சூடோமோனாஸ் ப்ளோரசன்சின் பயன்கள்!

சூடோமோனாஸ் pseudomonas

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட்.

ன்றைய நவீன வேளாண்மையில் இரசாயனப் பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, பூச்சிகள் மற்றும் நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்பு சக்தி தோன்ற வழி வகுக்கிறது. அத்துடன் உணவுப் பொருள்களின், குறிப்பாகத் தானியப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் எஞ்சிய நஞ்சுகள் தங்கி உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஆனால், உயிரியல் முறை கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்துவதால் இத்தகைய சூழ்நிலைச் சீர்கேடு உயிரினங்களுக்கு ஏற்படுவதில்லை. அதுமட்டுமின்றி பூச்சி மற்றும் நோய்க் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை. ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பில் உயிர் எதிர்க்கொல்லிகள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன.

உயிரியல் முறை பயிர்ப் பாதுகாப்பில் பூசணம், பாக்டீரியா என இருவகை உயிர் எதிர்க் கொல்லிகள் பயன்படுகின்றன. இந்த இரண்டில் பாக்டீரிய வகையைச் சார்ந்த சூடோமோனாஸ் அதிகளவில் உயிரி எதிர்க்கொல்லியாகப் பயன்பட்டு வருகிறது. இந்த பாக்டீரியா, நோய்க் காரணிகள் மற்றும் நூற்புழுக்களையும், சில பூச்சிகளையும் சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது. மேலும், நன்மை செய்யும் மற்ற உயிரினங்களுக்குத் தீங்கு செய்யாமல் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கிறது. அத்துடன் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது.

சூடோமோனாஸ்

இன்றைய பயிர் மேலாண்மையில் சூடோமோனாஸ் என்னும் பேரினத்தில் வெவ்வேறு வகைச் சிற்றினங்களான சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், சூ.ஆறுஜினோசா, சூ.புடிடா, சூ.குளோரோராப்பிஸ், சூ.அஜிலோமெரேன்ஸ், சூ.சீப்பாசியா, சூ.ஆரியோபேசியன்ஸ் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தவை.

இவற்றில் பயிர்ப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைத் தூண்டுவதில், சூ.ப்ளோரசன்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஒரு செல்லை உடையதாக, நேராக அல்லது சற்று வளைந்து, கிராம் என்னும் நிறம் ஏற்பியற்றதாக, இரும்பு அயனிகளின் பற்றாக் குறையின் போது, பச்சை, நீலம், ஊதா, மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு போன்ற ப்ளோரசன்ஸ் வகை நிறமிகளை உற்பத்தி செய்யக் கூடியதாக மற்றும் இரும்பு அயனிகளைக் குறைக்கும் சிடரோஃபோரை உற்பத்தி செய்யும் தன்மையைக் கொண்டதாக உள்ளது.

நோய்க் கட்டுப்பாட்டில் சூடோமோனாஸ்

சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மண் மூலம் பரவும் நோய்களான வேரழுகல், வாடல் நோய், நாற்றழுகல் நோய், குண்டாந்தடி வீக்கவேர் நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இலை மூலம் பரவும் பூசண நோய்களான குலை நோய் இலையுறைக் கருகல் நோய், இலைப்புள்ளி நோய், ஆந்த்ராக்னோஸ் பழ அழுகல் நோய் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கிறது.

மேலும், பயிர்களைத் தாக்கும் மற்ற பாக்டீரிய மற்றும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. நோய்களைக் கட்டுப்படுத்தும் இது, நெல்லில் இலைச் சுருட்டுப்புழு, தண்டுத் துளைப்பான் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கிறது. மேலும், வாழையில் வேரைக் குடையும் நூற்புழு, வேர்முடிச்சு நூற்புழு மற்றும் சுருள் நூற்புழு, காய்கறிகளில் வேர்முடிச்சு நூற்புழு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.

இந்த பாக்டீரியம், மற்ற உயிர் எதிர்க் காரணிகளான, பேசில்லஸ் சப்டிலிஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றுடன் நன்கு ஒத்துப் போவதால், இதை மற்ற உயிர் எதிர்க் காரணிகளுடன் கூட்டாகப் பயன்படுத்தும் போது, நோய்களைக் கட்டுப்படுத்தும் திறன் அதிகரிக்கிறது.

சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பயிர் நோய்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்துகிறது. இது, 2,4 – டை அசிட்டைல் ப்ளோராகுளுசினால், பினாசின், பையோலூட்ரின் மற்றும் பைரால் நைட்ரின் போன்ற நோய் எதிர்ப்புப் பொருள்களை உற்பத்தி செய்து, பயிர் நோய்களை நேரடியாகக் கட்டுப்படுத்துகிறது. அத்துடன், இந்த பாக்டீரியம், சிடரோஃபோர் என்னும் இரும்பு அயனியைக் கிரகிக்கும் வல்லமை உடையது.

இதன் மூலம், நோய்களை உண்டாக்கும் மற்ற பூசணங்களுக்குத் தேவையான இரும்புச் சத்தைக் குறைத்து, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது. சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், நேரடியாக நோய்க் காரணிகளைத் தாக்காமல், நோயெதிர்ப்பு நொதிகளான பெராக்ஸிடேஸ், பாலிபீனால் ஆக்ஸிடேஸ், பினைல் அலனின் அம்மோனியா லையேஸ், குளுக்கனேஸ் மற்றும் கைட்டினேஸ் போன்றவற்றை, தாவரத்தில் அதிகளவில் சுரக்கச் செய்து அவற்றின் மூலம் நோய்க் காரணிகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது.

மேலும், ஆக்ஸின், ஜிப்ரலின், இன்டோல் அசிடிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளைச் சுரந்து, பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

பயன்படுத்தும் முறைகள்

விதை நேர்த்தி – நெல்: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அல்லது 10 மில்லி சூடோமோனாஸ் கலவை வீதம் கலந்து, தேவையான நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, நீரை வடிக்க வேண்டும். வடித்த நீரை நாற்றங்காலில் ஊற்றி விட வேண்டும். 

நாற்றுகளை நனைத்தல்: 2.5 கிலோ அல்லது ஒரு லிட்டர் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 25 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள நீரில் கலந்து, பின்னர் ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை, குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து நட வேண்டும். நெடுநேரம் ஊற வைப்பதால் அதன் செயல் திறன் கூடுகிறது.

மண்ணில் இடுதல்: ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் வீதம் எடுத்து, நன்கு மட்கிய 50 கிலோ எரு அல்லது மண்புழு உரத்தில் கலந்து, விதைப்பதற்கு முன் அல்லது விதைத்த பின் நிலத்தில் சற்று ஈரமாக இருக்கும் போது இட வேண்டும்.

தெளிப்பு முறை: ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் அல்லது 5 மில்லி சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை வீதம் எடுத்துக் கலந்து, நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து, பத்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

வாழைக்கன்று நேர்த்தி: வேர்களை நீக்கிய வாழைக் கன்றுகளை, களிமண் கலவையில் நனைக்க வேண்டும். பிறகு, ஒரு கிழங்குக்கு 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் தெளித்து நடவு வேண்டும்.

பொதியுறை முறை – வாழை: ஐம்பது மில்லி கிராம் சூடோமோனாஸ் கலவையை, பொதியுறை, மருந்துறையில் நிரப்ப வேண்டும். பிறகு, மூன்று மாத வாழையின் கிழங்குப் பகுதியில் 45 டிகிரி கோணத்தில் பொதியுறையை இடும் கருவி மூலம் துளையிட வேண்டும். பிறகு, இந்தத் துளைக்குள் சூடோமோனாஸ் பொதியுறையை இட்டு களிமண்ணால் மூடிவிட வேண்டும். இதே போன்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.

வாழைத்தாரில் தெளித்தல்: ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் அல்லது 5 மில்லி சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை வீதம் எடுத்துக் கலந்து, கடைசி வாழைத்தார் வெளிவந்த பிறகு தெளிக்க வேண்டும். இதே போன்று 30 நாட்களுக்கு ஒருமுறை என, அறுவடை செய்யும் வரை தெளிக்க வேண்டும்.

பயன்கள்

இது ஒரு சிக்கனமான முறை. பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கச் செய்கிறது. விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசணத்தைக் கட்டுப்படுத்துகிறது. பயிர்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. மண்ணிலுள்ள கனிம பொருள்களைப் பயன்படுத்திப் பல மடங்காகப் பெருகி, செடிகளுக்கான பாதுகாப்பை நீண்ட காலத்துக்குத் தருகிறது. வயலில் உள்ள நன்மை செய்யும் உயிரினங்களுக்கும். சுற்றுச் சூழலுக்கும் தீமை செய்வதில்லை.

கவனிக்க வேண்டியவை

சூடோமோனாஸ் கலவையை மற்ற பூசணக் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலத்தல் கூடாது. இந்தக் கலவையை, தயாரித்த நான்கு மாதங்களில் பயன்படுத்த வேண்டும். இதை மற்ற உயிர் உரங்களுடன் கலந்து இடலாம். இது சில பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தும்.


சூடோமோனாஸ் Narayanan e1645014878842

ப.நாராயணன், பயிர்ப் பாதுகாப்புத் தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி, திருவண்ணாமலை – 604 410.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading