செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர்.
அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருள் மீன். கடல் மீன்கள், வளர்ப்பு மீன்கள் என, இருவகை மீன்கள் சந்தைகளில் விற்கப்படுகின்றன. வளர்ப்பு மீன்கள் ஏரிகளிலும், நீர்வளமுள்ள பகுதிகளில் இதற்கென அமைக்கப்பட்ட குட்டைகளிலும் வளர்க்கப்படுகின்றன. இந்த வளர்ப்பு மீன்களை மழைநீர்ச் சேமிப்புக்காக அமைக்கப்படும், பண்ணைக் குட்டைகளிலும் வளர்க்கலாம் என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.
மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் தொழில்கள், வேளாண் விரிவாக்கம் ஆகியவற்றால், நீரின் தேவை கூடியுள்ளது. நீர்ச்சேமிப்பு இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. நீரைச் சேகரிக்க அணைகள், ஏரிகள், குளங்கள் என, பல கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இருந்தாலும், மழைநீரைச் சேகரித்தல், சேமித்தல், அவசியக் காலங்களில் பாசனத்துக்குப் பயன்படுத்தல் ஆகிய முதன்மை நோக்கங்களுடன் 1,000 ச.மீ. பரப்புள்ள பண்ணைக் குட்டைகள் தற்போது பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் குட்டைகளில் உள்ள நீர், கால்நடைகளுக்கும், பயிர்களுக்கும் பயன்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரவும், மண்ணரிப்பைத் தடுக்கவும் உதவுகிறது. இதில், மீன்களை வளர்த்து இலாபத்தை அடைய முடியும். இங்கே முறையான தொழில் நுட்பங்களைச் செயல்படுத்தி மீன் உற்பத்தியை அதிகரிக்கலாம். அதுமட்டுமின்றி, பண்ணைக் குட்டையில் படியும் வண்டல் மண்ணை நிலத்துக்கு உரமாக இடலாம். இதனால், நிலத்தின் வளத்தைக் கூட்டி, சாகுபடியை மேம்படுத்தலாம்.
பண்ணைக் குட்டையை அமைப்பதற்கான இடத்தேர்வு மிக முக்கியமாகும். வண்டல் மற்றும் களிமண் கலந்த, நீர் மற்றும் மண்ணின் கார அமிலத்தன்மை 7.5-8.5 வரை இருக்கும் இடத்தில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டை, அதிக நாட்களுக்கு நீரை நிறுத்தி வைக்கும். குறைந்தளவு 1.5 மீட்டர் ஆழத்துக்கு நீர் நிற்கும் வகையில், பண்ணைக் குட்டையை அமைக்க வேண்டும்.
குட்டைக்குள் நீரை நிரப்பும் மற்றும் வெளியேற்றும் குழாயில், நைலான் வலையைக் கட்டுவதன் மூலம், தேவையற்ற தழைகள், குப்பைகள், தேவையற்ற மீன் குஞ்சுகள் நுழைவதும், குட்டையிலுள்ள குஞ்சுகள் வெளியேறுவதும் தடுக்கப்படும். குட்டையிலுள்ள நீர் வெளியேற, சரியான வழிவகை செய்ய வேண்டும்.
பண்ணைக் குட்டை நீரின் கார அமிலத் தன்மை நிலையாக இருக்க, எக்டருக்கு 200-250 கிலோ சுண்ணாம்பை இட வேண்டும். சுட்ட சுண்ணாம்புக் கல்லைப் பொடியாக்கி, நீரில் கரைத்துக் குட்டையின் நாலாபுறமும் பரவும்படி தெளிக்க வேண்டும். மீன்களின் இயற்கை உணவுகளான, தாவர மற்றும் விலங்கின நுண்ணுயிர் மிதவைகளின் உற்பத்தியைச் சீராக வைக்க, சுண்ணாம்பை இட்ட ஒருவாரம் கழித்து, எக்டருக்கு 10 டன் மாட்டுச் சாணத்தை உரமாக இட வேண்டும்.
