வீட்டில் சேரும் எல்லாக் கழிவுகளையும் ஒரு நெகிழிப் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம். அதைக் குப்பை வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி விடுகிறார்கள். இதனால், உரமாக மாற வேண்டிய மட்கும் குப்பை, நெகிழிப் பையில் கிடந்து அழுகி, அந்தப் பகுதியே நாற்றம் எடுத்து விடுகிறது.
இதைப்போல, சமையல் அறையில் கிடைக்கும் தக்காளி, வெங்காயத் தோல்கள், கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், முருங்கைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்றவற்றின் தேவையற்ற பகுதிகளை, வீணாகத் தூக்கி எறிவதற்குப் பதிலாக, செடிகளுக்கு உரமாகப் போடுகிறோம்.
இதைப்போல, தேனீர்க் கழிவுத் தூளையும் அப்படியே கொண்டு போய்ச் செடிகளுக்குப் போடுகிறோம். பழங்களைச் சாப்பிட்டு விட்டு, தேவையற்ற கழிவுகள் மற்றும் முட்டை ஓடுகளையும் அப்படியே தான் கொண்டு போய்க் கொட்டுகிறோம். இப்படி, உரம் போடுகிறோம் என்னும் பெயரில், செடிகளின் வேர்ப்பகுதியில் கொட்டி விடுவதால், அந்தச் செடிகளுக்கு அவை, வேறொரு வகையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
மேலும், இத்தகைய செயல்களால், நமக்குக் கொசுத் தொல்லையும், பூச்சி மற்றும் பூஞ்சைத் தொல்லையும் வந்து விடும். இதனால், தோட்டம் முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கும். இதிலிருந்து நோய்க் கிருமிகள் பரவிடவும் வாய்ப்புண்டு. எனவே, இந்தக் கழிவுகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
வீட்டில் சேரும் மட்கும் கழிவுகளை உரமாக மாற்றலாம். பலரும் வீட்டில் தோட்டம் வைத்து, தொட்டிச் செடிகளை ஆர்வமாக வளர்ப்பார்கள். தாவரங்கள் நன்றாக வளர ஊட்டம் அவசியம். ஆனால், இதற்கான உரத்தைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை.
செய்முறை
ஏழு மண் தொட்டிகளை வாங்கிக் கொள்ள வேண்டும். இவற்றில், ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு தொட்டியென வைத்துக் கொண்டு, குப்பைகளைப் போட வேண்டும். அசைவக் கழிவுகளை அதிகமாகப் போடக் கூடாது. கழிவு ஈரமாக நொசநொசத்து இருந்தால், கொஞ்சம் மண்ணைப் போட வேண்டும்.
இந்தத் தொட்டிகள் நிறைவதற்கு 3-4 மாதங்கள் ஆகும். தொட்டிகள் நிறைந்த பிறகு, 20-30 நாட்கள் வரை அப்படியே விட வேண்டும். காற்றுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது கழிவைக் கிளறி விட வேண்டும். பிறகு, இந்தத் தொட்டிகளில் காய்கறிச் செடிகள், பூச்செடிகளை விருப்பம் போல் நட்டு வளர்க்கலாம்.
அப்படிச் செடிகளை வைத்து விட்டால், புதிய தொட்டிகளை வாங்கி அவற்றில் குப்பைகளை இட்டு வரலாம். இல்லையெனில், பழைய தொட்டிகளில் உள்ள உரத்தைத் தோட்டத்தில் இட்டு விட்டு, மீண்டும் புதிய கழிவைப் போடத் தொடங்கலாம்.
இயற்கை உரம் தயாரித்தல்
கிராமங்களில் மட்டுமன்றி, நகரங்களிலும் வீட்டு மாடி மற்றும் வீட்டின் காலியிடங்களில் தோட்டம் அமைத்து, காய்கனிச் செடிகளை வளர்ப்பது அதிகரித்து வருகிறது. நமது அன்றாடச் சமையலில் பயன்படும் உணவுப் பொருள்களின் கழிவுகளை, சிறந்த உரமாக மாற்றலாம்.
வெங்காயம், உருளைக் கிழங்கின் தோல்கள், அழுகிய தக்காளி, இலைக்கழிவு, முட்டை ஓடு, தேனீர்த் தூள் போன்றவற்றைக் குப்பையில் கொட்டுகிறோம். இவற்றை, வீட்டின் பின்புறம் குழியைத் தோண்டி, அதில் கொட்டி, சிறிது மண்ணைத் தூவி விட்டால், சில நாட்களில் உரமாக மாறி விடும். மாடி வீடுகளில் வசிப்போர், உடைந்த மண் சட்டிகள், வாளிகள் போன்றவற்றில் மண்ணை இட்டு, இந்த இயற்கை உரத்தைத் தயாரிக்கலாம்.
இக்கழிவுகளை, வெய்யில் நன்கு படும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படிச் செய்தால், கழிவுப் பொருள்கள் அனைத்தும் ஒன்றாகி, நன்றாக மட்கி, சத்துள்ள உரமாகும். இதைச் செடிகளுக்கு உரமாக இட்டால், அவை நன்றாக வளர்ந்து, சுவையும் சத்துகளும் நிறைந்த காய்கனிகளைத் தரும்.
பூங்காக் கழிவுகள்: பூங்கா மற்றும் வீட்டுத் தோட்டங்களில் உதிர்ந்து கிடக்கும் இலை தழைகளைச் சேகரித்து, தோட்டத்தின் ஒரு மூலையில் குவித்து வைக்க வேண்டும். பிறகு, அவற்றைச் சிறு சிறு துகள்களாக்க வேண்டும். இவற்றில் இருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம் தான், மட்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.
எனவே, கரிமச்சத்து, தழைச்சத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது, பச்சை மற்றும் காய்ந்த கழிவுகளைச் சேர்த்துக் கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள் மற்றும் பழுப்புக் கழிவுகளான வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புல்லைக் கலந்து வைத்தால், குறைந்த காலத்தில் மட்கி உரமாக மாறும்.
ஆக்சிஜனின் அவசியம்: கம்போஸ்ட் குழியில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால் தான், நுண்ணுயிர்களின் இயக்கம் சிறப்பாக இருக்கும். எனவே, குழியில் காற்றோட்டத்தை ஏற்படுத்த, அதன் பக்கவாட்டில் அல்லது செங்குத்து நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை, குழியிலிருக்கும் கழிவுகள் மேலும் கீழும் செல்லும் வகையில் கிளறி விட்டால், கழிவை மட்கச் செய்யும் நுண்ணுயிர்கள் விரைவாக இயங்கும்.
ஈரப்பதம்: கம்போஸ்ட் குழிகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் இருக்க வேண்டும். ஈரப்பதம் குறைந்தால், நுண்ணுயிர்கள் குறைந்து, மட்கும் தன்மை பாதிக்கப்படும்.
கம்போஸ்ட் குழிகளில் இடப்படும் கழிவு, முப்பது நாட்களில் மட்கி விடும். மட்கிய உரம், கறுப்பு நிறமாக, சிறு துகள்களாக இருக்கும். இதைத் தரையில் இட்டு நன்கு கிளறி விட்டு, அடுத்த நாள், 4 மி.மீ. சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளலாம்.
செறிவூட்டல்: இப்படிக் கிடைத்த உரத்தை, நிழலும் கடினமான தரையும் உள்ள இடத்தில், ஒரு டன் உரத்துக்கு, 0.02 சதம் வீதம், அசட்டோபேக்டர், சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் 0.2 சதம் ராக்பாஸ்பேட் வீதம் கலந்து, 60 சத ஈரப்பதத்தில் 20 நாட்கள் குவித்து வைத்தால், நுண்ணுயிர்கள் பெருகும். இதுவே செறிவூட்டப்பட்ட உரமாகும்.
இது, சாதாரண மட்கு உரத்தை விட, சத்துகள் மற்றும் நுண்ணுயிர்கள் நிறைந்தும், தாவர வளர்ச்சியைத் தூண்டும் வகையிலும் இருக்கும். இந்த உரத்தை வீட்டுத் தோட்டத்துக்கு மட்டுமின்றி, நிலத்தில் பயிரிடும் அனைத்துப் பயிர்களுக்கும் இயற்கை உரமாக இடலாம்.
இயற்கை உரங்களின் நன்மைகள்
சாகுபடிச் செலவு குறைந்து நிகர இலாபம் கூடும். மண்வளம் சிறப்பாக இருக்கும். இயற்கை உரங்களை மட்டும் இட்டால், நிலங்களில் நன்மை செய்யும் பூச்சிகள், நுண்ணுயிரிகள் பெருகும். பயிர்கள் இயல்பாகவே பூச்சி மற்றும் நோயெதிர்ப்புத் திறனைப் பெறும். இதனால், இரசாயனப் பூச்சி மற்றும் நோய் மருந்துகளைத் தெளிப்பைக் குறைக்கவும், படிப்படியாக விட்டு விடவும் செய்யலாம். மண்ணின் கட்டமைப்பு இறுக்கமின்றி இருப்பதால், சத்துகளைப் பயிர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளும்.
சீரான பயிர் வளர்ச்சியும், தரமான விளைச்சலும் கிடைக்கும். சுற்றுச்சூழல் தூய்மை அடையும். நிலத்தடி நீர் தரமாக இருக்கும். பூச்சிக் கொல்லிகள் இன்மையால், வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் அழிவு தடுக்கப்படும். அதனால், அதிக மகரந்தச் சேர்க்கையும், அதிக உற்பத்தியும் ஏற்படும்.
இயற்கை வேளாண்மையில் பயன்படும் திரவ உரங்கள், மண்ணிலுள்ள சத்துகள் பயிர்களைச் சென்றடைய உதவுவதுடன், மண் வளத்தையும் காக்கும். இயற்கை உரங்களால் கிடைக்கும் விஷமற்ற உணவுகளை உண்பதால், வளமான சந்ததி உருவாகும். இயற்கை உரங்களை விவசாயிகளே தயாரிப்பதால் உரச்செலவினம் குறையும்.
முனைவர் ச.செண்பகவள்ளி, உதவிப் பேராசிரியர், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, முனைவர் த.பிரபு, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், தோட்டக்கலைத் துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம். முனைவர் சு.பொன்மணி, உதவிப் பேராசிரியர், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, மதர் தெரசா வேளாண்மைக் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை.