விரலி மீன்களை வளர்ப்பதால் விளையும் நன்மைகள்!

விரலி மீன் fish 5

செய்தி வெளியான இதழ்: 2017 மே.

ந்தியாவில் உள்ள மொத்த நன்னீர் மீன் வளர்ப்பில், சுமார் 90 சதவீதம் இந்தியப் பெருங்கெண்டை மீன்களே இடம் பெறுகின்றன. குளங்களில் மீன்களை இருப்புச் செய்வதற்கு முன், நாம் திட்டமிட்டிருக்கும் வளர்ப்புக் காலம், நீர் இருப்பு, தீவனத் தன்மை, எதிர்பார்க்கும் எடை போன்றவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக, 7 முதல் 10 செ.மீ. நீளமுள்ள மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து, பத்து மாதங்கள் வளர்ப்பது வழக்கம். இதனால், மீன் வளர்ப்பு முடிய குறிப்பிட்ட காலம் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், அதுவரையில் நீரும் தேவைப்படுகிறது.

இத்தகைய நிலையில், ஆறு மாதம் முதல் ஓராண்டு வயதுள்ள, வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய அல்லது வளர்ச்சிக் குன்றிய குஞ்சுகளை, அதாவது, 15 முதல் 20 செ.மீ. அல்லது 50 முதல் 100 கிராம் எடையுள்ள குஞ்சுகளை, அதாவது விரலிகளைக் குளத்தில் விட்டு வளர்த்தால், அவை 3 முதல் 5 மாதங்களில் சராசரியாக 500 கிராம் எடைக்கும் அதிகமாக வளரும்.

இவற்றை 5-6 மாதங்களிலேயே அறுவடை செய்து விடலாம். வளர்ச்சிக் குன்றிய விரலிகளைக் குளத்தில் விட்டு வளர்ப்பது என்பது, அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும். இதனால், பயனையும் விரைவில் அடைய முடிகிறது.

வளர்ச்சிக் குன்றிய விரலி மீன்களின் சிறப்புகள்

கெண்டை மீன்கள் முதல் ஆண்டைவிட இரண்டாம் ஆண்டே வேகமாக வளரும். இவற்றுக்கு அதிகப் பிழைப்புத் திறனும், நோய்களால் அதிகமாகப் பாதிக்கப்படாத தன்மையும் உண்டு. நலமற்ற குஞ்சுகள் குறைந்த காலத்தில் இறக்க நேரிடும். ஆனால், சுற்றுச்சூழலைத் தாங்கி நன்றாக வளரும் தன்மை விரலி மீன்களுக்கு உண்டு.

குறுகிய காலத்தில் விரைவாக வளர்ந்து அதிகளவில் உற்பத்தியைக் கொடுக்கும். பெரும்பாலான பருவக்கால நீர் நிலைகளில் 5-6 மாதங்கள் மட்டுமே நீர் இருக்கும். இந்த நிலையில், மீன் வளர்ப்பைச் சிறப்பாக மேற்கொள்ள, விரலிகள் நல்ல வாய்ப்பாக உள்ளன.

இடத்தேர்வும் குளம் அமைப்பும்

நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள சமமான இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். மணல், வண்டல், களிமண் கலந்த இடம் ஏற்றதாகும். ஒவ்வொரு குளமும் செவ்வக வடிவத்தில் 0.1 முதல் 0.5 எக்டர் பரப்பில் இருப்பது நல்லது. குளம் அமையவுள்ள இடத்தை நன்கு காய வைத்து உழ வேண்டும்.

எக்டருக்கு 500 கிலோ சுண்ணாம்பு வீதம் இட்டு, கார அமிலத் தன்மை 7.5 முதல் 8.5 உள்ளவாறு செய்ய வேண்டும். குளத்தில் உயிரியல் உரங்களான, மாட்டுச்சாணம் அல்லது கோழிக்கழிவு அல்லது பன்றிக்கழிவு மற்றும் செயற்கை உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட்டை இட்டு, மிதக்கும் உயிர் உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டும். அறுவடைக் காலம் வரையில் நீர் மட்டம் 4-5 அடி இருக்க வேண்டும்.

இருப்பு வைத்தல், பராமரித்தல்

ஒரு எக்டர் குளத்தில் 5,000 முதல் 8,000 விரல் மீன்களை இருப்பு வைக்கலாம். இந்த விரல் மீன்களில் கட்லா அல்லது தோப்பா வகையை 30%, ரோகு வகையை 40%, மிர்கால் வகையை 30% வீதம் இருப்பு வைக்க வேண்டும். மீன்களின் வளர்ச்சி மற்றும் பிழைப்புத் திறன், குளத்து நீரின் வேதியியல் மற்றும் இயற்பியல் தன்மையைச் சார்ந்திருப்பதால், நீரில் கரைந்துள்ள மூச்சுக்காற்று, கார அமிலத் தன்மை மற்றும் மிதக்கும் உயிரினங்களின் உற்பத்தியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குளத்திலுள்ள மீன்களை மாதிரிப் பிடிப்பு மூலம் கணக்கிட்டு, தவிடு, புண்ணாக்கு, அரிசிமாவு போன்றவற்றை அன்றாடம் இரண்டு வேளை, 3-5 சதம் வீதம் கொடுக்கலாம்.

மீன் பிடிப்பு

விற்பனைக்கு ஏற்ற அளவுள்ள மீன்களை மட்டும் பிடித்தால் மீனுற்பத்தி அதிகமாகும். நன்கு வளர்ந்த மீன்களைப் பிடித்து விட்டு, அதே வகை சிறு மீன்களை நீரில் விட்டு வளர்ப்பது இலாபகரமான வழியாகும். மேலும், தொடக்கத்தில் இருப்பு வைக்கப்பட்ட மீன் குஞ்சுகளின் வளர்ச்சி விரைவாக இருப்பதால், அந்த மீன்களைப் பிடித்து விட்டு, அந்தக் காலியிடத்தில் அதேயினத்தைச் சேர்ந்த புதிய விரலிகளை விட்டு, மீன் வளர்ப்பைத் தொடர முடியும். பல்வேறு வயதுள்ள மீனினங்கள் நிறைந்த குளத்தில், இவ்விதம் தொடர்ச்சியாக மீன் பிடிப்பை நடத்துவது, சிறந்த மீனுற்பத்திக்கு வழி வகுக்கும்.

எனவே, மிகுந்த பொருட்பயனைக் கருத்தில் கொள்ளும் போது, மீன் வளர்ப்பில் வளர்ச்சிக் குன்றிய மீன் விரலிகளைப் பயன்படுத்துவது இலாபமிக்க செயலாகும். எனவே, மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர், குறுகிய காலம் மட்டுமே நீரிருக்கும் குளங்களிலும், வளர்ச்சிக் குன்றிய விரலிகளை விட்டு வளர்த்துப் பயனடைய வேண்டுகிறோம்.


முனைவர் கி.சிவக்குமார், முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading