அனுபவத்தைக் கூறுகிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்!
கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018
இயற்கையை நம்பி இருப்பது விவசாயம். மண் வளமும், பருவ மழையும், பருவ நிலையும் சரியாக அமைந்தால் விவசாயம் சிறப்பாக இருக்கும். ஆனால், மழையும் பொய்த்து, பருவ நிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், அண்மைக் காலமாக, விவசாயத்தின் மீதான பற்றுதல், விவசாயிகளிடம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், விவசாயப் பொருள்களுக்கு நிலையான விலையும் இல்லாததால், வறுமையைச் சந்திக்கும் விவசாயிகள், மாற்றுத் தொழிலைத் தேடிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, விவசாயத்தில் முழுமையாகவும், ஆர்வமாகவும் ஈடுபட்டு வரும், விழுப்புரம் மாவட்டம் நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் முருகையனைச் சந்தித்தோம். அவருடைய தோட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்றார். அங்கே வாழையும், வெண்டையும் வளர்ந்திருந்தன. அவற்றையெல்லாம் நமக்குக் காட்டியபடியே தனது விவசாய அனுபவங்களை நம்மிடம் கூறினார்.
“விவசாயம் தான் எங்கள் பரம்பரை வாழ்வாதாரம். எங்கள் குலத்தொழில். என்னுடைய தாத்தா, அப்பா காலத்திலிருந்தே விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்குச் சுமார் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. சிறு வயதில் படிக்கும் காலத்தில் அப்பாவுடன் தோட்டத்திற்குச் சென்றுள்ளேன். ஆனால், விவசாய வேலையெல்லாம் செய்தது இல்லை. படித்து முடித்த பின்னர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த பின்னர் தோட்டத்தின் பக்கம் கூடச் சென்றதில்லை.
இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். பணியில் இருந்த போது அலுவலகம், கூட்டம், அலுவல் சார்ந்து பல இடங்களுக்குச் செல்வது, பலரைச் சந்திப்பது என்று நாள் முழுவதும் பரபரப்பாக இருப்பேன். ஆனால், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், வீட்டிலேயே இருப்பது மிகவும் கடினமாக இருந்தது.
அப்போது தான் தோட்டத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். முதலில் பொழுதுபோக்கிற்காகச் சென்றேன். நாளடைவில் அதுவே விவசாயத்தின் மீதான ஆர்வமாக மாறிவிட்டது. கிராம நிர்வாக அலுவலர் வேலை என்பது பரபரப்பானது. அந்தப் பணியில் பலருக்கு நான் பதில் சொல்ல வேண்டும். மேலதிகாரிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். ஆனால், விவசாயத்தில் அப்படி எதுவும் இல்லை. அப்படியே போகப்போக விவசாயத்தில் எனக்கு ஒரு மன அமைதியும் நிறைவும் கிடைத்தது’’ என்றவர், வாழைத் தோப்புக்குள் ஆங்காங்குப் பதிக்கப்பட்டிருந்த குழாய்களைக் நம்மிடம் காட்டினார்.
“தற்போது இருக்கும் சூழலில் மழை சரியாக இல்லை, நிலத்தடி நீரும் இல்லை. அதனால், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே தான் நீரை வாய்க்கால் மூலம் கொண்டு செல்லாமல், கொஞ்சம் செலவு செய்து, இப்படி நிலத்திற்கு அடியில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் பயிர்களுக்குப் பாசனம் செய்கிறேன். இதனால், வாய்க்காலில் தேவையில்லாமல் உறிஞ்சப்படும் நீர் மிச்சமாகிறது. விரைவாகவும் பயிர்களைச் சென்றடைகிறது.
மேலும், வாய்க்காலில் நீர் பாய்ச்சும் போது நீர் வீணாவதுடன், வாய்க்காலில் வளரும் புற்களையும் வாரம் ஒருமுறை சுத்தம் செய்தாக வேண்டும். இப்படிப் பல வேலைகள் மிச்சப்படுவதுடன் நீரும் சிக்கனமாகிறது. அதனால் மின்சாரமும் சிக்கனமாகிறது. எனவே, தற்போதுள்ள சூழலில் விவசாயிகள் இப்படிக் குழாய்களைப் பதித்து நீரைக் கொண்டு செல்லுதல், சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் ஆகிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திச் சிக்கனமாக நீரைச் செலவழித்து விவசாயத்தில் பலன் பெற வேண்டும்.
என் தந்தை காலத்தில் நெல், கரும்பு, வாழை முதலியவற்றைப் பயிர் செய்து வந்தனர். மேலும், தக்காளி, மிளகாய், வெண்டை, பாகற்காய் முதலிய தோட்டப் பயிர்களையும் பயிர் செய்தனர். நான் தற்போது வாழை, வெண்டை ஆகியவற்றைப் பயிர் செய்துள்ளேன். வாழையில் கற்பூரவள்ளி, பூவன் ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளேன். வாழையை நட்டது முதல் ஒரு வருடத்திற்கு நான் பார்த்துக் கொள்வேன்.
அதன் பின்னர், குலைகள் வரத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு மரத்திற்கு இவ்வளவு என்று கணக்கிட்டுத் தோப்பில் இருக்கும் மொத்த மரங்களையும் வியாபாரியிடம் குத்தகைக்கு விட்டு விடுவேன். அப்படி விட்டு விட்டால் தண்ணீர் மட்டும் தான் நாம் கொடுக்க வேண்டும். மற்றபடி அறுவடை முடிந்து நமது நிலத்தைச் சுத்தம் செய்து தருவது வரை எல்லாமே அவர் பொறுப்பு. காய், பழம், இலை என எல்லாவற்றையும் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
முன்னர் இந்தப் பகுதியில் எல்லோரும் சர்க்கரைவள்ளிக் கிழங்கைப் பயிர் செய்தோம். ஆனால், எல்லோரும் அதையே பயிர் செய்த காரணத்தால் சரியான விலை கிடைக்கவில்லை. விவசாயத்தைப் பொறுத்தவரை ஒரு பகுதியில் ஒரு விவசாயி பயிரிடுவதையே எல்லோரும் பயிரிடுகின்றனர். அதனால் அந்த விளை பொருளுக்கு விலை இல்லாமல் போய் விடுகிறது. விவசாயிகள் பயிர்களை மாற்றி மாற்றிப் பயிரிட வேண்டும். ஆளுக்கொரு பயிராகச் செய்யும்போது அந்தப் பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். அதனால், விவசாயிகளுக்கும் கட்டுபடியாகும்.
விவசாயியிடமிருந்து 10 ரூபாய்க்கும் குறைவாக வாங்கும் ஒரு கிலோ வெண்டைக்காயை, கடையில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதில் இடைத்தரகர்கள் வாழ்கின்றனர். விவசாயிகள் சாகிறார்கள். எனவே, நெல் மற்றும் உளுந்துக்கு அரசு ஆதார விலையை நிர்ணயம் செய்வது போல் எல்லா விவசாய விளை பொருள்களுக்கும் ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகள் ஓரளவாவது நிம்மதியாக வாழ முடியும். அல்லது விவசாயியே தன்னுடைய பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை அவனுக்குக் கொடுக்க வேண்டும்.
நான் அன்றாடம் விவசாயத்திற்காகச் செலவழிக்கும் சிறு சிறு தொகையைக் கூட எழுதி வைத்துக் கொண்டே வருவேன். அறுவடைக்கு ஆகும் செலவு வரை எல்லாவற்றையும் சரியாக எழுதி வைத்துக் கொள்வேன். இப்படிச் செய்தால் தான், இறுதியில் அறுவடை முடிந்ததும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, இந்தப் பயிரில் கிடைத்த மொத்த வருமானம் எவ்வளவு, செலவுகள் போக இலாபம் எவ்வளவு அல்லது நஷ்டம் எவ்வளவு என்பதை நாம் அறிய முடியும். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். எதுவுமே தெரியாமல் விவசாயத்தில் நஷ்டம் நஷ்டம் என்று சொல்லுவதை விட, இப்படி எல்லாவற்றையும் கணக்கு வைத்துக் கொண்டால் எதில் நஷ்டம், எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தற்போதுள்ள சூழலில் விவசாயிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை மின்பற்றாக்குறை. மின்பற்றாக்குறை காரணமாக இருக்கும் நீரையும் பாய்ச்ச முடியவில்லை. எனவே, அரசு விவசாயிகளுக்கு, விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் விவசாயம் காப்பாற்றப்படும், விவசாயிகளும் காப்பாற்றப்படுவார்கள்’’ என்றார்.
மு.உமாபதி