நாய்க் குட்டிக்கு நம்முடன் பழகும் முறைகளைச் சொல்லித் தருகிறோமோ இல்லையோ, நம்மைச் சார்ந்தோர் நம் வீட்டுக்கு வரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சொல் பேச்சைக் கேட்கும் கிளிப்பிள்ளை என்பதைப் போல, நம் சொல் பேச்சைக் கேட்கும் வகையில், நம் செல்லப் பிள்ளையாம் நாய்க் குட்டிக்குப் பயிற்சி அளிப்பது மற்றும் நல்ல குணங்களைக் கற்றுத் தரும் முறைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
இயற்கையாகவே நாய்க் குட்டிகளுக்குக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம். எடுத்த எடுப்பில் வீட்டிலுள்ள நடைமுறைகளை அவை ஏற்றுக் கொண்டு பழகுவது இல்லை. எனவே, வீட்டுக்கு வந்த செல்லப் பிராணியை, அடிக்கடி வெளியில் கூட்டிச் செல்ல வேண்டும்.
அதாவது, அது சாபிட்ட பின்பு அல்லது குட்டித் தூக்கம் முடித்த பின்பு, படுக்கைக்குச் செல்லும் முன்பு அல்லது நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்ததும் அழைத்துச் செல்ல வேண்டும்.
வீட்டுக்கு வந்த சில நாட்களில், அழைத்துச் சென்ற அதே இடங்களுக்கு அழைத்துச் சென்றால், நாய்க்குட்டி, பல்வேறு இடங்கள் மற்றும் பகுதிகளை நுகர்ந்து உணர ஏதுவாக இருக்கும்.
நாய்க் குட்டியை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வெளியில் செல்லும் போது, அது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் வாழ்த்துச் சொல்லி, தட்டிக் கொடுத்துப் பாராட்ட வேண்டும்.
நாய்க்குட்டி, வீட்டில் தரையை அல்லது தரை விரிப்பைச் சுற்றிச் சுற்றி வந்து நுகர்ந்து பார்த்தால், அது, வீட்டுக்கு வெளியே செல்ல விரும்புகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், எல்லா நாய்க் குட்டிகளும், எல்லா நேரமும் இப்படி சமிக்ஞை செய்யும் என்று சொல்ல முடியாது. எனவே, நாம் அவற்றின் தேவையறிந்து சேவை செய்தல் வேண்டும்.
நாய்கள் தவறேதும் செய்தால் அல்லது வீட்டுக்குள் மலம் அல்லது சிறுநீரைக் கழித்தால், உடனே கண்டிக்கக் கூடாது. சொல்லிக் கொடுக்க வேண்டும். இளம் வயதில் அதிகச் சுதந்திரம் கொடுத்தால், நாய்கள் அடிக்கடி வெளியில் சென்று விபத்துகளைச் சந்திக்க நேரிடும்.
வீட்டில் அனைவரும் அமர்ந்து பொழுது போக்கும் இடம் அல்லது அனைவரும் ஒன்று கூடும் இடத்தில் நாய்க் குட்டியைப் பழகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் அதைக் கட்டுப்படுத்த முடியும்.
நாய்கள் நன்கு பழகப் பத்து மந்திரங்கள்
நாய்க் குட்டிக்குச் செல்லப் பெயர் வைத்து அழைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெயரை அது உணரும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டும். சிறுசிறு தின்பண்டங்களைக் கொடுத்து, செல்லப் பெயரைச் சொல்லி அழைத்தால், அது நம்முடன் எளிதில் பழகி வடும்.
அழைத்தால் வருவேன் என்னும் அளவில் அதனுடன் பழக வேண்டும். நாய்க் குட்டிக்கான மற்ற பயிற்சியைத் தொடங்கு முன், வா என்னும் சொல்லைச் சொல்லிப் பழக்கி விட்டால் சிறப்பாக இருக்கும்.
பொதுவாக, வீட்டுக்குப் புது விருந்தினர் வந்தால், நாய்க்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். இதைப் போக்க, நாயின் தலை, கழுத்து மற்றும் கழுத்துப் பட்டையை நாம் தொட்டதும், அது அமைதியாகி, நம் பேச்சைக் கேட்கும் வகையில் வளர்க்க வேண்டும்.
புதிய வீட்டுக்கு வந்து ஆறு மாதம் வரை, நாய்க் குட்டிக்கு ஒருவித அச்சம் இருக்கும். அதைப் போக்க, அதற்குக் கொஞ்சம் நொறுக்குத் தீனியைக் கொடுத்துக் கொண்டே பழகினோம் என்றால், நம்மைப் புரிந்து கொண்டு, அந்த பயத்தில் இருந்து விடுபடும்.
எதுவும் இலவசமில்லை என்பதை அதற்குப் புரிய வைக்க வேண்டும். சாப்பாடு, நொறுக்குத் தீனி, விளையாட்டுப் பொருள்கள் மற்றும் விளையாட்டு நேரம் ஆகியன, கேட்டதும் கிடைக்கும் என்பதைத் தவிர்க்க வேண்டும். வேலை செய்தால் பரிசு கிடைக்கும் என்பதை, நாய்க்குட்டி நன்கு உணர வைத்தால், அது, உடல் மற்றும் மனதளவில் உறுதி பெறும்.
நாய்க்குட்டி உறங்கும் இடத்தை விரும்ப வைக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் உறங்கவும், ஓய்வு எடுக்கவும் நல்ல இடம் உள்ளது என்பதை அது அறிதல் வேண்டும். உற்றாரை நம்ப வேண்டும் என்பதை நாய்க் குட்டிக்குப் புரிய வைக்க வேண்டும்.
நன்கு பழக்கப்பட்ட நாய், உற்றார் வந்ததும் அமைதியாக வாலை ஆட்டும் அல்லது படுத்துக் கொள்ளும். நீங்கள் உங்கள் செல்லப் பிராணிக்கு உற்ற நண்பர் என்பதை அறியச் செய்ய வேண்டும்.
ஒரு வார்த்தையில் ஒரு இடத்தில் அமரும் வகையில் பழக்க வேண்டும். சில நேரங்களில் நாயானது வீட்டுக்குள் நினைத்த இடத்தில் சிறுநீரைக் கழிக்கும். இத்தகைய செயல்களைச் செய்ய வேண்டாம் என்று, சிறு சத்தம் கொடுத்து அல்லது குறிப்பிட்ட சொல்லைச் சொல்லிப் பழக்கப்படுத்த வேண்டும்.
சுயக் கட்டுப்பாட்டைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நாயானது மகிழ்ச்சியாக அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போது, நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு அடங்கும் நிலைக்குப் பழக்க வேண்டும்.
நாய்களுடன் பழக ஏற்ற சொற்கள்
மனிதர்கள், நாய்களை வீட்டு விலங்காக வளர்ப்பதற்கு முன், அவை காடுகளிலும் தெருக்களிலும் கூட்டமாகத் திரிந்தவை. பழக்கத் தொடங்கிய காலம் தொட்டு, தம்மை ஓர் ஆள் கட்டுப்படுத்துவதை நாய்கள் விரும்புகின்றன.
எனவே, செல்லப் பிராணிகளிடம் சத்தமாகக் கத்தக் கூடாது. ஏனெனில், அவை நமது ஒவ்வொரு சொல்லின் ஒலி மற்றும் ஓசையளவை நன்கு உணர்ந்து செயல்படும். ஆகவே, சிறுசிறு சொற்கள், உற்சாகம் தரும் சொற்கள் மற்றும் அவை செய்யும் நல்ல செயல்களுக்காகப் பாராட்டுதல் ஆகியவற்றை உடனுக்குடன் செய்தல் அவசியம்.
ஒரு குறிப்பிட்ட வார்த்தையை, நாயின் ஒரு குறிப்பிட்ட செயலுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். நாய்க் குட்டியை முதன் முதலில் பழக்கும் போது, சிறு சிறு பயிற்சிகளை ஜந்து நிமிட இடைவெளியில் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிறகு, பயிற்சியின் காலம் மற்றும் பயிற்சிகளை அதிகமாக்கலாம்.
முத்தான மூன்று பயிற்சிகள்
கையில் நொறுக்குத் தீனியை வைத்துக் கொண்டு, உட்காரச் சொல்லிக் கொடுக்க வேண்டும். உட்கார்ந்ததும் முழங்கால் இட்டு அமரும்படி சொல்லித் தர வேண்டும். வெளியூர்க்குச் செல்லும் போது, சிறு வயதில் இருந்தே நாயை உங்களுடன் வண்டியில் அமர வைத்துப் பயணம் செய்ய வேண்டும்.
கொஞ்ச தூரம் வண்டியை ஓட்டிச் சென்று பின் நெடுந்தூரப் பயணத்தைத் தொடங்க வேண்டும். நான்கு சக்கர வாகனமாயின் கழுத்துப் பட்டை மற்றும் கைப்பிடி சங்கிலி அணிந்திருத்தல் அவசியம். நாய்க்குத் தேவையான உணவு, உணவிடும் பாத்திரம் மற்றும் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வண்டியின் சன்னல் வழியே நாய்க்குட்டி எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்படின், கால்நடை மருத்துவர் மூலம் மயக்க மருந்தைக் கொடுத்து நீண்ட பயணம் அல்லது வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.
அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி, நாய்க் குட்டியின் உடல் நலத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அதை, நீங்கள் கொடுக்கும் பயிற்சிகளைச் சரிவரச் செய்ய வைக்க வேண்டும்.
மரு.மா.வெங்கடேசன், மரு.சோ.யோகேஷ்பிரியா, முனைவர் நா.பிரேமலதா, கால்நடை சிகிச்சைத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு – 614 625.