மாடுகள் அல்ல; எங்கள் சாமிகள்!

மாடுகள் 1 657d9b7cf47e76e3348111054263cb48

செய்தி வெளியான இதழ்: 2017 மே.

ந்த உலகுக்கு நாகரிகத்தையும், வாழ்க்கை நெறிகளையும் மட்டும் கற்றுக் கொடுத்தவன் மட்டுமல்ல, மனித நேயத்தையும் பறை சாற்றியவன் தமிழன். மனிதர்களைக் கடந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் உயரிய பண்புக்குச் சொந்தக்காரன். ஆடுகளோடும் மாடுகளோடும் கோழிகளோடும் நாய்களோடும், பூனைகளோடும் என, விலங்குகளுடன் நேயம் பாராட்டி, அவற்றை உறவுகளாகக் கொண்டாடி மகிழ்பவன்.

இப்படிப்பட்ட விலங்குகளுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டவன். பச்சைப் பயிர்கள் வாடுவதைக் கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் வருந்தியவன். ஏனெனில் உழவுத் தொழிலுக்கு முன்னோடியான தமிழன், தான் வளர்க்கும் பயிர்களையும் நேயத்துடன் பார்ப்பவன். அதன் வெளிப்பாடு தான், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சுவாமிகள் பாடிய பாடல் வரிகள். இதையும் கடந்து உயிரையே விட்ட இனம் தமிழினம்.

உயிர்களிடத்தில் அன்பு வேணும் என்னும் பாரதி, கோழியைக் கூட்டி விளையாடவும், காக்கைக்கு இரக்கப்படவும் வலியுறுத்துவான். வாலைக் குழைத்து வரும் நாயைத் தோழனென்பான். வண்டியிழுக்கும் குதிரையையும், வயலில் உழும் மாட்டையும், அண்டிப் பிழைக்கும் ஆட்டையும் ஆதரிக்கச் சொல்லுவான். பாலைப் பொழிந்து தரும் பசுவை, மிக நல்லதென்பான். விலங்குகளுடன் இணைந்த தமிழர்களின் வாழ்க்கையை இப்படிக் காட்சிப்படுத்துவான் பாரதி.

வாழ்க்கைத் தொழிலான உழவுத் தொழில் சிறக்க, தமிழர்களின் வீடுகள் தோறும் ஆடு மாடு கோழிகள் நிறைந்திருந்தன. உழவுக்கும், உணவும் உரமும் தருவதற்கும் இவை பயன்பட்டன. ஊர்களில் இருந்த பெரிய வீடுகளில் நிறைய மாடுகள் இருந்தன. இவை தொழுமாடுகள் என அழைக்கப்பட்டன.

பாலுக்காகவும், நிலத்துக்குத் தேவையான சாணத்துக்காகவும் இவை பயன்பட்டன. சொந்த ஊரில் தேவையான தீவனம் கிடைக்காத காலங்களில், இரை கிடைக்கும் பகுதிகளுக்கு இந்த மாடுகள் ஓட்டிச் செல்லப்பட்டன. அப்போது ஆங்காங்கே உள்ள நிலத்தில் இந்த மாடுகள் உரத்துக்காக இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டன. அதனால், இந்த மாடுகள் பட்டி மாடுகள் என்றும், கிடை மாடுகள் என்றும் அழைக்கப்பட்டன.

பயிர்கள் இல்லாத காலத்தில் விவசாயிகள் இந்த மாடுகளைக் கொண்டு கிடையமர்த்தி, மண்ணை வளப்படுத்தி, அடுத்த பயிருக்கு நிலத்தைத் தயார் செய்வார்கள். தை, மாசியில் அறுவடை முடிந்ததும் தொடங்கும் இந்தக் கிடையமர்த்தும் வேலை, ஆடி மாதம் வரையில் நடக்கும்.

அப்போது பெய்யும் மழையில் இருந்து, அடுத்த சாகுபடிக் காலம் தொடங்கி விடும். நிலத்தில் மாடுகள் போடும் சாணமும் சிறுநீரும் பயிர்களை வளர்க்கும் சத்துமிகு உணவாகும். ஆட்டுக்கிடை அப்போதே பயிருக்குச் சத்தைத் தரும். மாட்டுக்கிடை மறுவருசம் தான் பயன்படும் என்பது, நம் விவசாயப் பெருமக்களின் அனுபவ உண்மை. இப்படி, ஆண்டுதோறும் ஆடுகளைக் கொண்டோ, மாடுகளைக் கொண்டோ கிடையை அமர்த்துவதால், நிலம் எப்போதும் வளமாகவே இருக்கும்.

ஆனால், கால ஓட்டத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி, விவசாயத்தில் இருந்து கால்நடைகளையும், இயற்கை உரத்தையும் புறந்தள்ளி விட்டது. நாள் கணக்கில் உழுத உழவை, ஒருசில மணிகளில் இயந்திரம் செய்து விடுகிறது. வண்டிக் கணக்கில் போடப்பட்ட உரத்தை, கிலோ கணக்கில் போட்டால் போதும் என்கிறது.

இதனால், இலட்சக் கணக்கில் இருந்த கிடை மாடுகளும், உழவு மாடுகளும் விவசாயிகளுக்குத் தேவையற்றும், அவர்களின் தொடர்பிலிருந்தும் வெகு தொலைவுக்குச் சென்று விட்டன. மேலும், மழையில்லாமல் விவசாயம் நாளுக்கு நாள் பொய்த்து வரும் நிலையில், இந்த மாடுகளைக் கொண்டு கிடையமர்த்தும் விவசாயிகளும் குறைந்து விட்டனர்.

மலை, மலையடிவாரங்கள், பெரிய கண்மாய்கள், தரிசு நிலங்கள் ஆகியன இவற்றுக்கான மேய்ச்சல் களங்களாக இருந்தன. ஆனால், இப்போது அங்கெல்லாம் இந்த மாடுகளை மேய்ச்சலுக்கு விட முடியாத அளவில் அரசாங்கம் தடை விதித்து விட்டது. எனவே, தேவையான தீவனம் கிடைப்பது அரிதாகி வருவதால், இந்த மாடுகளைப் பராமரிப்பதில் மிகக் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால், மாடுகளுக்குச் சொந்தக்காரர்கள், இந்த மாடுகளை வளர்க்க முடியாத நிலையில் அடிமாடுகளுக்கு விற்கும் அவலம் தொடர்கிறது. பெரும்பாலான மாடுகள் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், தொழு மாடுகள் வளர்ப்பு, மிகவும் இக்கட்டான நிலையில் இருந்து வருகிறது.

அவ்வகையில், திண்டுக்கல் மாவட்டம், விருவீடு பகுதியில் தொழு மாடுகள் இன்னும் பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன என்னும் சேதியறிந்து அங்கே சென்றோம். அங்கே, இந்த மாடுகளுடனேயே உண்டு உறங்கி, தன் வாழ்நாளைக் கழித்து வரும் பிச்சையிடம் பேசினோம்.

ஒன்னு ரெண்டு மாடுகள வளர்க்குறதே பெரிய பாடா இருக்குற நிலையில, நீங்க இத்தனை மாடுகள எப்பிடிக் காப்பாத்துறீங்க?

“பின்ன சாதாரண காரியமா? இத்தனை மாடுகளயும் ஓட்டிட்டுப் போயி மேய்ச்சுட்டு வர்றதுக்குள்ள உசுரு போயி உசுரு வரும். விவசாயமே இல்லாத நிலையில இதுக வயித்தை நெரப்புறதுக்கு, காடு மேடுன்னு ஓட்டிக்கிட்டு அலையிறோம். மேய்ச்சல் முடிஞ்சதும் சாயங்காலம் இதுகள எங்கே அடைக்கிறதுன்னு பிரச்னை வரும்.

முன்ன மாதிரி விவசாயம் நடந்தா, எனக்கு உனக்குன்னு போட்டி போட்டுக்கிட்டுக் கிடை போடச் சொல்லிக் கூப்பிடுவாங்க. அதை வச்சு எங்க அஞ்சாறு குடும்பப் பொழப்பு நடக்கும். ஆனா மழையில்லாம வறட்சியாகிப் போனதுனால கிடை போடுறதுக்கு யாருமே கூப்புடுறதில்ல. அதனால மாடுகளுக்கான இரைக்கும், எங்க குடும்பச் செலவுக்கும் ரொம்பக் கஷ்டமா இருக்கு.’’

அப்பிடின்னா உங்களுக்கு வருமானம்?

“வருமானமா? விவசாயமே இல்லாம போச்சு. அப்புறம் எப்பிடிய்யா எங்களுக்கு வருமானம் கிடைக்கும்? விவசாயம் நடந்தப்போ நிலத்துக்கு உரம் போடக் கிடை தேவைப்பட்டுச்சு. அதுக்கு நாங்க தேவைப்பட்டோம். ஆனா இப்போ அதுக்கு வழியில்லாம போச்சு. ரொம்பவும் அரிதா ஒன்னு ரெண்டு விவசாயிக கிடை போடுறதுக்குக் கூப்புடுவாங்க. இல்லேன்னா இப்ப நிறுத்தியிருக்குற மாதிரி, தெரிஞ்சவங்க நிலத்துல சும்மா நிறுத்திட்டு, மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போயிருவோம்.

இப்பிடி வருமானம் இல்லேன்னாலும் இந்த மாடுகள எங்களால விட முடியல. ஏன்னா, இது எங்க சிய்யான், பாட்டன் காலத்துச் சொத்து. தொடர்ந்து நாலஞ்சு பட்டமா, தலைமுறையா இந்த மாடுகள கட்டிக் காப்பாத்திட்டு வர்றோம். காளைக்கன்னு பொறந்தா வித்துருவோம்.

சினைக்குன்னு ஏழு காளைக இருக்கு. மாடுகள கிடை நிறுத்துனா ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் ரூவா வரைக்கும் கிடைக்கும். கொஞ்சம் குறச்சுக் குடுத்தாலும் வாங்கிக்கிருவோம். எங்க அஞ்சாறு குடும்பங்களுக்கும் இதுதான் வருமானம். மலையில மேய்ச்சலுக்கு அனுமதி இல்லாததுனால ரொம்பச் சிரமப்படுறோம்.’’

இத்தனை மாடுகள்ல பசுமாடுக தான் நெறையா இருக்கு. இதுகளோட பால் மூலமா வருமானம் வரும்ல?

“அது தப்புய்யா. நாங்க பாலை விக்கக்கூடாது. குழந்தைக்கு பால் வேணும்ன்னு கேட்டா சும்மா குடுப்போம். காசு வாங்க மாட்டோம். இல்லேன்னா கன்னுகளே குடிச்சுக்கும்.’’

இந்த எல்லா மாடுகளும் உங்களுக்கு மட்டும் சொந்தமா?

“இல்லய்யா. இந்த மாடுகளுக்குச் சொந்தக்காரங்க நாலஞ்சு பேருக இருக்காக. அந்தா மாடுகள மடக்கிப் போட்டுக்கிட்டு இருக்காரே அவரு அன்னக்கொடி. கன்னு போடுறத பாத்துக்கிட்டு இருக்கவரு சுப்பையா. இளங்கன்னுகள கொடாப்புல மூடிக்கிட்டு இருக்குற தம்பிக தேவராசு, வெண்டி. இவங்க எல்லாரும் சேர்ந்து தான் இந்த மாடுகள வளர்க்குறோம். மொத்தம் ஏழுநூறு மாடுக இருக்கு. இதுல சாமி மாடுகளும் இருக்கு. ஊருக்குள்ள சாமிக்குன்னு நேர்ந்து விட்ட மாடுகளையும் நாங்க தான் வளர்க்குறோம்.’’

நீங்க.. மாடுக மேச்சலுக்கும், கிடை போடுறதுக்கும் ஊரூரா போக வேண்டியிருக்கும். அப்போ எப்பிடிக் குடும்பத்தைப் பார்க்கப் போவீங்க? உங்க சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க?

“நாங்க அங்கங்க சோறாக்கிச் சாப்பிட்டுக்குவோம். அப்பப்போ ஒவ்வொரு ஆளா மாத்தி மாத்தி வீட்டுக்குப் போயிட்டு வருவோம்.”

இவ்வளவு சிரமப்படுறீங்க. ஏற்கெனவே வெளிநாட்டு மாடுக உள்ள வந்ததுனால நம்ம நாட்டுப் பசுமாடுக அடிமாடுகளா போயிக்கிட்டே இருக்கு. நம்ம இனமே அழிஞ்சுக்கிட்டு இருக்கு. நாம ஏன் கஷ்டப்படணும், நாமளும் இந்த மாடுகள அடிமாட்டுக்கு வித்துட்டு வேற வேலையைப் பார்ப்போம்ன்னு உங்களுக்குத் தோணுச்சா?

“என்னய்யா இப்பிடியொரு கேள்வியைக் கேட்டுட்டீங்க. இதுக எல்லாம் எங்க சாமிகய்யா. சாமிகள சாகடிச்சுட்டு எப்பிடிய்யா உயிர் வாழ்றது? வாழ்வோ சாவோ இதுகளோட தான் எங்க வாழ்க்கை. இந்தத் தெய்வங்களோட இருந்து எங்க வாழ்க்கையை ஓட்டுவோமே தவிர, அந்தத் தப்பைச் செய்யவே மாட்டோம்.

சல்லிக்கட்டை நிறுத்தி நம்ம குலதெய்வங்கள அழிக்க நெனச்சாங்க. ஆனா செயிச்சுட்டோம். இந்தச் சாமிகள வளர்க்குற புண்ணியம் எங்க வீட்டைக் காக்குறதுக்கு இல்லய்யா. இது நம்ம நாட்டையே காப்பாத்துறக்கு.

சரிய்யா.. வெய்யிலுக்கு முன்ன இதுகள மேய்ச்சலுக்கு விட்டாத் தான் நல்லது. கன்னுக கத்த ஆரம்பிச்சுருச்சு. வரட்டுமாய்யா?’’ என்றபடி. தோளில் கிடந்தை துண்டை எடுத்துத் தலையில் உருமாலாகக் கட்டியபடியும், கையில் மூங்கில் கம்பு ஒன்றை எடுத்தபடியும், தன் சாமிகளாம் மாடுகளை நோக்கி நடக்கத் தொடங்கினார் பிச்சை.

கிடை மாடுகள், பட்டி மாடுகள், தொழு மாடுகள் என அழைக்கப்படும் நம் நாட்டு மாடுகள், நம் வாழ்க்கையின் அடையாளம். இங்கு மட்டுமே மரபில் கலப்பில்லாத நம் மாடுகளைக் காண முடியும். எனவே, இந்த மாடுகள் அழிந்து விடாமல் காக்கப்பட வேண்டும்.

எத்தனையோ இன்னல்களுக்கு இடையிலும் சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டு இவற்றைக் காத்து வருபவர்கள், மாடுகளைக் காப்பவர்கள் அல்ல, நம் வாழ்க்கையின் தொன்மையான அடையாளத்தைக் காப்பவர்கள். எனவே, அவர்களைக் காக்க வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை; தமிழக அரசின் கடமை.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading