செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட்.
நெல்லிக்காய், இயற்கை நமக்கு அளித்த சிறந்த கொடை. எம்பிலிகா அஃபிசிசனாலிஸ் என்னும் தாவரவியல் பெயரைக் கொண்ட நெல்லிக்காயில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, வாதம், பித்தம், கபம் என்னும் திரிகரண தோஷங்களையும் சமன்படுத்த வல்லது. இதனால் தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இதன் முக்கியத்தைப் பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
தினசரி உணவில் நெல்லிக்காயைச் சேர்த்துக் கொண்டால், இளமையும் நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இதை ஆயுர்வேதத்தில் மட்டுமின்றி, யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தி உள்ளனர். நெல்லிக்காய் மட்டுமின்றி, நெல்லி வேர், இலை, பட்டை, பூக்கள் போன்ற அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுகின்றன.
நெல்லிக்காய், அதிகளவு வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் மற்றும் பி வைட்டமின்களைக் கொண்டுள்ளது. மேலும், நமக்கு நலம் பயக்கும் டானின் ஃபிளேவனாய்டுகள், எலாஜிக் அமிலம், காலிக் அமிலம், க்யுரெக்டின் ஆகியனவும் உள்ளன. இதை உலர்த்தி வைத்துப் பல நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
நெல்லிக்காயில் உள்ள சத்துகள்
ஈரத்தன்மை: 81.8 சதம்,
புரதச்சத்து: 0.5 சதம்,
கொழுப்பு: 0.1 சதம்,
கனிமங்கள்: 0.5, சதம்,
நார்ச்சத்து: 3.4 சதம்,
மாவுச்சத்து: 3.7 சதம்,
கால்சியம்: 50 மி.கி.,
பாஸ்பரஸ்: 20 மி.கி.,
இரும்புச்சத்து: 1.2 மி.கி.,
வைட்டமின் சி: 600 மி.கி.
நெல்லிக்காய் ஐந்து சுவைகளைக் கொண்டுள்ளது. ஆறு சுவைகளில், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதிலுள்ள இனிப்பால், பித்தமும், வாதமும் சமன்படும். நெல்லிக்காய், இரத்தச் சுத்தியாகவும், காய்ச்சல் மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
நெல்லிக்காயில் உள்ள உயிர்ச் சத்துகளான ஏ, பி, சி ஆகியன, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. செரிப்புக் கோளாறு, பித்த மயக்கம், காமாலை, கண்நோய் மற்றும் இரத்தச் சோகைக்கு நெல்லிக்காய் மருந்தாகும். ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறும், தேனும் சிறந்த மருந்தாகும்.
நீரிழிவு
நெல்லிக்காயில் உள்ள குரோமியம் கணையச் செல்களைத் தூண்டி, இன்சுலின் ஹார்மோன் சுரப்பைக் கூட்டுவதால், இரத்தத்தில் உள்ள சாக்கரை அளவு கட்டுப்படும். இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிதல் குறையும். இதனால், மாரடைப்பு வருவது குறையும்.
உயர் இரத்தழுத்தம்
நெல்லிக்காய், உயர் இரத்த அழுத்தத்தைப் போக்கும் தன்மை கொண்டது. மேலும், உடல் உறுப்புகளுக்குத் தேவையான பிரண வாயுவைக் கிடைக்கச் செய்கிறது.
கண் நோய்களுக்கு மருந்து
நெல்லிக்காய்ச் சாற்றைத் தேனுடன் கலந்து உண்டால், கண்களில் உண்டாகும் கோளாறுகள் குறையும். மேலும், கண்புரை ஏற்படாமல் தடுக்கும். இதிலுள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையைத் தெளிவாக்கும். மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும்.
தோல் நலம் மேம்படும்
தினமும் காலையில் நெல்லிக்காயைச் சாப்பிட்டால், சருமப் பிரச்சனைகள் தீரும். நெல்லிக்காய்ச் சாற்றைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக் கரைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வயதான தோற்றம் கட்டுப்படும்
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் தாதுப்புகள் அதிகமாக இருப்பதால், உயிர்வளி எதிர் ஆக்ஸிஜனேற்றியாகச் செயல்படும். எனவே, செல்களின் பாதிப்பைக் குறைத்து நாம் நலமாக இருக்கலாம்.
மலச்சிக்கலைத் தடுக்கும்
நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானச் சிக்கல் குறையும். மேலும், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கவும் உதவும்.
கூந்தல் வளர்ச்சிக்கு
நெல்லிக்காயில், இரும்பு, கரோட்டின் மற்றும் பிற சத்துகள் இருப்பதால், முடி உதிர்வைத் தடுக்கும். தலைமுடியின் வேர்களை வலுப்படுத்தும். தலைமுடி கறுப்பாக இருக்கும். மேலும், ஆஸ்த்துமா, பிரான்கைட்டிஸ் எலும்புருக்கி நோய் ஆகியவற்றைக் குணப்படுத்த நெல்லிக்காய் பயன்படுகிறது.
சே.பிரியா, க.சு.ஞானலெட்சுமி, எம்.அப்துல் ரியாஸ், உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பக் கல்லூரி, கோடுவெளி, சென்னை – 600 052.