சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலை Ploughing with cattle in West Bengal scaled

கட்டுரை வெளியான இதழ்: மே 2020

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் காரணிகளில் முக்கியமானது, பரிந்துரைக்கும் இடுபொருளைச் சரியான அளவில் முறையாக இடுவதில்லை என்பதாகும். ஏக்கருக்கு 110 மில்லி மருந்தைத் தெளிக்கச் சொன்னால் 250 மில்லியைத் தெளிப்பது, 200 லிட்டர் நீரில் கலக்கச் சொன்னால் 100 லிட்டர் நீரில் கலப்பது போன்ற செயல்களால், கூடுதல் செலவு, பயிர்ப் பாதிப்பு மற்றும் சூழல் கேடு ஏற்படும். எனவே, உத்திகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.

ஆய்வு முடிவுகள்

தொழில் நுணுக்கத் தகவல் முழுமையாக, குறிப்பாக, தெளிவாகப் புரியும் வகையில் தெரிவிக்கப்பட்டதாக உணரும் விவசாயி தான் அதிகளவில் சரியான உத்திகளைக் கடைப்பிடிக்கிறார். முழுமையா தெரியாது, ஒண்ணும் புரியல, மறுபடியும் கேட்கணும் என்னும் நிலையிலுள்ள விவசாயிகள், உத்திகளைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. எனவே, சுற்றுச்சூழல் சரியாக இருக்க வேண்டுமானால், உத்திகளை முழுமையாகப் பெற்றுச் சரியாகச் செய்ய வேண்டும்.

ஒரு தொழில் நுணுக்கம், பல தொழில் நுணுக்கங்களை உள்ளடக்கியது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். நெல் விதையுடன் மருந்தைக் கலந்து விதைக்க வேண்டும் என்பது ஒரு தொழில் நுணுக்கம். இதில் எதிர் விளைவுகள் நிகழாமல் முழுப்பயன் கிடைக்க, கார்பன்டசிம் என்னும் மருந்து, இதை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் பயன்படுத்துவது, இதை விதையுடன் கலக்க ஒழுகாத நெகிழிப்பை தேவைப்படுவது, விதைகளில் படும்படி மருந்தைக் கலப்பது, இந்தக் கலவையை ஒருநாள் வைத்திருந்து, அசோஸ்பயிரில்லத்தில் விதைநேர்த்தி செய்வது ஆகிய உத்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதைப்போல எல்லாத் தொழில் நுணுக்கங்களுக்கும் உட்பிரிவுகள் மற்றும் தொழில் நுணுக்கத் துகள்கள் உள்ளன. இவற்றைச் சில கேள்விகள் மூலம் கண்டறியலாம்.

கேள்வித் தொகுப்பு

பரிந்துரைக்கப்படும் இடுபொருள் என்ன? நெல் விதை உயிர் உர நேர்த்திக்கு, அசோஸ்பயிரில்லம், நீலப்பச்சைப்பாசி, ரைசோபியம் ஆகியவற்றில் அசோஸ்பயிரில்லம் தான் தேவை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இடும் அளவு எவ்வளவு? ஒரு ஏக்கர் நெல் விதைக்கு இரண்டு பொட்டலம் அசோஸ்பயிரில்லம் தேவை. ஆனால், இதுவே ஒரு ஏக்கர் எள் விதைக்கு ஒரு பொட்டலம் என்பதால், குறிப்பாக எந்த அளவு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இடுபொருளின் தன்மை என்ன? சூடான அரிசிக் கஞ்சியில் அசோஸ்பயிரில்லத்தைக் கலந்தால் நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்பதால், ஆறிய அரிசிக் கஞ்சியில் தான் கலக்க வேண்டும். மேலும், ஆடையுள்ள கஞ்சியில் கலந்தால் கலவை சரியாக இருக்காது. இதைப்போல, நுண்ணூட்டக் கரைசலைத் தயாரிக்க மற்றும் பயிர் ஊக்கிகளைத் தெளிக்க, சுத்தமான நீரைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் சாதனம் எது? பூசணக்கொல்லி மருந்தை நெல் விதையோடு கலக்க, ஓட்டையில்லாத நெகிழிப்பை அல்லது விதையுடன் மருந்தைக் கலக்கும் கருவி. களைக்கொல்லியைத் தெளிக்க, கைத்தெளிப்பான்.

இடைநிகழ் செயல்கள் யாவை? மருந்தைத் தெளிக்கக் கலவை தயாரித்தல், உயிர் உர விதை நேர்த்திக்கு, உயிர் உரத்தைக் கஞ்சியில் கலத்தல், நடவு வயலில் இட, உயிர் உரத்தைத் தொழுயெருவில் கலந்து இடுதல், பூட்டாகுளோர் களைக்கொல்லியை மணலில் கலந்து விதைத்தல்.

