்து நிரப்பி மூடிவிட வேண்டும். மழை வாழைப் பழங்களுடன் 30 விழுக்காடு பப்பாளிப் பழக்கூழைக் கலந்தும் ஜாம் தயாரிக்கலாம்.

மலை வாழைப்பழ ஜெல்லி

மலைவாழைப் பழங்களைக் கழுவி, தோலுடன் சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு கிலோ பழத்துக்கு 200 கிராம் ஆப்பிள் துண்டுகள் வீதம் சேர்த்து, பழம் மூழ்கும் வரை நீர் விட்டு, மிதமான சூட்டில் 30 நிமிடம் வேகவிட வேண்டும். பிறகு, இதை மஸ்லின் அல்லது மல் துணியில் கட்டித் தொங்க விட்டு, தெளிந்த நீரைச் சேமிக்க வேண்டும்.

பிறகு, ஒரு லிட்டர் தெளிந்த நீருக்கு 450 கிராம் சர்க்கரை, ஒரு விழுக்காடு சிட்ரிக் அமிலம் வீதம் சேர்த்து, மிதமான சூட்டில் ஜாமைப் போல வேகவிட வேண்டும். பதம் வந்ததும் இறக்கி ஆறவிட்டு, சுத்தம் செய்த கண்ணாடிப் புட்டிகளில் நிரப்பி வைக்க வேண்டும். இந்த ஜெல்லி புதுமையான சுவையில் இருக்கும். இதைக் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

மலை வாழைப்பழப் பொடி

முற்றி வெளிர் மஞ்சள் நிறமாக மாறிய பழங்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் வீதம் கலந்த கரைசலில் இட்டு, கொஞ்ச நேரம் ஊறவிட வேண்டும். பிறகு, வெளியே எடுத்துத் தட்டுகளில் பரப்பி, உலர்த்தும் எந்திரத்தில் இட்டு நன்றாகக் காயவிட வேண்டும். பிறகு, பொடியாக அரைத்து, காற்றுப் புகாத வகையில், தகர டப்பாக்களில் அடைத்து வைக்கலாம். இந்தப் பொடியை, கேக், பிஸ்கட் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.

மலை வாழைப்பழ இணை உணவு

மலை வாழைப் பொடியுடன் 30 விழுக்காடு பால் பொடி, மல் துணியில் சலித்து வெண்ணிறமாகக் கிடைக்கும் கேழ்வரகு மாவு 10 விழுக்காடு மற்றும் 30 விழுக்காடு சர்க்கரைத் தூளைக் கலந்து, குழந்தை உணவைத் தயார் செய்யலாம். சர்க்கரைத் தூளை அவ்வப்போது கலந்தும் பயன்படுத்தலாம். இதைப் பால் அல்லது நீருடன் கலந்து, சூடான பானமாக அல்லது கூழாகத் தயாரித்து உண்ணலாம்.

இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், வாழைப்பழ மணத்தில் சுவையாக இருக்கும். குழந்தைகள் கேழ்வரகுக் கூழை விரும்பி உண்ண மாட்டார்கள். இதை விரும்பாத பெரியவர்களும் இருப்பார்கள். இவர்கள் எல்லாரும் இந்த இணை உணவில் கேழ்வரகைக் கலந்து கொடுக்கும் போது விரும்பி உண்பார்கள்.

மலைவாழைச் சேமியா, இடியாப்பம்

மைதா மாவைச் சலித்துச் சுத்தம் செய்து சிறிது நேரம் ஆவியில் வேகவிட வேண்டும். இதில், சூடான நீர் மற்றும் பழுத்த வாழைப் பழங்களைச் சேர்த்துக் கட்டியாகப் பிசைந்து, சேமியா பிழியும் குழலில் இட்டுப் பிழிய வேண்டும். பிறகு, இதை உலர்த்தும் எந்திரத்தில் வைத்து 40 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் உலர்த்திச் சேமித்து வைக்கலாம். இதைத் தேவைப்படும் போது எடுத்து, இரண்டு நிமிடம் வெந்நீரில் இட்டு, இனிப்புப் பண்டங்களைச் செய்யலாம்.

மலைவாழைப் பொடியை, மைதா மற்றும் அரிசி மாவுடன் கலந்து, சேமியா மற்றும் இடியாப்பம் தயாரிக்கலாம். இந்தப் பொடியை வைத்துக் கார வகை உணவுகளைத் தயாரிக்கலாம். இவை, மலை வாழைப்பழ மணத்தில் மிகவும் சுவையாக இருக்கும்.

மலை வாழைப்பழ பானம்

மலை வாழைப்பழத்தைக் கூழாக்கி, ஒரு கிலோ பழத்துக்கு ஒரு கிராம் பெக்டினோஸ் என்னும் நொதிப்பானைக் கலந்து 4-5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, அதைப் பிழிந்து சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் தெளிந்த பழச்சாற்றில், ஒரு கிலோ சாறுக்கு இரண்டு பங்கு சர்க்கரை, ஒரு லிட்டர் நீர், பத்து கிராம் சிட்ரிக் அமிலம் வீதம் கலந்து சூடாக்க வேண்டும்.

சர்க்கரை கரைந்ததும் வடிகட்டி ஆறவிட வேண்டும். பிறகு, ஏழு மில்லி கிராம் பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் வீதம் கலந்து, சுத்தமான கண்ணாடிப் புட்டிகளில் அடைத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது ஒரு பங்கு சாறுக்கு மூன்று பங்கு நீர் வீதம் கலந்து பருகலாம்.

மலை வாழை மென்பானம்

மலை வாழைப் பழத்தைக் கூழாக்கி, ஒரு கிலோ பழத்துக்கு ஒரு கிராம் பெக்டினோஸ் என்னும் நொதிப்பானைக் கலந்து 4-5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, ஒரு கிலோ பழச்சாறுக்கு 500 கிராம் சர்க்கரை, இரண்டு லிட்டர் நீர், பத்து கிராம் சிட்ரிக் அமிலம் வீதம் கலந்து சூடாக்கி வடிகட்ட வேண்டும்.

சர்க்கரைப் பாகு ஆறியதும் பழச்சாற்றைக் கலந்து 80 டிகிரி சென்டிகிரேடு வரை சூடாக்கி பாசுரைஸ் செய்ய வேண்டும். பிறகு, ஒரு லிட்டர் பழச்சாறுக்கு ஐந்து கிராம் பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் வீதம் கலந்து, சுத்தமான கண்ணாடிப் புட்டிகளில் அடைத்து வைக்க வேண்டும். அடுத்து, இந்தப் புட்டிகளை நீரில் வைத்து 80 டிகிரி சென்டிகிரேடு வரும் வரை சூடாக்கி, ஆற வைத்துச் சேமிக்க வேண்டும். தேவையான போது நன்றாகக் குலுக்கி விட்டுப் பருகலாம்.

மலை வாழை சிப்ஸ்

முற்றி, பச்சையும், வெளிர் மஞ்சள் நிறத்திலும் உள்ள காய்களை எடுத்துக் கழுவித் தோலை நீக்க வேண்டும். பிறகு, வட்டத் துண்டுகளாக நறுக்கி, 0.1 சதவீத பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் கரைசலில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சுத்தமான நீரில் கழுவி, உலர் எந்திரத்தில் 60 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் உலர்த்த வேண்டும். நன்கு உலர்ந்ததும் எண்ணெய்யில் பொரித்து உண்ணலாம். பொரிக்கும் போது சிறிதளவு உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், சுவையாகவும், கெடாமலும் இருக்கும்.

மலை வாழை அல்வா மற்றும் பாயாசம்

முற்றி நன்கு பழுத்த பழங்களை எடுத்துக் கழுவி, தோலை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு நீரில் நன்கு வேகவிட வேண்டும். ஒரு கிலோ பழத்துக்கு 700 கிராம் வீதம் வெல்லப்பாகைத் தயாரிக்க வேண்டும். இந்தப் பாகை, வேக வைத்த பழத்தில் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். இந்தக் கலவை நன்கு கெட்டியானதும் சிறிதளவு ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். இது, ஓராண்டு வரையில் கெடாமல் இருக்கும்.

சப்பாத்தி, பூரி, தோசை, பரோட்டா போன்றவற்றை இதில் தொட்டுச் சாப்பிடலாம். வெல்லம் சேர்ந்திருப்பதால் சுவையும் நிறமும் மாறுபட்ட நிலையில் இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இதில் வெல்லம் இருப்பதால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்துக் கிடைக்கும்.

மலை வாழைப்பழ இனிப்பு அல்வாவை வைத்துப் பாயாசம் செய்யலாம். தேங்காய்ப் பாலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் எடுக்கும் பாலை அப்படியே வைத்துக் கொண்டு, இரண்டு மூன்றாம் தடவை எடுக்கும் பாலை ஒன்று சேர்த்து இளஞ்சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து, பாலின் அளவுக்கு ஏற்ப, மலை வாழைப்பழ இனிப்பு அல்வாவைச் சேர்த்து, சிறிது கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.

பிறகு, முதலில் எடுத்த தேங்காய்ப் பாலை இதில் சேர்க்க வேண்டும். மேலும், இதில் ஏலக்காய்ப் பொடி, சிறிது சிறிதாக நறுக்கிய முற்றிய தேங்காய்ப் பற்களை நெய்யில் பொரித்துச் சேர்த்தால், சுவையான மலை வாழைப்பழப் பாயாசம் தயார்.


முனைவர் இரா.ஜெயவள்ளி, முனைவர் ஜே.சுரேஷ், முனைவர் இரா.அருள் மொழியான், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks