செய்தி வெளியான இதழ்: 2017 ஜூலை.
இன்றைய இளம் தலைமுறையினர் நாவல் பழத்தைப் பற்றியோ அதன் அரிய மருத்துவக் குணத்தைப் பற்றியோ அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் நாவல் பழங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே உண்டாகி வருகிறது. நாவல் மரத்தின் சிறப்பைப் பற்றி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெய்வ வழிபாட்டுக்கும் இது பயன்படுகிறது. நாவல் பழம், இலை, விதை, மரப்பட்டை, வேர் ஆகிய அனைத்துமே சிறந்த மருத்துவக் குணங்கள் மிக்கவை.
நாவல் மரம், ஆருசுதம், நேரேபம் ஆகிய மருத்துவப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. நாவல் பழத்துக்கு, நாகப்பழம், நவாப்பழம், பிளாக் பிளம், ஜம்பலம் என, வேறு பெயர்களும் உண்டு. ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட நாவல் மரம், இந்தியாவில் வறண்ட பகுதிகளைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மை மிக்கது. நன்கு வளர்ந்த மரத்திலிருந்து ஆண்டுக்குச் சராசரியாக 50 முதல் 80 கிலோ பழங்கள் வரையில் கிடைக்கும்.
நாவல் பழம் இனிப்புக் கலந்த துவர்ப்புச் சுவையில் இருக்கும். இதில், நீள வடிவம், உருண்டை வடிவம் என, இருவகைப் பழங்கள் உண்டு. இவற்றில், உருண்டை வடிவப் பழமே மருத்துவக் குணங்களை உடையது. இந்தப் பழம் பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது.
மருத்துவப் பண்புகள்: பழம்
நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரையைச் சேர்த்து உண்டு வந்தால், வாய்ப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். செரிமானச் சிக்கலைப் போக்கி, குடல் தசையை வலுவடையச் செய்யும். மலச்சிக்கலைப் போக்கும். நாவல் பழச்சாறு வயிற்றுப் போக்கையும், வாயுத் தொல்லையையும் சரிப்படுத்தும். பழச்சாறுடன் தேனைக் கலந்து குடித்தால், வெய்யிலால் ஏற்படும் உடல் வெப்பம் குறையும். தூக்கமின்மையைப் போக்கும். தமனிகளில் உண்டாகும் சிக்கல்களைக் குறைப்பதால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறையும். மெலிந்த உடலைக் கொண்டவர்கள் நாவல் பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். பித்தத்தைத் தணிக்கும். சரும நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.
விதை
நாவல் விதைகளை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் நீரில் கலந்து குடித்து வந்தால், நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கலாம். இதிலுள்ள ஐம்போலைன் என்னும் குளுக்கோஸைட், உடலில் ஸ்டார்ச்சானது சர்க்கரையாக மாறுவதைத் தடுத்து நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கும் என, நீரிழிவு ஆய்வு மையம் தெரிவிக்கிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் நாவல்பழ விதைகள் உதவுகின்றன. மேலும், இதில் புரதம் 0.7 சதம், மாவுச்சத்து 19.7 சதம், கால்சியம் 0.02 சதம் உள்ளதால், இது விலங்குகளுக்கு அடர் தீவனமாக வழங்கப்படுகிறது.
இலை
நாவல் இலைக்கொழுந்தை நசுக்கிச் சாறெடுத்துப் பருகினால் வயிற்றுப்போக்குக் கட்டுப்படும். மேலும், இதைக் கஷாயமாக்கித் தேன், வெண்ணெய் அல்லது தயிரைக் கலந்து சாப்பிட்டால், மலட்டுத்தன்மை அகலும். இலையைப் பொடியாக்கிப் பல் துலக்கினால், ஈறுகளும் பற்களும் நலமாகும்.
மரப்பட்டை
மரப்பட்டையை நீரில் கொதிக்க வைத்துக் குடிநீராக அருந்தினால், ஆஸ்துமா, வாய்ப்புண், இருமல், நாவறட்சி, உடல் களைப்பு ஆகியன அகலும். இது கிருமிநாசினியாகவும் செயல்படும். இந்நீரைத் தினமும் பருகினால், இரத்தழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும், இது கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளையும் நீக்கும்.
வேர்
நாவல் வேரை நீரில் ஊற வைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியடையும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உகந்தது.
வா.திவ்யா, முனைவர் க.சு.ஞானலெட்சுமி, முனைவர் த.பாஸ்கரன், உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பக் கல்லூரி, கோடுவெளி, சென்னை – 600 052.