துவரை இரகங்களும் சாகுபடி முறைகளும்!

துவரை Red gram 5 970056728be63f28eafd232166012377 e1721712195434

துவரை, புரதச்சத்தைக் கொடுக்கக்கூடிய முக்கியப் பயறுவகைப் பயிராகும் உலகளவில் 5.62 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படும் துவரை சாகுபடி மூலம், 4.23 மில்லியன் டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது (FAO 2019). இந்தியா 3.75 மில்லியன் டன், மியான்மர் 0.676 மில்லியன் டன், மலாவி 0.434 மில்லியன் டன், தான்சானியா 0.315 மில்லியன் டன், ஹெய்டி 0.087 மில்லியன் டன் என, துவரம் பருப்பை உற்பத்தி செய்கின்றன.

இந்தியாவில், மராட்டிய மாநிலம் 7.44 இலட்சம் எக்டர், கர்நாடகம் 2.37 இலட்சம் எக்டர், தெலுங்கானா 2.30 இலட்சம் எக்டர், மத்தியபிரதேசம் 1.51 இலட்சம் எக்டர், உத்தர பிரதேசம் 0.87 இலட்சம் எக்டர் பரப்பளவில் துவரையைப் பயிர் செய்கின்றன. இதன் மூலம் 3.75 மில்லியன் டன் துவரம் பருப்பு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

2019-2020 ஆம் ஆண்டில் இருந்த 2.79 இலட்சம் எக்டர் பரப்பளவு, 2020-2021 ஆண்டு 16.56 இலட்சம் எக்டராக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவுக்கு 2019-20 ஆம் ஆண்டில் 42.25 இலட்சம் டன் துவரம் பருப்பு தேவையாக இருந்தது. ஆனால், 49.16 இலட்சம் டன் என, தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டது.

பருவநிலை

இந்தியாவில் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில், துவரை பயிரிடப்படுகிறது. மழைக்காலமான ஜூன் முதல் அக்டோபர் வரை, 26 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், பிந்தைய மழைக்காலமான நவம்பர் முதல் மார்ச் வரை, 17 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், துவரை பயிர் செய்யப்படுகிறது. துவரை பூக்கும் பருவத்தில் பெய்யும் மழை மற்றும் மோசமான மேக மூட்டத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுவதால் வளர்ச்சித் தடைபடுகிறது.

விதைக்கும் பருவம்

குறுகியகாலத் துவரையாக இருந்தால், ஜூன் 15-ஆம் தேதிக்குள்ளும், நீண்டகாலப் பயிராக இருந்தால், ஜூலை 30-ஆம் தேதிக்குள்ளும் விதைக்கலாம்.

விதைக்கும் முறை மற்றும் இடைவெளி

குறைந்த வயதுள்ள துவரையை, அகலப்பாத்தி அமைத்தும், அதிக வயதுள்ள துவரையை, பார்/வரப்பு மற்றும் வாய்க்கால்களை அமைத்தும் விதைக்கலாம். பார்களை அமைத்தால், நல்ல காற்றோட்டம் கிடைக்கும், வேர் முடிச்சுகள் உருவாகும். துவரையின் வயதைப் பொறுத்து, கீழ்க்கண்ட இடைவெளியில் விதைக்க வேண்டும்.

குறைந்த வயதுள்ள, அதாவது, 120-135 நாட்களில் விளையும், கோ.(ஆர்.ஜி.)7, வம்பன் 1, வம்பன் 3 ஆகிய இரகங்களை, 90×30 செ.மீ. இடைவெளியில் பயிரிட வேண்டும்.

அதிக வயதுள்ள, அதாவது, 180-200 நாட்களில் விளையும், கோ.6, கோ.8, கோ.9, வம்பன் 2, எல்.ஆர்.ஜி. 41 ஆகிய இரகங்களை, 120×30 செ.மீ. இடைவெளியில் பயிரிட வேண்டும்.

விதையளவு

நீண்டகாலத் துவரையைத் தனிப் பயிராகப் பயிரிட, எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவை. கலப்புப் பயிராகப் பயிரிட, எக்டருக்கு 5 கிலோ விதைகள் தேவை. குறைந்த வயதுள்ள துவரையைத் தனிப் பயிராகப் பயிரிட, எக்டருக்கு 15 கிலோ விதைகள் தேவை. கலப்புப் பயிராகப் பயிரிட, எக்டருக்கு 7 கிலோ விதைகள் தேவை.

விதை நேர்த்தி

விதைப்பதற்கு முதல்நாள், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் மற்றும் 1 கிராம் கார்பன்டாசிம் அல்லது 3 கிராம் திரம் அல்லது 5 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து வைத்திருந்து விதைக்க வேண்டும். இந்த விதை நேர்த்தி செய்த ஒருநாள் கழித்து ரைசோபியல் கல்ச்சர் சிபிஆர்6 அல்லது சிபிஆர்9 பாஸ்போபாக்டீரியா (பேசில்லஸ் மெகாடிரியம்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் தயாரிப்பான பிஜிபிஆர் சூடோமோனாஸ் எஸ்.பி. 200 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

உர நிர்வாகம்

ஒரு எக்டருக்கு நைட்ரஜன் 25 கிலோ, பாஸ்பரஸ் 50 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ மற்றும் 20 கிலோ கந்தகம் தேவை. இதற்கு, யூரியா 55 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 313 கிலோ, மூரேட் ஆப் பொட்டாஷ் 42 கிலோ, ஜிப்சம் 154 கிலோ வீதம் இட வேண்டும். மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நுண்ணுரக் கலவை 5 கிலோவை, ஊட்டமேற்றிய தொழுவுரமாக வயலில் இட வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்து அன்று முளைப்பு நீரும், விதைத்த மூன்றாம் நாள் உயிர்நீரும் விட வேண்டும். அடுத்து, பூக்கத் தொடங்கும் போதும், 50 சதப் பூக்கள் பூக்கும் பருவத்திலும், காய்களின் வளர்ச்சிப் பருவத்திலும் நீர்ப் பாய்ச்ச வேண்டும் நீர்த் தேங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். பூக்கும் போதும், காய்களின் வளர்ச்சிப் பருவத்திலும், வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

களைக் கட்டுப்பாடு

விதைத்த 20-ஆம் நாள் மற்றும் 35-ஆம் நாள், கைக்களை எடுக்க வேண்டும். களைக்கொல்லியாக இருந்தால், எக்டருக்கு 750 கிராம் பென்டிமெத்தலின் வீதம் எடுத்து, 500 லிட்டர் நீரில் கலந்து, விதைத்த மூன்றாம் நாளில் தெளிக்க வேண்டும். தொடர்ந்து களை முளைத்த பிறகு, எக்டருக்கு 60 கிராம் இம்மாசித்திபார் வீதம் எடுத்து, 15-ஆம் நாளிலும் தெளித்து, களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பூச்சிக் கட்டுப்பாடு

காய்ப்புழுக்களான, பச்சைக்காய்த் துளைப்பான், புள்ளிக்காய்த் துளைப்பான், இறகுப்பூச்சி, துவரைக்காய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு, 150 மி.லி. குளோரின் திரோனேபுரோல் 18.5% மருந்து, அல்லது 220 கிராம் எமமெக்டின் பென்சோயேட் 5% எஸ்.ஜி. மருந்து, அல்லது 100 மி.லி. ப்ளூபென்ண்டமைடு 39.35% எஸ்.சி. மருந்து, அல்லது 125 மி.லி. ஸ்பினோசட் 45% எஸ்.சி. மருந்து, அல்லது 1250 மி.லி. குளோரிபைரிபாஸ் 20 ஈ.சி. மருந்தைத் தெளிக்கலாம்.

கதிர்நாவாய்ப் பூச்சியைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி.டைமெத்தேயேட் 30% ஈ.சி. மருந்து அல்லது 500 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25% ஈ.சி. மருந்தைத் தெளிக்கலாம்.

நோய்க் கட்டுப்பாடு

வாடல் நோய் மற்றும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 2.5 கிலோ சூடோமோனாஸ் எஸ்பி அல்லது டிரைக்கோடெர்மா அஸ்பரில்லத்தை 59 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் இட வேண்டும். மேலும், ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து, செடிகளின் வேரில் ஊற்ற வேண்டும். கண்ணுக்குத் தெரியாத சிலந்திப் பூச்சியால் பரவும் மலட்டுத் தேமல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.கி. வெட்டபிள் சல்பர் 80 WP வீதம் கலந்து, விதைத்த 25, 40, 60 நாளில் தெளிக்க வேண்டும்.

நோயுற்ற செடிகளைத் தொடக்கக் காலத்திலேயே பிடுங்கிவிட வேண்டும். அடுத்து, நோய் தெரிந்ததும் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. பெனசோகுயூன் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்படின் 15 நாள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி

பூக்கும் முன்பு, ஒரு லிட்டர் நீருக்கு 40 மில்லி கிராம் என்ஏஏ வீதம் ஒருமுறையும், அடுத்து, பதினைந்து நாள் கழித்தும் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டிஏபி அல்லது 30 கிராம் யூரியா வீதம் கலந்து, பூக்கும் போது ஒருமுறையும், அடுத்து 15 நாட்கள் கழித்து ஒருமுறையும் தெளிக்க வேண்டும்.

செடிகள் பூப்பதற்கு முன், ஒரு லிட்டர் நீருக்கு 100 மி.கி. சாலிசிலிக் அமிலம் வீதம் கலந்து இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும். அடுத்து, பதினைந்து நாள் கழித்து மறுபடியும் தெளிக்க வேண்டும்.

ஜிங்க் சல்பேட் 0.5% மற்றும் பெர்ரஸ் சல்பேட் 0.5% கரைசலை ஒன்றாகக் கலந்து, பூக்கும் போதும், காய்கள் தோன்றும் நேரத்திலும் தெளித்தால், விதைகள் திரட்சியாகவும், எடை அதிகமாகவும் இருக்கும். இதனால், விளைச்சல் அதிகமாக இருக்கும்.

அறுவடை

எண்பது சதவீதக் காய்கள் முதிர்ந்த பின் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த செடிகளை ஒரு வாரம் குவித்து வைத்திருக்க வேண்டும். பின்பு, குச்சியால் அடித்து காய்களைப் பிரித்து எடுத்து, வெய்யிலில் காய வைக்க வேண்டும். 75% காய்கள் பழுப்பு நிறமாய் மாறிய பிறகு, விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். விதையின் ஈரப்பதம் 10-12 சதவீதம் இருக்க வேண்டும்.

விளைச்சல்

மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தைக் கையாண்டால், எக்டருக்கு 2,000 முதல் 2,500 கிலோ வரை பயறு விளைச்சலைப் பெறலாம். மேலும், 5-6 டன் துவரங் குச்சிகள் கிடைக்கும்.


துவரை GOBI KRISHNAN

முனைவர் அ.கோபிகிருஷ்ணன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம். முனைவர் தி.பாலாஜி, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனூர், திருவண்ணாமலை மாவட்டம். முனைவர் பெ.வீரமணி, மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading