துவரை சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில், வேளாண்மைத் துறையின் மூலம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், துவரை சாகுபடி விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் விதை, உயிர் உரம், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டம், நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. ஆகவே, எருமப்பட்டி வட்டார விவசாயிகள், நிலக்கடலை, எள் போன்ற பயிர்களில் ஊடுபயிராக, துவரையைப் பயிரிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஆர்வமுள்ள விவசாயிகள், எருமப்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொண்டு அல்லது அவரவர் பகுதியைச் சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலரைத் தொடர்பு கொண்டு, இந்தத் திட்டத்தில் பதிவு செய்து பயனடையலாம் என, எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பா.செல்வி தெரிவித்துள்ளார்.
செய்தி: எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.