செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன்.
தும்பைச் செடியை (Leucas aspera- Labiatae) அறியாத கிராம மக்கள் இருக்க முடியாது. சிறு செடியினத்தைச் சேர்ந்த தும்பையை அதன் வெள்ளைப் பூவே அடையாளப்படுத்தும். ஆபத்துக் காலத்தில் எளிதில் உதவும் மூலிகைகளில் தும்பையும் ஒன்று. இது, மழைக் காலத்தில் செழித்து வளரும் பருவத் தாவரமாகும். ஆயினும் ஈரமுள்ள இடங்களில் ஆண்டு முழுவதும் 10 முதல் 50 செ.மீ. வரையில் செழித்து வளரும்.
இந்தச் செடியின் தண்டுகள், கணுக்களுடன் மெல்லிய பட்டைக் கம்பியைப் போல நீண்டு, எதிரடுக்கில் அமைந்த இலைகள் கூரான கரும்பச்சையுடன் காணப்படும். இலைகளுக்கு மத்தியில் பூக்கதிர்களும், தேன் நிறைந்த வெள்ளை மலர்களும் காணப்படும். இம்மலர்கள், கால்களின் பாதங்கள் கீழ்நோக்கி இருப்பதைப் போலத் தெரிவதால், பாதமலர் என்றும் கூறப்படும்.
பேச்சு மூச்சில்லாமல் மரணப் படுக்கையில் உள்ளவர்களின் மூக்கில் தும்பையிலைச் சாற்றை நசியமாகப் பிழிந்து விட்டால் அவர்கள் உயிர் பெற்று எழுவர். இப்படித் துன்பத்தை நீக்குவதால் இதற்குத் தும்பை எனப் பெயர் வந்ததாகக் கூறுவோரும் உண்டு. இதில், சிறுதும்பை, பெருந்தும்பை அல்லது ஆனைத்தும்பை என இருவகைகள் உண்டு. காசித்தும்பை, கவிழ்தும்பை எனவும் உண்டு. இந்தியாவில் மட்டுமில்லாமல், பிலிப்பைன்ஸ், மொரீசியஸ், ஜாவா போன்ற நாடுகளிலும் தும்பை வளர்கிறது.
தும்பையின் பூ, இலை உள்பட அனைத்துப் பாகங்களும் மருந்தாகப் பயன்படுகின்றன. இது இனிப்பு கார்ப்புச் சுவையுடன் வெப்பத் தன்மையையும், சீரண நிலையில் கார்ப்புச் சுவையையும் கொண்டிருக்கும். எனவே, உடலுக்கு வெப்பத்தைக் கொடுத்து, கோழை, மலத்தை அகற்றுவதுடன், பெண்களுக்கு இயல்பான ருதுவை உண்டாக்கும்.
பொதுப் பண்புகள்
தும்பை இலையை முறைப்படி பயன்படுத்தி, கருந்த காணாக்கடி (urticaria), ஒவ்வாமையால் (allergy) தோலில் ஏற்படும் கரும்படை, அரிப்பு, தடிப்பு, தலைவலி, மூக்கில் நீர்வடிதல், முக்குற்றப்பிணி, இருமல், தாகமெடுத்தல், கைகால் அசதி, கண் புகைச்சல் ஆகியற்றைக் குணப்படுத்தலாம். மேலும், தும்பை இலையும் பூவும், பாம்புக்கடி விடத்தை அகற்றும் அருமையான மருந்தாகும்.
பாம்புக்கடிக்கு அனுபவ மருத்துவம்
நச்சுப்பாம்பு கடித்து விட்டால், தும்பையிலைச் சாற்றைக் கடிவாயில் விட்டு அழுத்தமாகத் தேய்த்து விட வேண்டும். மேலும், கடிபட்டவரின் மூக்கில் சில துளிகளை விட்டு, முடிந்த மட்டும் உறிஞ்சச் செய்ய வேண்டும். நூறு மில்லி இலைச்சாற்றை அரை மணிக்கு ஒருமுறை தொடர்ந்து குடிக்கச் செய்ய வேண்டும். இதனால், பாம்புக் கடியால் உண்டாகும் மயக்கமும் அதிர்ச்சியும் நீங்கும். வயிற்றைக் கலக்கச் செய்து கபத்துடன் வாந்தியாகும். இரண்டு மூன்று தடவை பேதியாகி, விடம் இறங்க, குளிர்ந்த உடல் சூடாகும்.
புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு ஆகியவற்றைக் கலந்து செய்த பொங்கலை உப்பில்லாமல் உண்ணத்தர வேண்டும். பகலானாலும் இரவானாலும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர் தூங்கக் கூடாது. விடம் முற்றிலும் நீங்கி இயல்பு நிலைக்கு வந்த பிறகே, உப்பு, புளி, கடுகு, நல்லெண்ணெய்யைச் சேர்க்க வேண்டும்.
தேள்கடிக்கு அனுபவ மருத்துவம்
தும்பையிலை, துளசியிலை, கோவையிலை ஆகியவற்றை வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து மென்று உண்ண வேண்டும். இலைகளை அரைத்துக் கடிவாயில் பற்றுப் போட்டால், விடம் இறங்கிக் கடுகடுப்பு நீங்கும்.
சரும நோய்க்கு
தும்பை இலைகளை விழுதாக அரைத்துத் தடவி ஊறவிட்டு, இளஞ்சூடான வெந்நீரில் பயத்தமாவைக் கொண்டு குளித்து வந்தால், நாள்பட்ட சொறி, சிரங்கு, கொப்புளங்கள், நமைச்சல் ஆகியன நீங்கும்.
சுரம் நீங்க
தும்பையிலை, மிளகிலை, நொச்சிக் கொழுந்து, முதிர்ந்த மிளகாயிலை, இலவங்கம், வெற்றிலை, துளசியிலை ஆகியவற்றைச் சமமாக எடுத்துச் சுத்தம் செய்து நீர்விட்டு அரைத்துக் கழற்சியளவில் காலை, மாலையில் உண்டு வந்தால், முறை சுரம், காரணமில்லாச் சுரம் ஆகியன குணமாகும்.
தலை நோய்க்கு
தும்பைப் பூக்கள் 50 கிராம் எடுத்து அரை லிட்டர் நல்லெண்ணெய்யில் பொங்கக் காய்ச்சி ஆறவிட்டு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதை, வாரம் இருமுறை உச்சியில் தேய்த்து வெந்நீர், சீயக்காய் கொண்டு குளித்து வந்தால், தலைப்பாரம், தலையில் நீரேற்றம், ஒற்றைத் தலைவலி ஆகியன குணமாகும். கண்களுக்கு நல்ல பார்வை கிடைக்கும். மூக்கடைப்பு நீங்கிச் சுவாசம் சீராகும். தும்மல், இருமல், சளி அகலும்.
சிறிதளவு தும்பைப் பூக்களை எடுத்து ஒரு டம்ளர் நீரிலிட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி, அதில் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனை விட்டு, தினமும் மூன்று வேளை அருந்தி வந்தால், கண் நோய், தாகம், சீதளச்சுரம் ஆகியன குணமாகும்.
மழலைகளுக்குத் தும்பைப்பூ
தும்பைப்பூச் சாறு 4 துளி, உயர்ந்த பேரீச்சையை ஊற வைத்த நீர் 4 துளி, உத்தாமணிச் சாறு இரண்டு துளி, மிளகுத்தூள் 2 சிட்டிகை கலந்து, சிறிது தேனையும் சேர்த்து நாவில் தடவி வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுக் கோளாறுகள், மாந்தம், பேதி ஆகியன குணமாகும்.
பத்துத் தும்பைப் பூக்களை எடுத்து, தாய்ப்பாலில் உரைத்து மெல்லிய துணியில் நனைத்து, நெற்றி, கன்னப்பொட்டு ஆகியவற்றில் பற்றுப் போட்டும், இரண்டு கண்களிலும் இரண்டிரண்டு துளிகள் விட்டும் வந்தால், டைபாய்டு என்னும் சன்னிக் காய்ச்சலால் ஏற்படும், கண்விழி வலி, தலைவலி ஆகியன குணமாகும்.
பெண்களுக்கு
தும்பைப்பூ, தும்பையிலை, உத்தாமணி இலை ஆகியவற்றை நீர்விட்டு அலசிச் சுத்தமாக்கி அம்மியிலிட்டு மைபோல் அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். இதைச் சிறு உருண்டையளவில் எடுத்துப் பசும்பாலில் காலையில் மட்டுமென மூன்று நாட்களுக்குப் பருகி வந்தால், பெண்களின் மாதவிடாய்ச் சிக்கல்கள் சரியாகும்.
குறிப்பு: தும்பை வளரும் நிலத்தில் பார்த்தீனியம் என்னும் நச்சுச்செடி வளராது, வளர விடாது. பார்த்தீனியச் செடியால் ஏற்படும் கரும்படை ஒவ்வாமை, தும்பையிலைகளைச் சிறிது நீர் விட்டு அரைத்துக் காலையிலும் இரவிலும் உடலில் பூசி ஊற வைத்து, பயத்தமாவு, வெந்நீர் கொண்டு குளித்து வந்தால் குணமாகும். வெள்ளைப் பூக்களைப் பூக்கும் தாவரம், உடலுக்குத் தூய்மை, வாட்டம் தரும் இரசம் மிகுந்தது என்பது சித்தர்கள் கருத்து.
தும்பைப் பூக்களில் உற்பத்தியாகும் தேனைக் குடிக்க, எறும்புகள், வண்ணத்துப் பூச்சிகள், பிறவகைப் பூச்சிகள் மொய்க்கும். இவற்றைப் போலத் தும்பைப்பூத் தேனை அருந்தி மகிழாத கிராமச் சிறுவர்களைக் காண்பது அரிது. நந்தீசர் சர்வக்கலை ஞானம் 1000 என்னும் நூலில், தும்பைப்பூ, அஷ்டகர்ம மூலிகைகளில் உச்சாடன வயநமசி என்று குறிப்பிடுகிறார். உச்சாடனம் என்பது, தீமை செய்யும் காரணிகளை விலக்குவது, உள்ளப்பிணி, உடல்பிணி உட்பட.
வாயுத்தலமான திருக்காளத்தி ஈசனுக்கு உகந்தது தும்பை மலர்களால் தொடுத்த சிறு சரமே. காலையில் புதுப் பூக்களைச் சேகரித்து முருகப் பெருமானுக்குத் தும்பைப்பூ வழிபாடு செய்வது, தமிழ் மரபில் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
ஆபத்துக்கு உதவும் அபூர்வ மூலியே
அஞ்சும் கண்ணுக்கு ஒளிதரும் மூலியே
சருமப் பிணிக்குச் சஞ்சீவி மூலியே
செய்ய மேனியீர்க் குகந்தவா போற்றி போற்றி!
செய்ய மேனியீர் என்பது செம்மையான உருவம் கொண்ட ஈசனைக் குறிக்கும்.
மரு.ப.குமாரசுவாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு.