செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன்.
கீரையின் பெயருக்கு ஏற்றவாறு புளிப்புச் சுவையுள்ள இந்தக் கீரை உடலுக்கு சக்தியை அளிப்பதில் முதன்மை வகிக்கிறது. ஆந்திர மாநிலத்தில் புளிச்ச கீரைக்குத் தனியிடம் உண்டு. கோங்குரா என்று அழைக்கப்படும் புளிச்ச கீரையின் காம்புகளும் தண்டுகளும் சிவப்பாக இருக்கும். இலைகள், மலர்கள், விதைகள் ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை.
கீரையிலுள்ள சத்துகள்
இந்தக் கீரையில் தாதுப் பொருள்களும், இரும்புச் சத்தும், உயிர்ச்சத்தும் தேவையான அளவில் உள்ளன. இரும்புச்சத்து 2.28 மி.கி., உயிர்ச்சத்து ஏ 2898 மை.கி., புரதம் 1.7 கிராம், சுண்ணாம்புச் சத்து 172 மி.கி., பாஸ்பரஸ் 40 மி.கி., உயிர்ச்சத்து சி 20 மி.கி., நார்ச்சத்து 0.7 கிராம். உடல் இளைத்துள்ள குழந்தைகளுக்கு அன்றாடம் புளிச்ச கீரையைத் துவையலாகச் செய்து கொடுத்தால் நன்கு உடல் தேறி விடுவார்கள்.
மருத்துவக் குணங்கள்
எல்லாவித வாத நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை மிக்கது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. வாயு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். காய்ச்சல் காரணமாக நாவில் ருசி மறையும் போது, இந்தக் கீரையைச் சாப்பிட்டால் மீண்டும் ருசியை உணர வைக்கும். புளிச்ச கீரையிலுள்ள வேதிப் பொருள்கள் புற்றுநோயைக் குணப்படுத்தும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலை வலுவாக்கும். இரத்தச் சோகை மற்றும் காசநோயைக் குணப்படுத்தும். பார்வை நன்கு தெரிய உதவும். குடற்புண் மற்றும் குடல் தொடர்பான சிக்கல்களைச் சரி செய்யும். உயர் இரத்தழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, செரிமானச் சிக்கல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
சொறி, சிரங்கு போன்ற சரும நோய்கள் குணமடையும்; சருமம் அழகு பெறும். கூந்தல் நீளமாக வளர உதவும். இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாட்களாக உள்ள மலச்சிக்கல் முற்றிலும் குணமாகும்.
கோடை வெப்பத்தைத் தணிக்கும். சளி, இருமல் மற்றும் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். மஞ்சள் காமாலைக்கு அருமருந்தாகும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் புளிச்ச கீரையைக் கைப்பிடி எடுத்து அரைத்து மோருடன் கலந்து காலையில் பருகி வர வேண்டும். இந்தக் கீரையை வேக வைத்த நீரைப் பருகி வந்தால், உடலுக்குப் புத்துணர்வுக் கிடைக்கும். இதயத்தைச் சீராக வைத்திருக்க உதவும்.
புளிச்ச கீரை உணவுகள்
புளிச்ச கீரையைக் கொண்டு பல்வேறு வகையான உணவுகளைத் தயாரிக்கலாம். அரைக் கீரையுடன் புளிக்குப் பதிலாகப் புளிச்ச கீரையைச் சேர்த்து மசியல் தயாரிக்கலாம்.
புளிச்ச கீரை இட்லிப்பொடி
தேவையானவை: நிழலில் உலர்த்திய புளிச்ச கீரை 2 கைப்பிடி, நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை 1 கைப்பிடி, கடலைப் பருப்பு 30 கிராம், உளுத்தம் பருப்பு 30 கிராம், மிளகாய் வற்றல் 10, மிளகு 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: புளிச்ச கீரை மற்றும் கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வதக்க வேண்டும். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், மிளகு ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். சூடு ஆறிய பிறகு, உப்பு, பெருங்காயத்தூளைச் சேர்த்துச் சிறிது கொரகொரப்பாக அரைத்தால் புளிச்ச கீரை இட்லிப்பொடி தயார். இதை, இட்லி, தோசை மற்றும் சாதத்தில் சேர்த்து உண்ணலாம்.
புளிச்ச கீரை ஊறுகாய்
தேவையானவை: புளிச்ச கீரை 4 கைப்பிடி, மிளகாய் வற்றல், உப்பு தேவையான அளவு, பெருங்காயப்பொடி அரைத் தேக்கரண்டி, கடுகு, வெந்தயப்பொடி தலா அரைத் தேக்கரண்டி, பூண்டு 100 கிராம், சீரகப்பொடி கால் தேக்கரண்டி, நல்லெண்ணெய் 100 மில்லி.
செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து ஈரமில்லாமல் வைக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில் மிளகாய் வற்றல் மற்றும் புளிச்ச கீரையை வதக்க வேண்டும். சூடு ஆறியதும் அரைக்க வேண்டும். பூண்டை உரித்து இடித்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள எண்ணெய்யைக் கடாயில் ஊற்றிக் காய்ந்ததும் பூண்டைச் சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள புளிச்சகீரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கிய பிறகு, மீதமுள்ள பொருள்களைச் சேர்த்து நன்கு வதக்கினால், புளிச்சகீரை ஊறுகாய் தயார். இதை ஆறவிட்டு, கண்ணாடிப் புட்டியில் வைத்துக் கொண்டு, இட்லி, தோசை மற்றும் சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
புளிச்ச கீரைத் துவையல்-சட்னி
தேவையானவை: புளிச்சகீரை 2 கப், தனியா அரைத் தேக்கரண்டி, மிளகாய் வற்றல் 4, வேர்க்கடலை கால் கப், பெருங்காயப்பொடி 4 சிட்டிகை, எண்ணெய் 2 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய்யைச் சூடாக்கி, வேர்க்கடலை, தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை வதக்க வேண்டும். அடுத்து இத்துடன் புளிச்சக் கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும். சூடு ஆறியதும் நன்றாக அரைத்தால் புளிச்ச கீரைத் துவையல் தயார். இதை, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றில் சேர்த்துச் சாப்பிடலாம்.
முனைவர் மா.விமலாராணி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.