செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச்.
பழங்காலம் முதலே கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தமிழர்களுக்கும் மாடுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதை, நம் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் அல்லது சல்லிக்கட்டு மற்றும் சங்ககால நூல்கள் மூலம் அறிய முடிகிறது.
நமது முன்னோர் சல்லிக்கட்டு விளையாட்டை ஒரு தகுதித் தேர்வாகக் கொண்டு survival of fitness என்னும் கோட்பாட்டின்படி காளை மாடுகளைத் தேர்வு செய்து, அவற்றை இனப்பெருக்கம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி, தலை சிறந்த மாட்டினங்களை உருவாக்கினர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாட்டினங்கள் இருந்தன. பரவலாகக் காணப்பட்ட அந்த மாட்டினங்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, காங்கேயம், புலிக்குளம், பர்கூர், உம்பளச்சேரி, மலைமாடு, ஆலம்பாடி என, ஆறு இனங்கள் மட்டுமே இப்போது உள்ளன.
காங்கேயம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், ஈரோடு, கரூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் காணப்படும் பிரசித்திப் பெற்ற மாட்டினம் தான் காங்கேயம். கன்றுக் குட்டிகள் ஆறு மாதங்கள் வரையில் சிவப்பாகவும், பிறகு சாம்பல் நிறமாகவும் மாறும். உறுதியான கால்களும், கம்பீரமான தோற்றமும், நாட்டின மாடுகளுக்கு உரிய திமிலும் இவ்வகை மாடுகளின் தனிச் சிறப்பாகும். கொம்புகள் நீண்டும், ஒன்றுக்கொன்று இடைவெளியோடு, சற்றே பின்னோக்கி வளைந்தும் இருக்கும்.
கண்களைச் சுற்றிக் காணப்படும் கருவளையங்கள் இம்மாடுகளுக்கு அழகு சேர்க்கும். ஒரு பசுவானது ஒரு கறவைக் காலத்தில் 600 முதல் 700 கிலோ பாலைத் தரும். காங்கேயம் மாடுகள் நமக்குக் கிடைத்திருப்பது தமிழ்நாட்டின் பெருமை எனப் போற்றப்படுகிறது.
பர்கூர்
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பர்கூர் மலையில் இவ்வகை மாடுகள் உள்ளன. ஆங்காங்கே வெள்ளை நிறக் குறியீடுகளுடன் கூடிய பழுப்பு நிறத்தில் இருக்கும். நடுத்தரமாக, கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்ட உடலமைப்பைக் கொண்டிருக்கும். முகவாய் கருமையாக இருக்கும். கொம்புகள் வெளிர் பழுப்பாக, ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும்.
உம்பளச்சேரி
இவ்வகை மாடுகள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ளன. ஜாதிமாடு, மொட்டைமாடு, மூலமாடு எனப் பல்வேறு பெயர்களில் இந்த மாடுகள் கூறப்படுகின்றன. உம்பளச்சேரி மாடுகள் குட்டையாக இருந்தாலும், இவற்றின் கால்கள் மிகவும் உறுதியாக இருக்கும்.
இந்த மாடுகளின் முகம், வெள்ளை நிறத்தில் குறியீடுகளையும், சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தையும் உடையதாக இருக்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு உடலானது சாம்பல் நிறமாக மாறிவிடும். கொம்புகள் மிகவும் குட்டையாக இருக்கும். சிறு வயதிலேயே கொம்புகளின் வளர்ச்சி நின்று விடுவதால், இவை தஞ்சாவூர் மொட்டை மாடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
புலிக்குளம்
சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புலிக்குளம் மாடுகள் உள்ளன. இந்த மாடுகள் பட்டி மாடுகள், அதாவது கிடை மாடுகள் எனவும் புளியகுளம் மாடுகள் எனவும் கூறப்படுகின்றன. இம்மாடுகளைக் கொண்டு பட்டி போட்டால், மூன்று ஆண்டுகளுக்கு உரம் போடத் தேவையில்லை என்பார்கள்.
கேரளத்தில் இயற்கை வேளாண்மை முறையில் நடைபெறும் திராட்சை சாகுபடிக்குப் புலிக்குளம் மாடுகளே பேருதவி புரிகின்றன. சல்லிக்கட்டில் இந்தக் காளைகள் அதிகமாகப் பயன்படுகின்றன.
மலைமாடு
ஈரோடு மாவட்டத்தில் காணப்படும் குட்டையான மாட்டினம் மலைமாடு. இந்த மாடுகள் செம்மறை என்றும் சொல்லப்படும். இந்த மாடுகளின் குளம்பானது இலாடத்தைப் போலக் கெட்டியாகவும், உறுதியாகவும் இருப்பதால், பாதங்களை வலுப்படுத்த இலாடம் அடிக்க வேண்டியதில்லை.
காடுகளில் அதிகமாக மேயக்கூடியவை. மத்திய அரசு கொண்டு வந்த வன உரிமைச் சட்டத்தைப் பல்வேறு மாநில அரசுகள், இன்றுவரை சட்டமாக ஏற்றுக் கொள்ளாததால், இந்த மாடுகளை வைத்திருக்கும் பழங்குடி மக்கள் அதிகளவில் பாதிக்கப் படுகிறார்கள்.
ஆலம்பாடி
ஒரு காலத்தில் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி இன மாடுகள், இன்றைக்கு முற்றிலும் அழிந்து விட்டன. இவை, சாம்பல், கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் ஹலிக்கர் இன மாடுகளைப் போன்ற உடலைக் கொண்டிருக்கும். பின்னோக்கி வளைந்த கொம்புகளே இந்த மாடுகளின் அடையாளம். இந்த மாடுகள் வேகமாக ஓடா விட்டாலும், நல்ல இழுவைத் திறனையும், வேலை செய்யும் திறனையும் கொண்டவை.
மருத்துவர் இரா.பிரதீப், மருத்துவர் சி.அலிமுதீன், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.