ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாநில அளவிலான 43-வது நெல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கூட்டம் 15.07.2024 அன்று, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள், தமிழ்நாடெங்கும் நெல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி நெல் விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வுக்கு, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில் நுட்ப மைய இயக்குநர் முனைவர் என்.செந்தில் வரவேற்புரை ஆற்றினார். பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் முனைவர் ஆர்.இரவிகேசவன், பயிர் மேலாண்மை இயக்குநர் முனைவர் எம்.கே.கலாராணி, இயற்கை வள மேலாண்மை இயக்குநர் முனைவர் பி.பாலசுப்ரமணியம், பயிர்ப் பாதுகாப்பு இயக்குநர் முனைவர் என்.சாந்தி ஆகியோர், கடந்தாண்டு நடைபெற்ற துறை சார்ந்த புதிய இரகங்களுக்கான ஆராய்ச்சி, பயிர்ப் பராமரிப்பு மற்றும் பயிர்ப் பாதுகாப்பு குறித்த, புதிய கண்டுபிடிப்புகள் பற்றி விளக்க உரையாற்றினர்.
முன்னதாக, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள நெல் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணையச் செயல் விளக்கத் திடல், 1924-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட விருந்தினர் மாளிகை, காவேரி பாசனப் பகுதிக்கேற்ற தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட மாதிரி தோட்டக்கலை செயல் விளக்கத் திடல், முழுவதும் புனரமைக்கப்பட்ட நிர்வாகக் கட்டடம், கணினி மயமாக்கப்பட்ட கருத்தரங்கக் கூடம் ஆகியவற்றை, துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்கள் திறந்து வைத்தார். மேலும், கணினி மயமாக்கப்பட்ட, விஞ்ஞானிகளின் மாதாந்திர அறிக்கை மென்பொருளை வெளியிட்டு, தலைமையுரை ஆற்றினார்.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நெல் இரகங்கள், உற்பத்தி செய்யப்படும் உயிர் உரங்கள், எதிர் உயிர்கள் மற்றும் சணல் சார்ந்த நார்ப்பயிர்கள், புளிச்சை மற்றும் சணப்பு நார்ப்பொருள்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை, இவ்விழாவில் பங்கேற்ற அனைவரும் பார்வையிட்டனர்.
இதில், பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விதை மைய இயக்குநர் முனைவர் ஆர்.உமாராணி, கோயம்புத்தூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர் ஏ.இரவிராஜ், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர் சி.வன்னியராஜன், குமுளூர் வேளாண்மைப் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர் பி.இராஜ்குமார், ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர் கே.ஆர்.ஜெகன்மோகன், கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பொறுப்பு அலுவலர் முனைவர் ஜி.இரவி, அனைத்து நெல் ஆராய்ச்சி நிலையங்களின் தலைவர்கள் மற்றும் 60 விஞ்ஞானிகள் நேரடியாகவும், 140 விஞ்ஞானிகள் இணைய வழியாகவும் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மேனாள் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், வீரசோழன் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் ஆர்.இராமலிங்கம், காவேரி டெல்டாப் பகுதியைச் சேர்ந்த எம்.ஆசைத்தம்பி, எம்.பாலகிருஷ்ணன், வி.கே.குமரகுரு, டீ.குபேந்திரன் ஆகிய முன்னோடி நெல் விவசாயிகளும், தொழில் முனைவோரும், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, நெற்பயிர் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நிறைவாக, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கா.சுப்ரமணியன் நன்றியுரை கூறினார்.
முனைவர் இரா.நாகேஸ்வரி, இணைப் பேராசிரியர் – உழவியல், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், ஆடுதுறை, தஞ்சாவூர் – 612 101.