இதில், ஐந்தில் ஒரு பங்கை, மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே இட்டுவிட வேண்டும். மீதமுள்ள சாணத்தை 25-30 நாள் இடைவெளியில் இட்டு வந்தால், மீன்களுக்குத் தேவையான நுண்ணுயிர் உணவு தொடர்ந்து கிடைக்கும். அதனால், மீன்கள் வேகமாக வளரும்.
உரமிட்ட 10-15 நாட்களில், பண்ணைக் குட்டையில் 1 ச.மீ.க்கு 1 மீன் குஞ்சு வீதம், ஆறு வகையான கெண்டைமீன் குஞ்சுகளை இருப்புச் செய்யலாம். இருப்புச் செய்யும் மீன் குஞ்சுகளில் 25 சதம் கட்லா, 15 சதம் ரோகு, 20 சதம் மிர்கால், 10 சதம் வெள்ளிக் கெண்டை 10 சதம் புல்கெண்டை மற்றும் 20 சதம் சாதாக்கெண்டை வீதம் கலந்து வளர்க்கலாம்.
காலை அல்லது மாலையில் தான் மீன் குஞ்சுகளைக் குட்டையில் விட வேண்டும். பண்ணைக் குட்டையில் குறுகிய காலமே நீர் நிற்கும் என்பதால், சுமார் 100 கிராம் எடையுள்ள, நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகளை இருப்புச் செய்ய வேண்டும்.
குறைந்த வளர்ப்புக் காலத்தில் நிறைந்த வளர்ச்சியை அடைவதற்கு, இருப்புச் செய்யப்பட்ட மீன் குஞ்சுகளுக்கு இயற்கை உணவுடன் கடலைப் புண்ணாக்கு மற்றும் அரிசித் தவிட்டைச் சமமாகக் கலந்து, இருப்புச் செய்யப்பட்ட மீன்களின் மொத்த எடையில் 2-5 சதம் வீதம் அளிக்க வேண்டும். ஒரு நாளைக்குத் தேவையான உணவை ஒரே நேரத்தில் கொடுக்காமல், இரண்டாகப் பிரித்து, காலை, மாலையில் கொடுக்க வேண்டும்.
குட்டையில் மிதவை நுண்ணுயிர்கள் உற்பத்தி மற்றும் ஒளிச் சேர்க்கைக்கு, சூரியஒளி மிகவும் அவசியம். சேக்கி டிஸ்க் என்னும் உபகரணத்தைப் பயன்படுத்தி, நீரில் ஒளி ஊடுருவலை அளவிடலாம். நீரின் நிறம் லேசான பச்சை அல்லது மரக்கலரில், அதாவது, சேக்கி டிஸ்கின் அளவு 25-30 செ.மீ.க்குள் இருந்தால், தேவையான மிதவை நுண்ணுயிர் உற்பத்தி, குட்டையில் உள்ளது என அறிந்து கொள்ளலாம்.
நீரானது அடர் பச்சை மற்றும் இளஞ் சிவப்பு நிறத்தில் இருந்தால், அதாவது, சேக்கி டிஸ்கின் அளவு 20 செ.மீ.க்குக் குறைவாக இருப்பின், குட்டையிலிருந்து 20 சதவீத நீரை வெளியேற்ற வேண்டும். நீரின் நிறம் பளிங்கு போல் இருந்தால், அதாவது, தரைமட்டம் வரை அல்லது சேக்கி டிஸ்கின் அளவு 30 செ.மீ.க்கு அதிகமாக இருந்தால், குட்டையில் உரமிடுதல் அவசியம்.
ஒரு பண்ணைக் குட்டையில், 6 மாதத்தில், 80 சதவீதப் பிழைப்பு விகிதத்தில், மீன்களின் வளர்ச்சி சராசரியாக 750 கிராம் அளவில், 600 கிலோ மீன்களை உற்பத்தி செய்ய முடியும். மேம்பட்ட மீன் வளர்ப்பு உத்திகளைப் பயன்படுத்தினால், சிறிய பண்ணைக் குட்டையிலும் மீன் உற்பத்தியைக் கூட்ட முடியும். இந்த மீன்களை உள்ளூர்ச் சந்தைகளில் விற்று வருவாயைப் பெருக்க முடியும்.
முனைவர் ம.அழகப்பன், முனைவர் சு.செந்தூர்குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை – 630 206.