பரிந்துரைக்கப்படும் செய்முறை என்ன? வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த, பருத்திச் செடியின் அடிப்பகுதியில் நன்கு படும்படி மருந்தைத் தெளித்தல். பூசணக்கொல்லியை விதையுடன் குலுக்கிக் கலக்குதல். களைக்கொல்லியைப் பின்னோக்கி நடந்து தெளித்தல்.

நடவு இடைவெளி மற்றும் மருந்தடிப்பது எப்படி? நிலக்கடலைக்கு 30×10 செ.மீ., எள்ளுக்கு 30×30 செ.மீ. இடைவெளி விட வேண்டும். சதுர மீட்டருக்கு 80 குத்துகள் இருக்கும்படி குறுகியகால நெற்பயிரை நட வேண்டும். துங்ரோ வைரஸ் நோயைப் பரப்பும் பச்சைத் தத்துப்பூச்சியைக்  கட்டுப்படுத்த, நடவு செய்த 15 மற்றும் 30 நாளில் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

எச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை? மருந்தைத் தெளிக்கும் முன், பொருளாதாரச் சேதநிலையைக் கணக்கிடுவது, களைக்கொல்லியைத் தெளிக்கு முன் நிலத்தைக் கட்டியில்லாமல் வைத்திருப்பது. 24 மணி நேரத்துக்கு முன் பூசணக்கொல்லியைக் கலந்த விதையுடன் அசோஸ்பயிரில்லத்தைக் கலப்பது.

இப்படிக் கேள்விகளைக் கேட்டால் தான் விதையைக் கடினப்படுத்தும் தொழில் நுணுக்கத்தில், உப்புக்கரைசலில் ஊறிய விதைகளை, முன் பதத்துக்கு வரும் வரை நிழலில் உலர்த்துவது, அசோஸ்பைரில்லம் கலந்த விதையை 15 நிமிடமாவது நிழலில் உலர்த்துவது, பூசணக்கொல்லி கலந்த விதைகளை 24 மணி நேரம் வைத்திருப்பது, களைக்கொல்லியைத் தெளித்த தெளிப்பானை உடனே நன்கு கழுவி வைப்பது போன்ற  எச்சரிக்கைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

துல்லியமாகத் தகவல்களைப் பெற

இப்படியான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால் தான் துல்லியமான விவரங்களைத் தெரிந்து கொண்டு, அவற்றை முழுமையாகக் கடைப்பிடித்து, சுற்றுச்சூழலைக் காக்க முடியும். வேளாண்மை விரிவாக்க மையங்கள், விரிவாக்கப் பணியாளர்கள் மூலம் விளக்கங்களைக் கேட்டறியலாம். மறைமுகத் தொடர்பு முறைகளான வானொலி, தொலைக்காட்சி, விவசாய இதழ்கள், அச்சிட்ட வெளியீடுகள், பலவகைக் கடிதங்கள், ஒட்டிகள், விளம்பரங்கள் மூலமும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

கருத்துக் காட்சிகளைப் பார்த்து, அங்குள்ள விரிவாக்கப் பணியாளரிடம் விளக்கம் பெறலாம். சோதனைத்திடல் மற்றும் பண்ணைத் திடல்களை நேரில் பார்த்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் விவரம் பெறலாம். வேளாண்மை அறிவியல் நிலையங்களில் நடக்கும் உழவர் தின விழாக்களில், கருத்தரங்குகளில், வயல்வெளிப் பயற்சிகளில் நேரில் கலந்து கொண்டு புரியும்படி தெரிந்து கொள்ளலாம். வேளாண் பல்கலைக் கழகத்தின் காணொளிப் பதிவுகள் மூலமும் தகவல்களைப் பெறலாம்.

சூழலைக் காக்கும் பிற வழிகள்

ஒலியைக் குறைவாக வைத்து வானொலியைக் கேட்பது. அச்சிட்ட வெளியீடுகளைச் சுவரில் ஒட்டி வைத்துத் தேவைக்குப் பயன்படுத்துவது. தேவையற்ற வெளியீடுகளைக் கண்ட இடத்தில் போடாமல் குப்பைக் குழியில் போடுவது. காலியான மருந்துக் கலன்களை உடனே நன்றாக நசுக்கி, ஆழக்குழில் புதைப்பது. பயன்படுத்திய பயிர்ப் பாதுகாப்புக் கருவிகளை, நீர்நிலைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், உடனே கழுவி வைப்பது. எந்த விரிவாக்கக் கல்வி முறையாக இருந்தாலும், ஆர்வமாகக் கவனித்துத் தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொள்வது. இவற்றின் மூலம் சூழலுக்கு உகந்த வகையில் பயிரிட்டு வாழ்க்கையில் வளம் பெறலாம்.


சுற்றுச்சூழலை DR.K.RAMAKRISHNAN

முனைவர் கி.இராமகிருஷ்ணன்,

முனைவர் இரா.வேலுசாமி, முனைவர் ஜெ.புஷ்பா,

வேளாண்மை விரிவாக்கம் மற்றும் ஊரகச் சமூகவியல் துறை,

வேளாண்மைக் கல்லூரி, மதுரை-625104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading