வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் மின்வெட்டு அறவே அகற்றப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது.
இது, தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் என்பதாலும், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் கை கொடுக்கும் என்பதாலும், இம்முடிவை எடுத்து உள்ளதாக அரசு கூறுகிறது.
மின்சாரம் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லையென்னும் அளவுக்கு அது நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது. கொஞ்சம் சட்னி அரைக்கவும் கூட மின்சாரம் வேண்டும்.
மின்சாரம் சீராகக் கிடைத்தால் தான் பயிரிடவும் முடியும். மின்சாரம் இல்லாமல் வீட்டிலும் ஒன்றும் செய்ய முடியாது. காட்டிலும் ஒன்றும் செய்ய முடியாது.
எனவே, அறவே மின்வெட்டு நீக்கம் என்னும் அரசின் முடிவு, காற்றாலை மின்சாரம் கிடைக்கும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவாக இருக்கக் கூடாது. இந்த அறிவிப்பு எப்போதுமே நிரந்தரமானதாக இருக்க வேண்டும்.
அதற்கு அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள சூரிய மின்சாரத் திட்டத்தை முனைப்புடன் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
முதலில் அரசு கட்டடங்களில் எல்லாம் சூரிய மின்சாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
பிறகு, தனியார் வணிக வளாகங்களில் இந்த நிலை வர வேண்டும். அதைத் தொடர்ந்து, வீடுகளுக்கும் சூரிய மின்சாரத் திட்டத்தை விரிவாக்க வேண்டும்.
இதற்கு, இந்தத் திட்டம் மக்களைச் சென்றடையும் வகையில் எளிமைப் படுத்தப்பட வேண்டும். மானிய உதவிகளைத் தர வேண்டும்.
இதில், கையூட்டு என்பதற்குக் கிஞ்சித்தும் இடமிருக்கக் கூடாது. மக்கள் வரவேற்கும் திட்டமாக இருக்க வேண்டும்.
மேலும், காற்றாலை மின்சாரம் நமக்குக் காலமெல்லாம் கிடைக்கும் வகையில், கடற்கரை ஓரங்களில் காற்றாலைகளை நிறுவ முடியுமா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்.
வற்றாத வளங்களான காற்றை, கதிரவனை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டால், மின்சாரப் பற்றாக்குறையை அறவே ஒழிக்க முடியும்.
தீர்ந்து கொண்டே வரும் நீரை, நிலக்கரியைக் கொண்டு திட்டங்களைப் போட்டால், தமிழகத்தில் அறவே மின்வெட்டு நீக்கம் என்பது தற்காலிக அறிவிப்பாகவே இருக்கும்.
தமிழக அரசின் அரிய திட்டமான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைப் போல, சூரிய மின்சாரத் திட்டமும் சீராகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது ஆசை.
2014 ஜூன் இதழில் வெளியான ஆசிரியர் பக்கம்.