கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020
வடிகால் வசதியுள்ள செம்பொறை மண் மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமில நிலை 5.5 முதல் 7.0 வரை இருக்கலாம். இது 5.0க்கும் குறைந்திருந்தால், எக்டருக்கு 2.5 டன் டோலமைட்டை இடலாம். பனியற்ற மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக் குறைவாக வெப்பமுள்ள கோடையிலும், கடல் மட்டத்திலிருந்து 900-2,500 மீட்டர் உயரத்திலும் நன்கு வளரும். ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபரில் பயிரிடலாம். பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் நல்ல மகசூல் கிடைக்கும்.
நிலம் தயாரித்தல்
இருமுறை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 50 டன் தொழுவுரம், ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு, 5 டன் இயற்கை உயிராற்றல் உரம் மற்றும் 2 டன் மண்புழு உரத்தை இட வேண்டும். பிறகு, 30 செ.மீ. உயரம், 1.5 மீ. அகலத்தில் பாத்திகளை அமைக்க வேண்டும். நடவின் போது 5 கிலோ அசோஸ்பைரில்லம், 5 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை இட வேண்டும். ஒரு எக்டர் நடவுக்கு 50,000 நாற்றுகள் தேவைப்படும்.
நாற்று உற்பத்தி
செடிகள் பூப்பதற்கு முன் தண்டுகளை வெட்டி, 10-15 செ.மீ. நீளமுள்ள துண்டுகளாக நறுக்க வேண்டும். நுனி இலைகள் இருக்க, மற்ற இலைகளை நீக்க வேண்டும். வேர்விடும் திறனைக் கூட்ட, 10% சாண மூலிகைக் கரைசலில் 20 நிமிடம் நனைக்க வேண்டும். பின் நெகிழிப் பைகளில் நட்டு, நிழலில் வைத்து, தினமும் இருமுறை நீரூற்றி வந்தால், 60 நாட்களில் நாற்றுகள் தயாராகி விடும்.
நடவு
45×45 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். ஆறு மாதம் கழித்துச் செடியின் மையத்தண்டை வெட்டி விட்டால், பக்கக் கிளைகள் நன்கு வளரும். இதை மானாவாரியாகப் பயிரிடலாம். வறட்சியில் பாசனம் செய்தால் பச்சை இலைகள் அதிகமாகக் கிடைக்கும்.
பின்செய் நேர்த்தி
நட்டு ஒரு மாதத்தில் களையெடுக்க வேண்டும். ஆண்டுக்கு 4-5 முறை களையெடுத்தல் அவசியம். இரண்டாம் ஆண்டு முதல் பாஸ்போபாக்டீரியம் மற்றும் அசோஸ்பைரில்லத்தை எக்டருக்கு 5 கிலோ எடுத்து, 30 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும். மேலும், 3% பஞ்சகவ்யக் கரைசலை ஆண்டுக்கு ஐந்து முறை பத்து நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். மேலும், இக்கரைசலை மண் அணைத்தல் முறையில் மாதம் ஒருமுறை இட வேண்டும்.
5% வேப்பெண்ணெய்க் கரைசல், 10% மண்புழு வடிநீர்க் கரைசல், 3% தசகவ்யக் கரைசலை ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும். இதற்குப் பூச்சி, பூசண நோய்களை எதிர்க்கும் திறன் இருப்பதால் பயிர்ப் பாதுகாப்பு அவசியமில்லை. ஆண்டுதோறும் ஒரு எக்டரில் இருந்து 12-13 டன் பச்சை இலைகள் கிடைக்கும்.
அறுவடை
நட்டு 215 நாட்களில் மகசூலுக்கு வரும். அடுத்து, ஆண்டுக்கு மூன்று முறை, 3-4 மாத இடைவெளியில் மகசூலைப் பெறலாம். ரோஸ்மேரி பூக்கும் போது இலைகளை அறுவடை செய்ய வேண்டும். 30-35 செ.மீ. நீளத்தில், இலையுடன் மேல் தண்டுகளை அறுவடை செய்ய வேண்டும். மெல்லிய தண்டு எண்ணெய் எடுக்க ஏற்றது. கடினத் தண்டால் எண்ணெய்யின் தரமும் மணமும் பாதிக்கப்படும்.
பதப்படுத்துதல்
அறுவடை செய்த இலைகளை நன்கு கழுவி நிழலில் உலர்த்த வேண்டும். நீலகிரிப் பகுதியில் 10-15 நாட்கள் வரை உலர்த்த வேண்டும். சமவெளியில் சிமெண்ட் தரையில் பரப்பி மின்விசிறி மூலம் உலர்த்தினால் இலைகள் சீராகக் காயும். இதனால் மூன்று நாட்களில் 10% ஈரமுள்ள தரமான இலைகள் கிடைக்கும். இவற்றைத் தரமான நெகிழிப் பைகளில் அடைத்து வைக்கலாம். இவ்வகையில், ஒரு எக்டரில் ஆண்டுக்கு 2.5 டன் உலர் இலைகள் கிடைக்கும்.
முனைவர் தே.கெய்சர் லூர்துசாமி,
முனைவர் ப.பாலசுப்பிரமணியன், முனைவர் மீ.திலக்,
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம்.