கமலா ஆரஞ்சை ஆங்கிலத்தில் மாண்டரின் ஆரஞ்சு என்று அழைப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் சிட்ரஸ் ரெட்டிகுலேட்டா ஆகும். இது ரூடேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பழமரம். கமலா ஆரஞ்சு நல்ல சுவை மற்றும் உயிர்ச் சத்துகள் நிறைந்த பழம். இதில், உயிர்ச்சத்து சி அதிகமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் சேர்வராயன் மலைப்பகுதி, கீழ்ப்பழனி மலைப்பகுதி மற்றும் நீலகிரியின் தாழ்வான உயரமுள்ள பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதைப்போல, கர்நாடக மாநிலத்தின் கூர்க் பகுதியில், மராட்டிய மாநிலத்தின் நாக்பூர் பகுதியில், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், கமலா ஆரஞ்சு சாகுபடி நடைபெற்று வருகிறது.
இரகங்கள்
கொடை, கூர்க், காசி, தேசி மற்றும் நாக்பூர் சான்ட்ரா இரகங்கள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. நாக்பூர் சந்திரா, டார்ஜிலிங், சிக்கிம், சுமித்திரா, காசி மாண்டரின், கின்னோ ஆகிய உயர் விளைச்சல் இரகங்களும் உள்ளன. காசி இரகம் அதிகமாகக் காய்க்கக் கூடியது, நடுத்தர வளர்ச்சியைக் கொண்டது. பழங்களின் எடை 140-220 கிராம் இருக்கும். தோல், வழவழப்பாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
கூர்க் இரகம் பெரிய மரமாக வளர்ந்து அதிகமாகக் காய்க்கும். இது, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தேசி இரகம், முள்ளில்லாத பெரிய மரமாக வளரும். இது, பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இதைத் தவிர, சப்ஸ்மா, டான்சி, கின்னோ என்னும் வீரிய ஒட்டு இரகங்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில், கீழ்ப்பழனி மலைப்பகுதியில், காப்பியில் ஊடுபயிராகக் கமலா ஆரஞ்சு சாகுபடி செய்யப்படுகிறது. இம்மரங்கள், காப்பிக்குத் தகுந்த நிழலைக் கொடுத்து, காப்பியில் உயர் மகசூலை எடுப்பதற்கும் துணை செய்கின்றன.
இனப்பெருக்கம்
விதை மூலம் உற்பத்தி செய்த நாற்றுகளை நட்டு வளர்த்தால், அவை பலன் கொடுப்பதற்கு 7-8 ஆண்டுகள் ஆகும். மேலும், அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதால், தாய்ச் செடிகளின் குணங்கள் இருக்காது. எனவே, மொட்டுக் கட்டிய கமலா ஆரஞ்சு நாற்றுகளை நட்டு வளர்ப்பதே நல்லது. ரங்பூர் எலுமிச்சை, ரப்லெமன், கிளியோபாட்ரா மாண்டரின் ஆகிய வேர்ச் செடிகள் மொட்டுக்கட்ட ஏற்றவை.
பயிரிடும் முறை
கீழ்ப்பழனி மலையில், தனிப்பயிராக அல்லது கலப்புப் பயிராகக் கமலா ஆரஞ்சை சாகுபடி செய்யலாம். தகுந்த இடைவெளி கொடுத்து நாற்றுகளை நட வேண்டும். அப்போது தான், குறிப்பிட்ட பரப்பில், சரியான எண்ணிக்கை மூலம் நல்ல மகசூலை எடுக்க இயலும். கமலா ஆரஞ்சு நாற்றுகளை நடுவதற்கு ஏற்ற இடைவெளி 5-6 மீட்டராகும்.
நாற்றுகளை நடுமுன், சாகுபடி நிலத்தைத் திருத்தி, கல் கோட்டைகளை அமைத்து, மண்ணரிப்பு ஏற்படாமல், மேல்மண்ணை நிலை நிறுத்த வேண்டும். பிறகு, 5 அல்லது 6 மீட்டர் இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும். குழிகள் 75 செ.மீ. அதாவது, 2.5 அடி நீள, அகல, ஆழத்தில் இருந்தால், கன்றுகளின் வேர்கள் நன்றாக வளரும்.
குழிகளில், மேல்மண், நன்கு மட்கிய தொழுவுரம் மற்றும் மணலைச் சம அளவில் கலந்து இட வேண்டும். கீழ்ப்பழனி மலையில் ஆரஞ்சு கன்றுகளை நடுவதற்கு ஏற்ற மாதங்கள் ஜூன் ஜூலை ஆகும். நாற்று நடவில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மொட்டுக் கட்டிய பாகம் தரைக்கு மேல் இருக்க வேண்டும், கன்றுகளை நேராக நட வேண்டும்.
நட்ட இரு தினங்களில் மழை பெய்யா விட்டால், உயிர்நீர் விடுவது அவசியம். நட்ட பிறகு, காய்ந்த சருகுகள் மூலம், நாற்றுகளைச் சுற்றி 2 அடி விட்டத்தில் நிலப்போர்வை அமைக்க வேண்டும். அதன் மூலம், நீர் விரைவாக ஆவியாகாமல் தடுக்கலாம்.
இளம் பருவத்தில் கமலா ஆரஞ்சு மரங்களை முறைப்படி வளர்க்க வேண்டும். ஏனெனில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் மரத்தின் அமைப்பு, வடிவம், தன்மை போன்றவை, நட்ட முதல் மூன்று ஆண்டுகளில் தான் முடிவு செய்யப்படுகின்றன.
முதலில், மொட்டுக் கட்டிய இடத்திலிருந்து வரும் கிளைகளை மட்டும் தான் வளர அனுமதிக்க வேண்டும். அதற்குக் கீழோ அல்லது பக்கவாட்டிலோ வளரும் கிளைகளை அகற்ற வேண்டும். பிறகு, தரையிலிருந்து சுமார் 2.5 அடி உயரம் வரை ஒரே தண்டாக வளர்த்து, அதற்கு மேல் நாற்புறங்களில் கிளைகளை வளர அனுமதிக்க வேண்டும். கிளைகளில் உள்ள முட்களை நீக்கி விட வேண்டும்.
ஒரு கிளைக்கு மேல் மற்றொரு கிளை அமைவதற்குச் சரியான இடைவெளி 15-20 செ.மீ. ஆகும். மேலும், குறுக்காக வளரும் கிளைகளையும், நீர்ப் போத்துகள் எனப்படும் செங்குத்தாக வளரும் கிளைகளையும் எடுத்து விட வேண்டும். இப்படி, தொடக்கத்திலேயே மரங்களை முறைப்படி வளர்த்து, நல்ல வெய்யில் மற்றும் காற்றைக் கிடைக்கச் செய்ய வேண்டும். சீரான வடிவமைப்பு மூலம் மரங்கள் ஒழுங்கான வடிவம் பெறுவதால், மருந்தடிக்க, அறுவடை செய்ய ஏதுவாக இருக்கும்.
நீர் மேலாண்மை
கீழ்ப்பழனி மலையில் மழையை நம்பியே கமலா ஆரஞ்சு சாகுபடி நடைபெற்று வருகிறது. எனவே, நிலப்பரப்பில் தடுப்பணைகளை அமைத்து மழைநீரைச் சேமிக்கலாம். இந்த நீர் கோடைக் காலத்தில் மிகவும் பயன்படும். இளம் நாற்றுகள் மற்றும் மரங்களின் வேர்களுக்கு அருகிலேயே நீர்க் கிடைத்திட, நிலநீர்ச் செலுத்திகள் மூலம், அதாவது, சப்சாயில் இன்ஷெக்டார் மூலம் நீரைக் கொடுக்கலாம். மரத்தூர்களைச் சுற்றி, நல்ல நிலப்போர்வையை அமைத்தால், களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, வேரைச் சுற்றியுள்ள ஈரப்பதத்தைக் காக்கலாம்.
உரமிடுதல்
மாண்டரின் ஆரஞ்சு சாகுபடியில் உர நிர்வாகம் மிகவும் அவசியமாகும். தகுந்த உரங்களை, தகுந்த சமயங்களில் அளிப்பதன் மூலம் மகசூல் கூடுவதுடன், பழங்களும் தரமாக இருக்கும். நாற்றுகளை நட்ட முதலாண்டில், 10 கிலோ தொழுவுரம், 100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து மற்றும் 50 கிராம் சாம்பல் சத்தை இட வேண்டும். அதாவது, ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு 217 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 85 கிராம் பொட்டாசை இட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும், 100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து, 50 கிராம் சாம்பல் சத்து வீதம் கூட்டிக்கொள்ள வேண்டும். ஆறு வயதில் மகசூல் தரும் மரங்களுக்கு, 600 கிராம் தழைச்சத்து, 250 கிராம் மணிச்சத்து மற்றும் 400 கிராம் சாம்பல் சத்தை, 30 கிலோ தொழுவுரத்தில் கலந்து வைக்க வேண்டும்.
அதாவது, 1,300 கிராம் யூரியா, 1,562 கிராம் சூப்பர், 650 கிராம் பொட்டாசைக் கலந்து வைக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், ஆண்டுக்கு மரத்துக்கு, 1.250 கிலோ யூரியா, 1.500 கிலோ சூப்பர், 750 கிராம் பொட்டாசை வைக்க வேண்டும்.
இந்த உரங்களை இரண்டு சரிபாதியாகப் பிரித்து, முதல் பாதியை ஜூலை, ஆகஸ்டு மாதங்களிலும், இரண்டாவது பாதியை அக்டோபர் மாதத்திலும் இடலாம். உரங்களைப் பிரித்து இட்டால், மரங்கள் ஊக்கமாக வளர்ந்து, தொடர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கும். மண்ணில் இடும் உரமும் வீணாகாது.
ஆரஞ்சு வகைகளுக்கு, முக்கியச் சத்துகளுடன் நுண்ணுரங்களும் தேவை. எனவே, மரங்கள் புதிதாகத் தளிர் விடும் போது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, சிங்க் சல்பேட் 0.5 சதம், மாங்கனீசு சல்பேட் 0.05 சதம், இரும்பு சல்பேட் 0.25 சதம், மெக்னீசிய சல்பேட் 0.5 சதம், போரான் 0.1 சதம் மற்றும் மாலிப்டினம் 0.003 சதம் வீதம் தெளிக்க வேண்டும்.
மேலும், மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ஒருமுறை 50 கிராம் சிங்க் சல்பேட், மாங்கனீசு, இரும்புச்சத்து வீதம் இட்டால், ஆரஞ்சு மரங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். ஜனவரி பிப்ரவரியில், 2-3 முறை, மரத்துக்கு நான்கு கிலோ சுண்ணாம்பு வீதம் இட வேண்டும். இதை மற்ற உரங்களுடன் கலந்து இடக் கூடாது.
கவாத்து
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 70-90 செ.மீ. வரை நன்கு திடமாக வளர்ந்த மூன்று கிளைகளை விட்டுவிட்டு, மற்ற கிளைகளை அகற்றி விட வேண்டும். இதனால், தரமான காய்களும், அவற்றைத் தாங்கும் வலிமையும் அந்தக் கிளைகளுக்குக் கிடைக்கும். அதைப் போல, அதிகமாகக் கவாத்து செய்யவும் கூடாது.
காய்க்காத மற்றும் நோயுற்ற கிளைகளை மட்டும் கவாத்து செய்ய வேண்டும். பழத்தின் தரமானது, அது வளரும் சூழ்நிலை, இரகம், வேர்க்குச்சி, உர மேலாண்மை, முதிர்வு போன்றவற்றைப் பொறுத்தே அமையும். அதனால், கவாத்து செய்வது மிகவும் அவசியமாகும்.
வளர்ச்சி ஊக்கிகள்
நாப்தலின் அசிட்டிக் அமிலம்: நன்றாகக் காய்க்கும் ஆரஞ்சு மரங்களில் இருந்து பழங்கள் உதிரும். இதைத் தடுக்க, 30 பி.பி.எம். அளவிலான நாப்தலின் அசிட்டிக் அமிலக் கலவையை இருமுறை தெளிக்க வேண்டும். அதாவது, முதலில் பூக்கும் போதும், அடுத்து, காய்கள் கோலிக்குண்டு அளவில் இருக்கும் போதும் தெளிக்க வேண்டும். இந்தக் கலவையைத் தயாரிக்க, 33 லிட்டர் நீருக்கு ஒரு கிராம் நாப்தலின் வீதம் கலக்க வேண்டும்.
இதைலோசேட்: இந்த வளர்ச்சி ஊக்கியை, 67-100 பி.பி.எம். கரைசலாகத் தெளிப்பதன் மூலம், சிறு காய்களை உதிரச் செய்து, மற்ற காய்கள் திடமாக வளரவும், 5-6 நாட்களுக்கு முன்பே அறுவடை செய்யவும் முடியும். மேலும், சுளைகளின் பருமனும் அதிகமாகும். மரங்களில் பூக்கள் முழுமையாகப் பூத்த பிறகு, 50-60 மற்றும் 70-80 நாட்களில் தெளிக்க வேண்டும்.
ஜிப்ரல்லிக் அமிலம்: நிறையப் பூக்களைப் பூக்கும் மரங்கள், அவற்றின் வீரியத் தன்மையை இழந்து விடும். இதனால், அடுத்த மகசூல் குறையும். எனவே, இதைக் கட்டுப்படுத்த, 25 பி.பி.எம். அளவுள்ள ஜிப்ரல்லிக் அமிலக் கரைசலை, டிசம்பர் மாத இறுதியில் தெளிக்க வேண்டும்.
பெக்கலோபுயுட்ரசால்: இதை, 400-800 பி.பி.எம். அளவில் தெளித்தால், மரங்களின் வளர்ச்சிக் குறைந்து குட்டையாக இருக்கும். இதனால், மகசூல் பாதிக்காது. மரம் குட்டையாக இருப்பதால், பழங்களை எளிதாகப் பறிக்கலாம். அறுவடைச் செலவும் குறையும்.
களையெடுத்தல்
களைகளைக் கட்டுப்படுத்த, களைக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கலாம். களைகள் முளைத்த பிறகு எனில், ஏக்கருக்கு 1.5 லிட்டர் கிராமகசோன் களைக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். களைகள் முளைப்பதற்கு முன் எனில், ஏக்கருக்கு 2 கிலோ டையூரான் மருந்தை, 250 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பூச்சிகள் மற்றும் நோய்த் தாக்குதல்
இலைச் சுருட்டுப் புழுக்கள்: இவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. டைக்குளோரோவாஸ் அல்லது ஒரு மி.லி. டைமீத்தோயேட் 30 இ.சி. அல்லது ஒரு மி.லி. பென்தியான் 100 இ.சி. அல்லது 1.5 மி.லி. மோனோ குரோட்டோபாஸ் அல்லது 5 சத வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 3 சதம் வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்கலாம்.
அசுவினிப் பூச்சிகள்: இவை அடை அடையாகக் காணப்படும். இளந்தளிர்கள் மற்றும் பிஞ்சுகளில் உள்ள சாற்றை உறிஞ்சிச் சேதப்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 இ.சி. அல்லது 3 சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 40 கிராம் மீன் எண்ணெய் சோப் அல்லது 2 மி.லி. எண்டோ சல்பான் 35 இ.சி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகள்: இவற்றின் தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. குயினால்பாஸ் 25 இ.சி. அல்லது 1.5 மி.லி. மானோ குரோட்டோபாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
தண்டுத் துளைப்பான்: இந்தப் புழுக்கள் கிளைகள் மற்றும் தண்டுகளைத் துளைத்து, உள்ளிருக்கும் திசுக்களைத் தின்னும். கிளைகளில் உள்ள துளைகளைக் கொண்டும், மரத்தூள்கள் சிந்தியிருப்பதை வைத்தும், தண்டுத் துளைப்பானின் தாக்குதல் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்த, அதிகமாகத் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி, புழுக்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டும்.
அடுத்து, 2.5 மி.லி. நீருக்கு 2 மி.லி. மோனோ குரோட்டோபாஸ் வீதம் கலந்து துளைகளில் செலுத்தி, ஈரமான களிமண் அல்லது மோனோ குரோட்டோபாஸ் மருந்தில் நனைக்கப்பட்ட பஞ்சால், துளைகளை அடைத்து விட வேண்டும்.
வண்ணத்துப் பூச்சி: இது, பிஞ்சுகள் மற்றும் பழங்களைத் தாக்கும். பிஞ்சுகளில் உள்ள சாற்றை உறிஞ்சிச் சேதப்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த, நெகிழிப் பைகளின் அடியில் துளையிட்டு, அந்தப் பைகளைக் கொண்டு பழங்களை மூடிவிட வேண்டும். புகை மூட்டம் போட்டு அல்லது விளக்குப் பொறியை வைத்து, பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். அல்லது சர்க்கரைக் கழிவுடன், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. மாலத்தியான் வீதம் கலந்து வைக்க வேண்டும்.
சிலந்திப் பூச்சி: இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகத் தூள் 50 சதம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
நோய்கள்
ஆரஞ்சைத் தாக்கும் காங்கர் போன்ற சில பூசண நோய்கள் கமலா ஆரஞ்சைத் தாக்குவதில்லை. ஆரஞ்சைத் தாக்கும் முக்கிய நோய் சாம்பல் நோயாகும். இதைத் தடுக்க, வெட்டபிள் சல்பர் 0.5 சதம் அல்லது பேலிடான் 0.1 சதம் வீதம் எடுத்து, 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
கறுப்புப் பூசண நோய் (Sooty mould): இந்த நோய் தாக்கினால், மரக் கிளைகளில் கறுப்புப் பொடியைப் போன்ற பூசணம் படர்ந்து விடும். இதைத் தடுக்க, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. பாஸ்பமிடான் மற்றும் 5 லிட்டர் நீரில் ஒரு கிலோ ஸ்டார்ச்சை எடுத்துக் கரைத்துக் கொதிக்க வைத்து, 20 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மேக மூட்டமாக இருக்கும் போது இதைத் தெளிக்கக் கூடாது.
அறுவடைக்குப் பின் ஏற்படும் நோய்கள்
அறுவடைக்குப் பின், கமலா ஆரஞ்சுப் பழங்களை நெடுந்தூரம் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் போது, பழங்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும். ஒருசில பழங்களில் காயங்கள் ஏற்பட்டால், ஜியோடிரைகம் கேன்டிடம் என்னும் பூசணம், காயங்கள் வழியாக உட்சென்று வளர்ந்து, பழங்களை மென்மையாக்கி அழுகச் செய்து விடும். இது, மற்ற பழங்களுக்கும் பரவி விடும். இதைத் தடுக்க, பழங்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பச்சை மோல்ட் என்னும் பெனிசீலியம் டிஜிடேட்டம், நீல மோல்ட் என்னும் பெனிசீலியம் இட்டாலிகம் ஆகியனவும், சேமிப்பில் உள்ள பழங்களில் சேதத்தை ஏற்படுத்தும். காயங்கள் வழியே பழங்களைத் தாக்கும் ஏஸ்பாஜில்லஸ் நைஜர் என்னும் பூசணம், பழத்தோலில் வெடிப்பை ஏற்படுத்தி, பழங்களை அழுகச் செய்யும்.
இதைத் தடுக்கவும், பழக்காம்பு காயும் நோய், ஆந்திரகுனோஸ் நோய் ஆகியவற்றைத் தடுக்கவும், தோட்டத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காய்ந்த குச்சிகளையும், கிளைகளையும் அவ்வப்போது நீக்கிவிட வேண்டும். பழ அறுவடை தொடங்க 45, 30, 15 நாட்களுக்கு முன்பு, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. பாவிஸ்டின் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் சேமிப்பின் போது, பழங்கள் சேதமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை நேரங்களில் பழங்களை அறுவடை செய்யக் கூடாது. பழங்களைச் சேகரிக்கும் ஆட்களின் விரல்களில் நீண்ட நகம் இருக்கக் கூடாது. அட்டைப் பெட்டிகளில் மெல்லிய அட்டைகள் மூலம், பழங்களை இடைவெளியின்றி அடுக்கிச் சந்தைக்கு அனுப்ப வேண்டும்.
அறுவடை செய்த பழங்களை, 1,000 பி.பி.எம். குளோரின் கலவையில் கழுவி விட்டு, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் பாவிஸ்டின் அல்லது பினோமைல் வீதம் கலந்த கலவையில், ஐந்து நிமிடம் நனைக்க வேண்டும். இதனால், அறுவடைக்குப் பிறகு ஏற்படும் பெரும்பாலான நோய்களைத் தடுக்க முடியும்.
கம்மோசிஸ்: கிளைகளில் உள்ள மரப்பட்டை நீளவாக்கில் வெடிப்பதால், அதிலிருந்து பிசின் போன்ற திரவம் வெளியேறி உறைந்து இருக்கும். மழைக் காலத்தில் இது அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம், பைட்டோப்த்தோரா பேரசைட்டிக்கா என்னும் பூசணமாகும். இதைத் தடுக்க, மரப்பட்டை வெடித்துள்ள பகுதியைக் கூரிய உளியால் செதுக்கி விட்டு, அந்த இடத்தில் போர்டோ பசையைத் தடவ வேண்டும்.
மொட்டுக் கட்டிய செடி வளர்ந்து மரமாகி, 3-5 ஆண்டுகளில் மகசூலுக்கு வந்து விடும். விதை நாற்றுச் செடி மரமாகி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மகசூலைத் தரும். முறையான சாகுபடி மற்றும் பயிர்ப் பாதுகாப்பு உத்திகளைக் கையாண்டு வந்தால், ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 8-10 டன் பழங்கள் கிடைக்கும். கீழ்ப்பழனி மலையில், டிசம்பர் ஜனவரி மற்றும் ஆகஸ்ட், செப்டம்பரில் பழங்கள் அறுவடைக்கு வரும்.
முனைவர் இரா.ஜெயவள்ளி,
உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைப் பழவியல் துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.