பன்றிக் காய்ச்சலும் தடுப்பு முறைகளும்!

பன்றி

செய்தி வெளியான இதழ்: 2017 மே.

ன்றி வளர்ப்புத் தொழில் மிகக் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது, நவீன உத்திகளையும் மேல்நாட்டு இனங்களையும் அறிமுகப்படுத்தியதால், பன்றி இறைச்சியை உண்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.

இலாபகரமான முறையில் பன்றிகளை வளர்க்க வேண்டுமானால், அவற்றை நோய்களிலிருந்து பாதுகாப்பது அவசியம். குறிப்பாகப் பன்றிக் காய்ச்சலால் அதிகளவில் பன்றிகள் இறப்பதால் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. ஆகவே, இந்நோயைப் பற்றி அறிந்து கொள்வதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மிகவும் முக்கியம்.

நோய்க் காரணிகள்

பன்றிக் காய்ச்சல் நோய் வைரஸ் என்னும் நச்சுயிரியால் ஏற்படுகிறது. இது, மிக எளிதாகப் பரவக்கூடிய ஒரு தொற்றுநோய். பாதிப்புத்தன்மை என்பது நோயால் பாதிக்கப்பட்ட பன்றியின் வயது, நோய் எதிர்ப்புத் திறனைப் பொறுத்தது. வளர்ந்த பன்றிகளை விட இளம் குட்டிகளே இந்நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.

நோய் பரவும் முறை

ஒரு பன்றியிலிருந்து மற்றொரு பன்றிக்கு, வாய் அல்லது மூக்குத் துளையின் வாயிலாக நேரடியாக அல்லது மறைமுகமாக இந்த நச்சுயிரி பரவுகிறது. நோயுற்ற பன்றிகளில் இருந்து வெளிப்படும் உமிழ்நீர், சிறுநீர், இரத்தம் மற்றும் சளியின் மூலமும் பரவுகிறது. பண்ணையைப் பார்வையிட வரும் மனிதர்கள் மற்றும் பன்றிகளை வாங்கவும் விற்கவும் வருவோர் மூலமும் பரவுகிறது. பண்ணையில் பயன்படுத்தப்படும் கருவிகள், வாகனங்கள், துணிகள் மற்றும் மருந்து, ஊசிகள் மூலமும் பரவுகிறது.

காற்றின் மூலமும் இந்த நச்சுயிரி பரவலாம். பெரும்பாலும் நன்றாக நுண்ம நீக்கம் செய்யப்படாத உணவுக்கூடக் கழிவுகளின் மூலம் இந்த நச்சுயிரி பரவுகிறது. சினைப்பன்றியில் இருந்து குட்டிகளுக்கும் பரவுகிறது. காட்டுப்பன்றிகள் தான் இந்த நச்சுயிரியின் அடைக்கலமாக விளங்குகின்றன,

நோய் அறிகுறிகள்

மிக அதிகளவு காய்ச்சல், அதாவது 41 டிகிரி செல்சியஸ் இருத்தல். தீவனம் உண்ணாமை. சுறுசுறுப்பின்மை. நீண்ட மலச்சிக்கலைத் தொடர்ந்து கழிச்சல் ஏற்படுதல். சில சமயங்களில் வாந்தி காணப்படுதல். மூச்சு விடுவதில் சிரமம், நடப்பதில் சிரமம் மற்றும் தசை வலிப்பு உண்டாதல். பண்ணையில் பன்றிகள் ஒன்றாகக் கூடிக் காணப்படுதல் (huddling). நோய் வந்த 5 முதல் 25 நாட்களில் பன்றி இறக்க நேரிடும். பண்ணையிலுள்ள இளம் குட்டிகள் 100 சதவீதம் வரை இறக்க வாய்ப்புள்ளது.

நோய்ப் பாதிப்பால் திசு அடையும் மாற்றங்கள்

இரத்தத்தில் வெள்ளை மற்றும் நோயெதிர்ப்பு அணுக்கள் மிகவும் குறைந்து காணப்படுதல். நிணநீர்க் கழலைகள் வீங்குதல். நுரையீரல் வீங்கியும் இரத்தக் கசிவுடனும் காணப்படுதல். மூளை, தண்டுவடத்தில் அழற்சி ஏற்படுதல். வட்ட வடிவப் புண்கள், முன்பெருங்குடல் பின்பெருங்குடலில் காணப்படுதல். வளரும் பன்றிகளில் விலா குருத்தெலும்பு மூட்டுப் பகுதியில் குறுக்குவாட்டில் வரிப்பள்ள அமைப்புகள் காணப்படுதல்.

ஆய்வுக் கூடத்தில் நோயைக் கண்டறிதல்

நோயால் பாதிக்கப்பட்ட பன்றி அல்லது புதிதாக இறந்த பன்றியின் உறையாத இரத்தம் அல்லது நிணநீர்க் கழலைகள், மண்ணீரல், சிறுநீரகம், சிறுகுடலின் பின்பகுதித் திசுக்களை ஆய்வு செய்து நோயைக் கண்டறியலாம்.

நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல்

பன்றிகளுக்குப் பன்றிக் காய்ச்சல் நோய் வந்த பின்பு மருத்துவம் மூலம் குணப்படுத்த இயலாது. ஆகவே, நோய் வருவதற்கு முன்பே தடுப்பு முறைகளை மேற்கொள்வது அவசியம்.

பண்ணைச் சுகாதாரம்

பண்ணையில் வளர்ப்பதற்கான பன்றிகளை, நோயில்லாத பன்றிப் பண்ணையிலிருந்து வாங்க வேண்டும். புதிதாக வாங்கப்பட்ட பன்றிகளைப் பண்ணையிலுள்ள மற்ற பன்றிகளுடன் சேர்க்காமல் நான்கு வாரங்களுக்குத் தனியாகப் பராமரிக்க வேண்டும். பண்ணைக்குள் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது. நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகளைக் கொட்டகையில் இருந்து அகற்றிய பின்பு அந்தக் கொட்டகையில் பன்றிகளை 3 முதல் 4 வாரங்களுக்கு அடைக்கக் கூடாது.

உணவுக்கூடக் கழிவுகளை மிகச் சிறந்த முறையில் நுண்ம நீக்கம் செய்தபின் பன்றிகளுக்கு வழங்க வேண்டும். பண்ணைப் பன்றிகளுக்கும் காட்டுப் பன்றிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கக் கூடாது. பண்ணையில் இனவிருத்திக்காக வளர்க்கப்படும் பன்றிகளை முறையான நோய் ஆய்வு மூலம் கண்காணிக்க வேண்டும்.

தடுப்பூசி மூலம் நோய்த்தடுப்பு

பண்ணையிலுள்ள அனைத்துப் பன்றிக் குட்டிகளையும் தாயிடமிருந்து பிரிக்கும் போது, பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியைப் போட வேண்டும். பிறகு, ஆண்டுதோறும் தவறாமல் தடுப்பூசியைப் போட வேண்டும்.

நோய் வந்தபின் செய்ய வேண்டியவை

இறந்த பன்றி மற்றும் அதன் படுக்கைப் பொருள்களைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். அல்லது எரித்து விட வேண்டும். பண்ணையைச் சிறந்த முறையில் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு பண்ணையில் இருந்து மற்றொரு பண்ணைக்குப் பன்றி மற்றும் பண்ணைப் பொருள்களை இடமாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நோய்த்தாக்கம் உண்டான பண்ணைப் பகுதிகளில் நோய் அழிவு ஆய்வைச் செய்ய வேண்டும்.


மரு.வ.குமரவேல், முனைவர் சு.செந்தூர்குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி -630 206.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading