கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020
குளிர்ச்சிப் பகுதிகளில் ஆப்பிளுக்கு அடுத்து விளையும் பழம் பேரி. இந்த மரம் 10-16 மீட்டர் உயரம் வளரும். இது ரோசேசீ குடும்பத்தைச் சார்ந்தது. மேற்கத்திய நாடுகளில், பேரிப்பழத்தில் இருந்து பழச்சாறு, ஜாம், மதுரசம் மற்றும் பதப்படுத்திய பேரி உணவுப் பொருள்களைத் தயாரிக்கின்றனர்.
பேரி பைரஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்த கமுனிஸ் என்னும் இனம் பயிரிடப்படுகிறது. வட இந்தியாவில் பாசியா என்னும் இனமும், தென்னிந்தியாவில் பைரஸ் பைரிஃபோலியா என்னும் இனமும் வேர்ச் செடிகளாகப் பயன்படுகின்றன.
நூறு கிராம் பேரியில் புரதம் 0.69 கிராம், வைட்டமின் ஏ 0.06 மி.கி., வைட்டமின் பி 0.03 மி.கி., கால்சியம் 8 மி.கி., பாஸ்பரஸ் 15 மி.கி., இரும்பு 0.5 மி.கி. உள்ளன.
மண்ணும் தட்பவெப்பமும்
தென்னிந்திய மலைகளில் கடல் மட்டத்திலிருந்து 1400-2200 மீட்டர் உயரத்திலும், வட இந்திய மலைகளில் 600-2700 மீட்டர் உயரத்திலும் பேரி விளைகிறது. ஆகையால், இங்கு மலையடிவாரமும் ஏற்றது.
ஏனெனில், இங்குக் காய்ப்புக்குத் தேவையான 500-1500 குளிரூட்டும் நேரம் உள்ளது. இரண்டு மீட்டர் ஆழம், நடுத்தர அமைப்பு மற்றும் வடிகால் வசதியுள்ள மண்ணில் பேரி சிறப்பாக வளரும்.
இரகங்கள்
இப்போதுள்ள பேரி இரகங்கள் ஐரோப்பிய மற்றும் ஆசிய வகைகளில் அடங்கும். ஐரோப்பிய வகையான பைரஸ், கமுனிஸ் வழியில் வந்தது. வட இந்தியாவிலுள்ள உயர்ந்த மலைகளில் ஏர்லி சீனா, லாஸ்டன், சுபர்ப், பார்லெட் டெலிசியஸ், கான்பிரன்ஸ், டோயென்.
டியுகோமைஸ் ஆகிய இரகங்களும், நடுத்தர மற்றும் குறைந்த உயரமுள்ள மலைகளில் சான்டு பியர், கை்பர், சீனா பியர் இரகங்களும் விளைகின்றன. தென்னிந்திய மலைகளில் கைபர், நியூ பியர், வில்லியம், ஜார்கோனல் ஆகிய இரகங்கள் விளைகின்றன.
கைபர் இரகம் பரவலாக வளரக் கூடியது. கடினத் தன்மையுள்ள இந்தப் பழம் பழுப்பு நிறத்தில், சராசரியாகவும் பெரிதாகவும் இருக்கும். உலக முழுதுமுள்ள பார்லெட் இரகம், வில்லியம்ஸ் அல்லது வில்லியம் பார்லெட் எனப்படுகிறது.
நீளமாகவும் முட்டை வடிவத்திலும் பெரிதாக இருக்கும் இப்பழத்தில், உறுதியான சதைப்பற்று, உருகும் தன்மை மற்றும் சாறு நிறைந்திருக்கும்.
இனப்பெருக்கம்
ஒட்டுக் கட்டும் முறையில் பேரியை இனப்பெருக்கம் செய்யலாம். வட இந்தியாவில், ஓராண்டு விதைக்கன்றுகள் வேர்ச்செடியாகப் பயன்படுகின்றன. இவை, பாசியா, பைரிஃபோலியா ஆகிய இனங்களைச் சார்ந்தவை.
குச்சிகள் மூலம் உருவாக்கப்படும் குயின்ஸ் என்னும் வேர்ச்செடி, தண்டுக்குச்சிக்குக் குள்ளத் தன்மையைக் கொடுக்கும். தென்னிந்தியாவில் நாட்டுப் பேரியில் வேர்விட்ட குச்சிகள், எல்லா இரகங்களுக்கும் வேர்ச் செடியாகப் பயன்படுகின்றன.
பனிக்காலத்தில் உறக்க நிலையில் உள்ள மாதங்களில், நாக்கு ஒட்டு முறையைப் பின்பற்றுகின்றனர். டிசம்பரில் பிளவு ஒட்டு முறையில், நாட்டுப் பேரியில், இரகத் தண்டுக் குச்சிகளை இணைக்கலாம்.
நடவு
1-1.5 வயதுள்ள ஒட்டுக்கன்றுகளை நடலாம். 60 செ.மீ. நீள, அகல, ஆழக் குழிகளை 5 மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும். இவற்றில் கன்றுகளை ஜூன் முதல் நவம்பர் வரையில் நடலாம்.
உரமிடுதல்
தமிழ்நாட்டில், நன்கு காய்க்கும் மரம் ஒன்றுக்கு மட்கிய தொழுவுரம் 40 கிலோ, 9:9:9 என்னும் விகிதத்தில் கலந்த தழை, மணி, சாம்பல் சத்துக் கலவை 2 கிலோ இட வேண்டும். போரான் குறை இருந்தால் பழங்களில் வெடிப்பு ஏற்படும்.
முதிர்ந்த பழங்களில் குழிகள் ஏற்படும். இதைச் சரி செய்ய 0.1% போரிக் அமிலக் கலவையைத் தெளிக்க வேண்டும்.
பாசனம்
நல்ல மகசூலுக்கு, மார்ச்-ஜூன் காலத்தில் வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். பேரி மரம் பிப்ரவரியில் பூத்துக் கோடையில் காய்க்கும். ஜூலை 15 வரை பாசனம் அதிகமாகத் தேவைப்படும். போதிய பாசனம் இல்லையெனில் மரங்களின் வளர்ச்சிக் குறைந்து விடும்.
செப்டம்பர் அக்டோபரில் வெள்ளை எறும்புகளின் தாக்கம் இருப்பதை, அவை மரங்களில் கட்டியிருக்கும் மண் கூடுகள் மூலம் அறியலாம். இவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி குளோர்பைரிபாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
கவாத்தும் வடிவமைப்பும்
மகசூல் விரைவாகவும், இலாபம் அதிகமாகவும் கிடைப்பதற்கு, மரங்கள் பல வடிவங்களில் மாற்றப்படுகின்றன. அவற்றில், பிரமிடு, ஸ்பின்டல், பால்மேட் ஆகியவை பொதுவானவை. இந்தியாவில், ஓபன் சென்டர் என்னும் திறந்த மைய முறை பின்பற்றப்படுகிறது.
நவம்பர் டிசம்பரில், காய்ந்த, நோயுற்ற, உடைந்த மற்றும் குறுக்கும் நெடுக்குமாக உள்ள குச்சிகளைக் கவாத்து செய்ய வேண்டும். உறங்கும் நிலைப் பருவத்தில் கிளைகள் படர்வதை ஊக்குவிக்க, அனைத்துத் தண்டுக் குச்சிகளையும் அவற்றின் மொத்த நீளத்தில் பாதியை வெட்டிவிட வேண்டும்.
களை நிர்வாகம்
உரமிடும் காலத்தில் அதாவது, டிசம்பரில் இருந்து களையைக் கட்டுப்படுத்த, மண்ணைக் கொத்திவிட வேண்டும். எனினும், ஒரு லிட்டர் நீருக்கு 6-7 மில்லி வீதம் கலந்த களைக்கொல்லியை, பிப்ரவரி கடைசியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தெளிக்க வேண்டும்.
விதை மூலம் முளைக்கும் களைகளை அழிக்க, ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி வீதம் கலந்த கிளைபோசேட் மருந்தைத் தெளிக்க வேண்டும். இதை மரத்தண்டில் படாமல் அடிக்க வேண்டும். பார்த்தினீயம் போன்றவற்றை அகற்ற, கிராமக்சோன் அல்லது உப்பை 20% நீரில் கலந்து தெளிக்கலாம்.
அறுவடை மற்றும் மகசூல்
பேரி மரம் 5-6 வயதில் பூக்கத் தொடங்கும். நல்ல மகசூலுக்கு அயல் மகரந்தச் சேர்க்கை முக்கியம். இதன் மூலம் காய்ப்பிடிப்பு 70% கூடும். இந்த இலக்கை அடைய அதிக மகரந்தம் தரும் மரங்களை நட வேண்டும். தன் மகரந்தச் சேர்க்கையிலும் பேரி காய்க்கும்.
எனினும், இப்பண்பு மரத்தின் வீரியம், இடம் மற்றும் பருவத்தைச் சார்ந்தே இருக்கும். பதப்படுத்தவும், தொலைவுக்குக் கொண்டு செல்லவும் விரும்பினால், நன்கு முதிர்ந்த, பச்சை நிறம் மாறாத கெட்டியான பழங்களை அறுவடை செய்ய வேண்டும். உள்ளூர்ச் சந்தைக்கு இன்னும் தாமதித்து அறுவடை செய்யலாம்.
தென்னிந்திய மலைகளில் முதலில் பூக்கும் இரகங்கள் மே, ஜூனில் அறுவடைக்குத் தயாராகும். விரைவாக விளையும் இரகங்கள், ஜூலை-அக்டோபர் காலத்தில் அறுவடைக்கு வரும். மஞ்சளாக மாறும் பழத்தில் 9-10% சர்க்கரை இருக்கும்.
பழங்கள் முதிர, 135-145 நாட்களாகும். முதிராத நிலையில் பறித்தால் பழத்தில் சுருக்கம் விழும். இது விற்பனைக்கு உதவாது. ஒரு மரத்திலிருந்து 100-120 கிலோ பழங்கள் கிடைக்கும். ஜார்கோனெல், வில்லியம் ஆகிய இரகங்கள் 30-40 கிலோ பழங்களையே தரும்.
அறுவடைக்குப் பின்சார் உத்திகள்
அறுவடை செய்த பழங்களைத் தரம் வாரியாகப் பிரித்து, அட்டைப்பெட்டி அல்லது மரப்பெட்டியில் அடைத்து, 0-3 டிகிரி வெப்ப நிலையில் 85-90% ஈரப்பதமுள்ள கிடங்கில் சேமிக்கலாம். கட்டுப்படுத்தப்பட்ட வளிமண்டலச் சேமிப்பு முறையில் 0.1 டிகிரி வெப்ப நிலையில் இரண்டு மாதங்கள் வரை சேமிக்கலாம்.
வரையறுக்கப்பட்ட பிராணவாயுவின் அளவு 2%, கரிம வாயுவின் அளவு 5% ஆகும். ஒரு ஏக்கர் நாட்டுப் பேரியில் இருந்து ஆண்டுக்கு 20,000-25,000 ரூபாயும், வால் பேரி போன்ற இரகங்களில் இருந்து 40,000 ரூபாய் வரையும் இலாபம் பெறலாம்.
முனைவர் ம.இ.மணிவண்ணன்,
முனைவர் ஐ.முத்துவேல், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,
கொடைக்கானல், திண்டுக்கல்-624103.