My page - topic 1, topic 2, topic 3

செம்மறி ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய்!

நீலநாக்கு நோய் என்பது, செம்மறி ஆடுகளைத் தாக்கும் ஒருவகை நச்சுயிரி நோயாகும். இந்த நச்சுயிரி, கியூலிகாய்ட்ஸ் கொசுக்கள் கடிப்பதால், ஏற்கெனவே நோயுற்ற ஆடுகளில் இருந்து மற்ற ஆடுகளுக்குப் பரவும். மழைக் காலத்தில் கியூலிகாய்ட்ஸ் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக இருப்பதால், நோய்த் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இது, செம்மறி ஆடுகளைத் தவிர, வெள்ளாடு, பசுமாடு, எருமை, ஒட்டகம் மற்றும் அசையூண் வயிறுள்ள வன விலங்குகளையும் தாக்கும். இந்நோய் இந்தியாவில் 1964 ஆம் ஆண்டும், தமிழகத்தில் 1982 இல் திண்டுக்கல் மாவட்டத்திலும் கண்டறியப்பட்டது.

நோய்க்காரணி

இது, ரியோவிரிடே குடும்பத்தையும், ப்ளுடங் வைரஸ் வகுப்பையும் சார்ந்தது. இதுவரை 29 நச்சுயிரி வகைகள் உலகம் முழுவதும் காணப்பட்டுள்ளன.

நோய்ப் பரவல்

இது, தொற்று நோயல்ல. நோயுற்ற ஆடுகளைக் கியூலிகாய்ட்ஸ் கொசுக்கள் கடித்து விட்டு, மற்ற ஆடுகளைக் கடிப்பதால் பரவும். இந்தக் கொசுக்களின் உமிழ்நீர்ச் சுரப்பியில் நச்சுயிரி பல்கிப் பெருகும். மேலும், இந்த நச்சுயிரி தங்கியுள்ள ஈக்கள், அவற்றின் வாழ்நாள் முழுதும் இந்த நச்சுயிரியைப் பரப்பும்.

ஆட்டுண்ணி, நஞ்சுக்கொடி, விந்தணுக்கள் மூலமும் பரவும். அதிக மழை, தட்பவெப்ப நிலை, ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்து, கியூலிகாய்ட்ஸ் கொசுப் பெருக்கம் இருக்கும். நோயுறுதல் 100 சதமும், இறப்பு 2 முதல் 30 சதமும் இருக்கும்.

நோய் அறிகுறிகள்

இது, அனைத்து வயது ஆடுகளையும் தாக்கினாலும், அதிக வயதுள்ள ஆடுகளையே அதிகமாகத் தாக்கும். நோயுற்ற ஆடுகளில் அதிகக் காய்ச்சல், உடல் சோர்வு காணப்படும். வாய்ப்பகுதியில் புண் ஏற்பட்டு உமிழ்நீர் அதிகமாக வடியும். தீவனம் மற்றும் நீரை உண்ண முடியாமல் ஆடுகள் மெலிந்து விடும்.

முதலில் மூக்குச்சளி தெளிவான திரவத்தைப் போல ஒழுகும். பிறகு, 2-3 நாட்களில் கட்டிச் சளியாக மாறிக் காய்ந்து நாசித் துளைகளை அடைத்து, மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். முகத்தின் முன்பகுதி, உதடு, கண்ணிமை, காது ஆகியன வீங்கிச் சிவந்து காணப்படும்.

வாய்ப்பகுதி திசுக்களில் புண்ணும் திசு அழுகலும் ஏற்படும். நாக்கு வீங்கிச் சிவந்து நீல நிறமாக மாறுவதால், நீலநாக்கு நோய் எனப்படுகிறது. கால் குளம்பின் மேல்பகுதி சிவந்து விடுவதால், ஆடுகள் வலியுடன் நொண்டி நொண்டி நடக்கும். கழுத்து பாதிக்கப்படுவதால், கழுத்து வளைந்து ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டிருக்கும்.

ஏற்படும் இழப்புகள்

ஆடுகள் இறப்பு, ஆடுகளின் தசை பாதிக்கப்படுவதால், தசையின் தரம் முற்றிலும் குறைந்து இறைச்சி எடை பெரிதும் குறைந்து விடும். சினை ஆடுகளில் கருச்சிதைவும், கம்பளி ஆடுகளில் உரோமத் தரமும் குறையும்.

தடுப்பு முறைகள்

இது நச்சுயிரி நோய் என்பதால், சிகிச்சை ஏதுமில்லை. ஆனால், சில தடுப்பு முறைகளைப் பின்பற்றலாம்: நோயற்ற இடங்களில் கால்நடைகளின் இடப்பெயர்ச்சியைக் கட்டுப்படுத்துதல், தனிமைப்படுத்துதல் மற்றும் கடுமையாகக் கண்காணித்தல். நோயுள்ள இடங்களில் கியூலிகாய்ட்ஸ் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல்.

மழைக்காலத்தில் ஆட்டுக் கொட்டகையின் உள்ளும் புறமும் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்தல். இதைப் போல, உள்ளும் புறமும் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் இருத்தல். கொட்டிலைச் சுற்றியுள்ள புதர்களை நீக்குதல். கொட்டகைக்குள் கியூலிகாய்ட்ஸ் பெருக்கத்தைத் தவிர்க்க, மின்விளக்குப் பொறி வைத்தல்.

இந்நோயைத் தடுப்பூசியின் மூலமே தடுக்க முடியும். அதனால், மூன்று மாதமான ஆட்டுக் குட்டிகளுக்குத் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசியைப் போடுவதன் மூலம் இந்த நோயிலிருந்து செம்மறி ஆடுகளைக் காப்பாற்ற முடியும்.


மருத்துவர் ம.சிவக்குமார், முனைவர் மூ.தாஸ்பிரகாஷ், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் – 624 004.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks