இப்போது இறைச்சியை விரும்பி உண்ணும் பழக்கம் மக்களிடம் மிகுந்து வருகிறது. இதைப்போல, எல்லோர்க்கும் வேலைவாய்ப்பு என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சூழலில் வெள்ளாடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீடு போதும். வெள்ளாடுகள் மூலம், இறைச்சி, தோல், உரோமம், எரு ஆகிய பொருள்கள் கிடைக்கின்றன.
பொதுவாக ஆடுகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்து வருமானம் பார்க்கலாம். இல்லையெனில், 2-3 மாதக் கிடாய்க் குட்டிகளை வாங்கி, 6-7 மாதங்கள் நன்றாக வளர்த்து, பண்டிகைக் காலங்களில் இறைச்சிக்காக விற்று நல்ல இலாபத்தை அடையலாம். இதற்கு, எளிமையான கொட்டகை, தீவன வசதி, மருந்துக் குளியல் தொட்டி ஆகியன இருந்தால் போதும்.
கொட்டகை
குறைந்த செலவில் எளிமையாகவும், மழை, வெய்யில், பனிக் காலங்களிலும் இரவிலும் கிடாய்க்குட்டிகள் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும் கொட்டிலை அமைக்க வேண்டும். ஒரு கிடாய்க்கு 10-15 சதுரடிக் கொட்டிலும், 15-30 சதுரடி வெட்டவெளியும் தேவைப்படும். சுற்றுச் சுவருக்கு பதிலாக, 5-6 அடி உயரமுள்ள கம்பி வலையை அமைத்துக் கொள்ளலாம்.
தீவன வசதி
தீவனத் தொட்டிகள் மரம் அல்லது இரும்பால் இருக்கலாம். பத்துக் குட்டிகளுக்கு 10 அடி நீளம் 2 அடி அகலம் 1.5 அடி உயரமுள்ள தீவனத் தொட்டி இருந்தால் போதும். குடிநீர்த் தொட்டி, சிமெண்ட், பிளாஸ்டிக் அல்லது இருப்புத்தகட்டில் இருக்கலாம். சிறிய துண்டுகளாக நறுக்கிப் போட்டால் தீவனம் வீணாவதைத் தடுக்கலாம்.
மருந்துக் குளியல் தொட்டி
ஆடுகளில் புற ஒட்டுண்ணிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதனால் தான் ஆடுகளை, ஒட்டுண்ணிகளின் அருங்காட்சியகம் என்று கூறுவர். புற ஒட்டுண்ணிகளின் பாதிப்பைக் குறைக்க, கிடாய்களுக்கு மருந்துக் குளியல் அளிக்க வேண்டும். இந்தத் தொட்டியைச் சிமெண்ட் உறையால் அமைத்துக் கொள்ளலாம்.
பராமரிப்பு
கொட்டகை: மேடான, சமமான, உறுதியான தரைப்பகுதியில், நல்ல வடிகால் மற்றும் காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும். கடும் வெய்யிலைச் சமாளிக்கும் வகையில் கொட்டகையின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக அமைய வேண்டும். அகலம் இருபடிக்கு மேல் இருக்கக் கூடாது. நீளம் வசதியைப் பொறுத்து அமையலாம். கிடாய்கள் உலாவ ஏதுவாக, கொட்டிலைப் போல இரு மடங்குக் காலியிடம் இருக்க வேண்டும்.
தீவனம்: இறைச்சிக்காக வளர்க்கும் கிடாய்களில் நல்ல இலாபத்தை அடைய வேண்டுமானால், தீவனத்தில் அதிகக் கவனம் இருக்க வேண்டும். அதாவது, பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். பசுந்தீவனத்தில் புரதம், தாதுப்புகள், உயிர்ச் சத்துகள் உள்ளன. எனவே, பயறுவகை, புல்வகை, தானியவகை மற்றும் மரவகைத் தீவனங்களைக் கொடுக்க வேண்டும். ஒரு கிடாய்க்குத் தினமும் 3-5 கிலோ பசுந்தீவனம், இரண்டு கிலோ உலர் தீவனம் 250 கிராம் அடர்தீவனம் வீதம் கொடுக்க வேண்டும்.
காயடித்தல்: இறைச்சிக்காக வளர்க்கப்படும் கிடாய்களுக்குக் காயடித்து விட வேண்டும். இதைக் குட்டியின் 2-3 மாத வயதில் செய்ய வேண்டும். இதனால், எடை விரைவாகக் கூடும். இறைச்சி சுவையாக இருக்கும். தோல் தரமாக இருக்கும். பண்ணையில் கிடாய்கள் அமைதியாக இருக்கும்.
தாதுப்புக்கட்டி: இதில் முக்கியத் தாதுப்புகளான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், கந்தகம், மக்னேசியம் மற்றும் குறைந்தளவில் தேவைப்படும் தாதுகளான இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்றவை அடங்கியுள்ளன. இந்தத் தாதுப்புக் கட்டியைக் கொட்டிலில் கட்டித் தொங்க விட்டால், கிடாய்கள் இதை நக்குவதன் மூலம், தங்களுக்குத் தேவையான தாதுகளைப் பெற்றுக் கொள்ளும்.
குடற்புழு நீக்கம்: மாதம் ஒருமுறையென, ஆறு மாதம் வரையில் குட்டிகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவமழையின் போது ஒருமுறையும் பருவமழைக்குப் பின் இருமுறையும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
புற ஒட்டுண்ணி நீக்கம்: வெள்ளாடுகளைப் பேன், உன்னி, தெள்ளுப்பூச்சி, மூக்குப்புழு போன்றவை அதிகமாகத் தாக்கும். இதனால் வளர்ச்சிக் குறைவு ஏற்படும். இவற்றைக் கட்டுப்படுத்த, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குட்டிகளுக்கு மருந்துக் குளியல் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அதிக எடையில் குட்டிகள் வளர்ந்து நல்ல இலாபத்தைக் கொடுக்கும்.
மரு.ச.இளவரசன்,
மரு.த.அ.விஜயலிங்கம், மரு.ந.வ.இராஜேஷ், கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இராமநாதபுரம்-623503.